![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/01/26/02col-aditi111722201_8008084_25012020_VKK_CMY.jpg?itok=ebNGnz1X)
பயம் தான் என்னை இயக்குகிறது என்று 'சைக்கோ' படத்தில் நடித்த அனுபவம் தொடர்பாக அதிதி ராவ் தெரிவித்துள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சைக்கோ'. தன்வீர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தப் படத்தில் நடித்த அனுபவம் தொடர்பாக அதிதி ராவ், மணிரத்னத்துடன் பணிபுரிந்ததில் என் கனவு நனவனாது. சினிமாவைப் பற்றிய என் புரிதலை அவர் மாற்றினார். மீண்டும் வேண்டும் என்பது போன்ற அனுபவம் அது.
மணிரத்னம் சில இயக்குநர்களைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொன்னார். அதில் ஒருவர் மிஷ்கின். 'சைக்கோ' படத்தில் நடிக்க அவர் என்னைத் தொலைப்பேசியில் அழைத்து தன்னை அறிமுகம் செய்துகொண்டு எனது கதாபாத்திரம் பற்றிச் சொன்னார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மிக ஆர்வமாக இருந்தேன்.
ஒரு நடிகையாக சில சவால்களை எதிர்கொள்வோம். மிஷ்கின் போன்ற இயக்குநர்களுடன் பணியாற்றும்போது, என்னால் இதை நடிக்க முடியுமா என்று அடிவயிற்றில் ஒரு பயம் இருக்கும். அந்த பயம் தான் என்னை இயக்குகிறது.
மிஷ்கின் நன்றாகப் படித்தவர். மனித உளவியலின் ஆழம் வரை செல்வார். அவரது காட்சி வர்ணனை உருவகமானது, நம்மை நிறையச் சிந்திக்க வைக்கும். அவர் என்னிடம் கதையைச் சொல்லும்போது அவர் எதை உருவாக்க நினைக்கிறார் என நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அவரது திரைப்படங்கள் உங்களை அசவுகரியமாக உணரச் செய்யும் ஓவியம் போல. அவரது கதைகள் வன்முறையானவை, ஆனால் அதில் ஒரு ஓவியத்தின் நுணுக்கம் இருக்கும். என்னை அசவுகரியமாக்கும் கதாபாத்திரங்கள் நான் நடிக்க விரும்புகிறேன்.
சில கதாபாத்திரங்களை நடிக்கும் போது நமக்குக் கிடைக்கும் அனுபவத்தால் அந்த கதாபாத்திரம் நம் ஆழ்மனதில் தங்கிவிடும். அது முன்னால் ’காற்று வெளியிடை’ படத்தில் நடந்தது. இப்போது ’சைக்கோ’வில் நடந்திருக்கிறது.
திரையில் பலவீனமாகக் காட்டிக்கொள்வது உங்களுக்குச் சவுகரியமாக இருந்தால் அதுதான் உங்களது பெரிய பலம். அந்த உணர்ச்சியை உணர முடிவதுதான் வலிமையான, தைரியமான விஷயமாக நான் நினைக்கிறேன். கையில் கத்தியைப் பிடித்துத்தான் வலிமையைக் காட்டவேண்டும் என்றில்லை. வெளிப்படையாக இருப்பது தான் துணிச்சலான விஷயம்” என்று தெரிவித்துள்ளார் அதிதி ராவ்.