வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைகள்; கிழக்காசிய சமநிலையை பாதிக்குமா? | தினகரன் வாரமஞ்சரி

வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைகள்; கிழக்காசிய சமநிலையை பாதிக்குமா?

வட கொரியாவின் நடவடிக்கைகள் மீண்டும் ஒரு அரசியல் அதிர்வலையைத் தொடக்கியுள்ளது. இது கடந்த காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது, அதீதமான எச்சரிக்கையை அதன் எதிரி நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் சர்வதேச அரசியல் தளத்தில் புதிய இராணுவ அரசியல் போக்கினை வெளிப்படுத்தியுள்ளது. அதற்கான அடிப்படைகள் பிற சிறிய தேசங்களுக்கும் அவற்றின் அணுகு முறைகளுக்கும் ஒரு உந்துதலை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அமெரிக்க வல்லரசுக்கு அதிக நெருக்கடியாக மாறி வருகிறதையும் அதன் உலகளாவிய ஆதிக்கத்திற்கு சவாலானதாகவும் அமைந்து வருவது புதிய உலக அரசியல் விடயமாக அமைந்துள்ளது. இக்கட்டுரையும் வடகொரியாவின் புதிய ஏவுகணைச் சோதனையும் அமெரிக்காவின் அரசியல் போக்கில் காணப்படும் அம்சத்தையும் தேடுவதாக அமையவுள்ளது.  

வடகொரியா ஆண்டின் இறுதிப் பகுதியில், பல ஏவுகணைச் சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும், அவை நவீன தொழில்நுட்பம் சார்ந்தவை எனவும் அமெரிக்கா தெரிவித்து வருகிறது. அதேநேரம் வடகொரியாவின் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகள் அதிகரித்திருப்பதுடன் அவற்றில்  ரொக்கற் வகை மாதிரிகளும் அடங்கியிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. தனது உளவு சேவை விமானங்களதும்  சற்றலைய்ட் மூலமான ஒளிப்படங்கள் மூலமும் அதனை உறுதிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளது. அனேகமான ஒளிப்படங்களை அமெரிக்கா வெளியிட்டும் உள்ளது. இவற்றின் மூலம் அமெரிக்கா, வடகொரியாவின் நடவடிக்கைகளை அவதானித்து வருவதுடன் தொடர்ச்சியாக தகவல்களை வெளிப்படுத்தி வருகிறது.  

இதனைக் கண்காணிப்பதற்காக தனது நான்கு உளவு விமானங்களை கொரியக் குடாவுக்கு அனுப்பியதுடன், அவை தொடர்ச்சியாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதனை தென் கொரியா உறுதி செய்துள்ளது. ஈ8சீ ஆர்-கீயூ-4 ஆர்.சீ-135 மற்றும் ஆர்.சீ135 கோப்ரா ஆகிய உளவு விமானங்கள் வடகொரியா மீதான உளவு வேலையை மேற்கொண்டு வருகின்றன. இது வடகொரிய அதிபரது செய்திக்கு பதிலாக அமைய வாய்ப்புள்ளது. குறிப்பாக இம்மாத ஆரம்பத்தில் அமெரிக்காவுக்கு கிறிஸ்மஸ் பரிசு ஒன்று இருப்பதாக அறிவித்திருந்தார். அது பற்றி பசுபிக்குக்கான அமெரிக்க விமானப்படைத் தளபதி குறிப்பிடும் போது நீண்டதூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக அது இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.  

மறுபக்கத்தில்,  வடகொரியாவுடனான உறவைத் துண்டிக்குமாறு அமெரிக்கா ரஷ்யாவிடம் கோரியுள்ளது. அதற்கு ரஷ்யா தெளிவான பதில் ஒன்றை அளித்துள்ளது. வடகொரியாவின் நிலைக்கு அமெரிக்காவே காரணம் எனத் தெரிவித்திருப்பதும்,  வடகொரியா தனது பாதுகாப்பினை பேணுவதற்கு ஏவுகணைச் சோதனையை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.  

அவ்வாறே அமெரிக்கா மேலும் ஒரு முயற்சியில் இறங்கியுள்ளது. அதாவது வடகொரியாவுடனான பேச்சுவார்த்தைக்கு காலக்கெடு எதனையும் விதிக்கவில்லை என்ற செய்தியை அமெரிக்காவின் சிறப்பு தூதுவர் ஸ்டீபன் பீகன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் இனிமேல் இல்லை என்ற வடகொரியாவின்  அறிவிப்பு வெளியானதும்,  அமெரிக்கா மேற்கண்ட பதிலை அளித்துள்ளது. அணுவாயுதம் தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஒரு போதும் காலக்கெடு விதிக்கவில்லை என்ற செய்தியானது அமெரிக்காவின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றமாகக் கருதப்படுகிறது.  

