சமூக மாற்றத்திற்கான புரிந்துணர்வு | தினகரன் வாரமஞ்சரி

சமூக மாற்றத்திற்கான புரிந்துணர்வு

ஆட்சி மாற்றம் என்பது  நாட்டில் நன்மைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே  மக்களின் எதிர்பார்ப்பாகும். ஆயினும்  பல தசாப்தங்களாகவே  உள்நாட்டு யுத்தம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் நாடாகவே  இலங்கை இருந்து வந்திருக்கின்றது.  இருப்பினும்  சமூகம் மற்றும்   பொருளாதார ரீதியில்  வளர்ச்சிக் கண்ட ஒரு நாடு என்ற  இலக்ைக  நமது நாடும்    எட்ட வேண்டும் என்பதே எம்மவரின்  எதிர்பார்ப்பாகும். மக்களின்  அந்த எதிர்பார்ப்புகளை நோக்கி,  நாடு  நகர ஆரம்பித்திருக்கிறதா  என்ற எண்ணம்  ஏற்படும்  சில  நகர்வுகள் புதிய ஜனாதிபதியின் வருகையைத் தொடர்ந்து,  நாளுக்கு நாள்  நடந்தேறி வருவதை   காணக்கூடியதாக இருக்கின்றது.  அவ்விடயங்கள் பற்றிய ஒரு பார்வையாகவே இக்கட்டுரை அமைகின்றது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவுகூருவது என்பது  பெரும்  ஆறுதலை தருகின்ற விடயமாக இருந்த போதும். கடந்த காலங்களில் அதனை அடைவது என்பது  பல தடைகளை தாண்ட வேண்டிய இக்கட்டான இலக்காகவே அது இருந்து வந்தது.  தமிழ் மக்களின்  பெரும் ஆதரவைப் பெற்று ஆட்சிப் பீடம்  ஏறிய நல்லாட்சியின் கீழும்  அதில்  பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் அச்சங்களுக்கும் மத்தியிலேயே   தமது உறவுகளுக்கான அஞ்சலியைச் செலுத்த வேண்டியிருந்தது.  கடந்த கால அந்த கசப்பான  அனுபவங்கள் ஏற்பட்ட ஆட்சி மாற்றமானது   தெற்கின்  கடும்போக்காளர்களின் கையைப் பலப்படுத்தியிருக்கும் பின்னணியில் தமது  உறவுகளின் நினைவை அனுஷ்டித்தல் என்பது  நினைத்துக்கூடப் பார்க்க முடியாது போய்விடும் என்பதே பெரும்பாலும் தமிழ் சமூகத்தின்  யூகிப்பாக இருந்தது வந்தது.

அவர்களின் அந்த எண்ணத்தை  உறுதிப்படுத்தும்  வகையில் அமைந்ததாகவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக  ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியாகிய  கமல் குணரட்னவின் பதவியேற்பு அமைந்தது. ஆயினும்  பல வருடங்களாக  போர்க்களத்தில் செயற்பாட்டு ரீதியாகவே  இருந்து வந்த, அதே நேரத்தில்  முகமாலையின் மிக முக்கியமான போர்முனையின் பொறுப்பதிகாரியாகவும் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் அரச படைகளின் தலைமை அதிகாரியாகவும் செயற்பட்டதன் மூலம் உண்மையான போர் அனுபவங்களை பெற்றுள்ள பாதுகாப்புச் செயலாளர்  கமல் குணரட்ன, 'தமது உறவுகளை  நினைவுகூர அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்க துயிலும் இல்லங்களுக்கு வரும் சொந்தங்களுக்கு எந்த அசௌகரியத்தையும் ஏற்படுத்த வேண்டாமென்ற  கடுமையான உத்தரவை பிறப்பித்ததுடன், அதனை நடைமுறைப்படுத்தி நினைவேந்தலுக்கு வந்த உறவுகளை  ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்'.