அது மட்டுமன்றி மூடிய ஆயுதத் தொழிற்சாலைகளை வடகொரியா மீள ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதற்கு ஆதாரமாக செயற்கைகோள் படங்களை வெளியிட்டுள்ளது. அண்மையில் வடகொரியா திறந்து வைத்த புதிய நகரத்தினையே அமெரிக்கா காட்சிப்படுத்துவதாக வட கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.  

ஆனாலும் அமெரிக்காவின் எச்சரிக்கைகள் ரஷ்யாவினது பதில்கள் வடகொரியத் தலைவர் விடாப்பிடியான பரிசோதனைகள் வடகொரியாவின் நகர்வுகள் புதிய உத்திகளாக அமைந்திருப்பதை தெளிவாக உணர்த்துகிறது.  

ஒன்று பொருளாதாரத் தடைக்குப் பின்பும் அதன் ஏவுகணைச் சோதனைகள் நிறுத்தப்படவில்லை என்பது புதிய தகவலாகத் தெரிகிறது. அதாவது அமெரிக்காவின் தடைகள் அதன் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதாகும். ஏற்கனவே பலவீனப்பட்டுள்ள தேசத்தின் பொருளாதாரம் முழுமையாக உலகப் பொருளாதாரத்தில் தங்கியிருக்கவில்லை என்பதுவும் அது கூட அமெரிக்காவில் அதிகம் தங்கியிருக்கவில்லை என்பதுவும் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். அல்லது வடகொரியா பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு விட்டது. அல்லது மேற்குலக ஊடகங்கள் குறிப்பிட்டது போல் வடகொரிய பொருளாதாரம் ஆபத்தான நிலையில் இருக்கவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.  

இரண்டாவது, வடகொரியாவின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அமையாது ஏற்றுமதியைத் இலக்கு வைப்பதாக தெரிகிறது. குறிப்பாக ஆயுத சந்தையை வளர்ந்த நாடுகள் ஆதிக்கம் செய்வதுபோல  வடகொரியாவும் அதில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களை உருவாக்க திட்டமிடுவதாக தெரிகிறது. குறிப்பாக மேற்காசியா மற்றும் ஆசியக் கண்டத்து நாடுகள் அநேகமானவற்றுக்கு கிழக்காசியாவே ஆயுத சந்தையாக உள்ளது. அதனால் கிழக்காசிய ஆயுத சந்தையை இலக்கு வைத்து வடகொரியா செயல்படத் தொடங்கியுள்ளதை காணமுடியும்.  

மூன்றாவது, தொழில்நுட்ப ரீதியாக ஆயுத தளபாட உற்பத்தியைப் பெருக்கும் நடவடிக்கையில் வடகொரியா ஈடுபட்டுள்ளதை அமெரிக்கா பலதடவை எச்சரித்துள்ளது. அவ்வாறே அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு விடயத்தை தகர்க்க பாரிய ஆயுதம் ஒன்றினை வடகொரியா மேற்கொள்வதாக ஜப்பான் தெரிவித்திருந்தது. இந்த ஆண்டின் நடுப்பகுதியில் அத்தகைய நகர்வை செய்ததாக தனது புலனாய்த்துறை தெரியப்படுத்தியதாக ஜப்பான் எச்சரித்திருந்தது. குறிப்பாக தென்கொரியாவிலும் ஜப்பானிலும் ஏவுகணைத் தடுப்பு ஆயுதமான தாட் ஏவுகணையை அமெரிக்கா ஏற்கனவே நிறுத்தியுள்ளது. அதனை தகர்க்கும் தொழில் நுட்பத்தினை ஏற்கனவே ரஷ்யா தயாரித்துள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு வடகொரியா முயல்வதாக ஜப்பான் எச்சரித்திருந்தது. எனவே, இவை அனைத்தும் இப்பிராந்தியத்திற்கு ஆபத்தானதாக அமைய வாய்ப்பாகவுள்ளது.  

நான்கு அமெரிக்காவினது இராணுவ நிலைகளை இலக்கு வைத்தும் அமெரிக்க நகரத்தை இலக்கு வைத்தும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா உருவாக்கியுள்ளதாக அமெரிக்க புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதனாலேயே சோவியத் யூனியனுடன் அதிக உடன்படிக்கைகளை அமெரிக்கா 1990களில் மேற்கொண்டது. மீண்டும் அத்தகைய நிலை தற்போது வடகொரியாவால் ஏற்படும் என்ற அச்சம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.  

எனவே, இரு நாட்டுக்குமான ஆயுதப் போட்டியும் சமாதான உரையாடலுக்கான முறிவும் அமெரிக்காவுக்கே அதிக நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை வளர்ச்சியானது அதன் இராணுவ அரசியலின் வலிமையை அதிகரிக்கச் செய்துள்ளது. கிழக்காசியாவில் காணப்படும் இராணுவ அரசியல் சமநிலை வடகொரியாவால் புதிய போக்கின ஏற்படுத்தியுள்ளது.    

கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்  

Comments