எந்த தடையுமின்றி, வடக்கிலும் கிழக்கிலும்  நினைவேந்தல் நடந்தேறியது பற்றி ஊடகம் கமல் குணரட்னவை வினவிய போது, 'அவர்கள் தம்மை விட்டுப் பிரிந்த உறவுகளின் நினைவாக அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கவே ஒன்றுகூடினார்கள். அதன் போது, சட்டத்தையோ ஒழுங்ைகயோ மீறும்படியான எந்தவிதமான செயற்பாடுகளிலும் அவர்கள் ஈடுபடவில்லை. ஆகையால் அவர்களின் நியாயமான அச்செயற்பாட்டுக்கு  எமது தரப்பிலிருந்து எந்த பிரச்சினையும் ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை' என தெரிவித்தார்.

உண்மையிலேயே இதனை புத்திசாலித் தனமாக கையாண்டதால் இரு தரப்பினதும் கௌரவம் காப்பாற்றப்பட்டதுடன்  நாட்டின் நற்பெயருக்கு  களங்கம் ஏற்படுவதையும் தவிர்த்துக் கொள்ளப்பட்டது.  சிங்கள தமிழ் எனும் பிரிவினைக்கு அப்பால் நாம் அனைவரும் இந்த தேசத்தின் மக்களே என்ற  எண்ணத்துடன் செயற்பட முடியுமாயின்  எதிர்காலத்திலும் இத்தகைய சுமூக நிலையை பேணுவதின்  சாந்தியப்பாட்டையே இந்த நிகழ்வு எமக்கு எடுத்துரைக்கின்றது.  அந்த வகையில்  ஆட்சி மாற்றத்தின் பின்னரான  ஒரு முன்னேற்றக்கரமான நகராகவே இது அமைகின்றது.

நாட்டை நற்திசையில் எடுத்துச் செல்ல வேண்டுமாயின் காலம் காலமாக இருந்துவரும் தடைகளை அப்புறப்படுத்துதல் அவசியமாகும்.  அந்த வகையில் குறிப்பாக நகரங்களை அசிங்கப்படுத்துவதோடு நகரங்களை நாடி வரும்  பொதுமக்களுக்கு  பாரிய அசெளகரியத்தை ஏற்படுத்தும்  யாசகர்களின் செயற்பாடுகளையும்  கட்டுப்படுத்த வேண்டியது இன்றைய  கட்டாய தேவையாக  இருக்கின்றது.  அதற்கு இருவிதமான உத்திகளை கையாளலாம். அதாவது சமூகத்தில்  யாசகர்களின் எண்ணிக்ைக அதிகரித்து வருவதற்கான சமூகம் மற்றும்  பொருளாதார காரணிகளை இனங்கண்டு அதற்கு நீண்டகால மற்றும் குறுகிய கால தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதன் மூலம்  புதிதாக யாசகர்கள்  உருவாவதை மட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும். தமது  சீவியத்தை நடத்தும் மார்க்கமாக யாசகத்தை எதனால் எவ்வாறான சமூக பின்னணியைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பதை அறிந்து, அதற்கான  நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பதே இப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வாக அமையும்.  மறுபுறத்தில்  யாசகர்களை வைத்து தமது பிழைப்பினை நடத்தும் யாசகத்தை வியாபாரமாக  மேற்கொண்டு வரும்  ஒரு செயற்பாடும் சமூகத்தில் இருந்து வருவதால் அதனை சரியான முறையில் இணங்கண்டு அதற்கான  பரிகாரத்தை  பெற்றுக் கொடுப்பதன் மூலம்  உண்மையான  யாசகர்களுக்கு அப்பால்  லாபமீட்டும் நோக்கில் யாசகத்தை தொழிலாக  முன்னெடுக்கும் செயற்பாட்டை  தடுப்பதற்கான  சட்ட மற்றும் சமூக நடவடிக்கைகளை  செயற்படுத்த வேண்டும்.  தற்காலிக நடவடிக்ைகயாக தலைநகரில் காணப்படுகின்ற யாசகர்களை  முகாம்களுக்குள்  முடக்கப்படுகின்றது என்ற சிலரின் விமர்சனத்திற்கு  உள்ளாகியிருப்பதால் அதற்கான  சிறந்ததோர் தீர்வை  கண்டறிய வேண்டிய தேவை  இன்று ஏற்பட்டிருக்கின்றது.

ஆரம்ப காலத்தில் உலகை வியக்க வைக்கத்தக்க சேரி குடிசைகளாக இருந்த ஒரு இடத்தை அழகிய நாடாக மாற்றும் செயற்பாட்டில்  வெற்றிக் கண்ட சிங்கப்பூர் இன்று உலகத்திற்கு  முன்னுதாரணமாக திகழ்கின்றது.  சிங்கப்பூரை பற்றிய கனவை கண்டவாறு அந்த இலக்ைக நோக்கிய பயணத்திற்காக  மேற்கொள்ளப்படும்  முயற்சிகள்  அடிப்படையற்ற விதத்தில் விமர்சிப்பதற்குப் பதிலாக உள்ளார்ந்த விடயங்களை அறிந்து அதற்கான  பரிகாரங்களை கண்டறிய வேண்டியது காலத்தின் தேவையாகும். 

அந்த வகையில் தமது  தலைநகராமாகிய கொழும்பை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்க  வேண்டுமென்பது அரச தலைமையின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. நகரத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கு   பாதகமாக இருந்துவரும் கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்ைகயை  கட்டுப்படுத்த வேண்டிய தேவை இன்று ஏற்பட்டிருக்கின்றது.  காரணம் தற்போது எமது நாட்டில் மொத்தமாக சுமார்  இருபத்தைந்து இலட்சம் நாய்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கின்றது. இத்தொகையில் முப்பது சதவீதம்  அதாவது ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் நாய்கள் கட்டாக்காலி நாய்களாக  இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு மிருகக் கடிகளுக்கு  ஆளானவர்களே அதிக பட்சமாக வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவுக்கு  உள்வாங்கப்பட்டதாக அறிக்ைககள் தெரிவிக்கின்றன. அந்த ஆண்டில் உள்வாங்கப்பட்ட மொத்த அவசர சிகிச்சை எண்ணிக்ைக 33.1  வீதமாக  அமைந்திருந்தது. வீதி விபத்துக்களால் அதே ஆண்டில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்வாங்கப்பட்ட எண்ணிக்ைக 15.9 சதவீதமாகும்.

நாய்க்கடி காரணமாக வருடாந்தம்  சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்ைக மூன்று லட்சத்துக்கு அதிகமாகவுள்ளது. அதேநேரம் நாய்க்கடி காரணமாக ஏற்படும் நீர்க்கடுப்பு (விசர்) நோய்க்கு  சிகிச்சை அளிப்பதற்காக வருடாந்தம் 592 மில்லியன் ரூபாவை அரசு செலவிட்டு வருகின்றது. அத்தோடு வருடாந்தம் ஏற்படும் 26 ஆயிரம்  வீதி விபத்துக்களுக்கு  கட்டாக்காலி நாய்களே காரணமாக இருக்கின்றது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

எமது நாட்டிலும் நாய்களின்  எண்ணிக் ைகயை கட்டுப்படுத்தும் செயற்பாடு நடைமுறையில் இருந்து வந்த போதிலும் 1994 ஆம் ஆண்டு  சந்திரிகா அம்மையானரின்  ஆட்சிகாலத்திலேயே  அச்செயற்பாடு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.  அதன் காரணமாக  நமது நாட்டின் கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்ைக கடந்த பல தசாப்தங்களாக அதிகரித்திருக்கின்றது.

அத்தோடு அது மேற்குறிப்பிட்ட  வைத்திய செயலவீனங்கள் மற்றும் வீதி விபத்துகள் ஆகியன அதிகரிப்பதற்கும் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. ஆகையால் நகரை அழகுபடுத்துவதோடு மேற்குறிப்பிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டுமாயின்  நாட்டின் நாய்களின் எண்ணிக்ைகயை அதிலும் குறிப்பாக கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கான   சிறந்த செயற்திட்டம்  தேவைப்படுகின்றது.  இவ்வாறான விடயங்களை மேற்கொள்வதன் மூலமே  நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கான  அடிப்படை நகர்வுகளை ஏற்படுத்த முடியும். அதற்கு  மக்கள் மத்தியில்  விழிப்புணர்வும் புரிந்துணர்வும் ஏற்படுதல் அவசியம்.   

ரவி ரத்னவேல்

Comments