அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது முதல் வெளிநாட்டு விஜயத்தினை ஐரோப்பா நோக்கி நகர்த்தியுள்ளார். யூன் 9- முதல் 16 வரையான காலப்பகுதியில் பல மகாநாடுகளையும் சந்திப்புகளையும் மேற்கொள்ளும் நோக்குடன் ஐரோப்பாவுக்கு சென்றுள்ளார். ஜோ பைடனின் ஐரோப்பிய விஜயம் அதிக இராஜதந்திர ரீதியான முக்கியத்துவத்தை கொண்டதாக தெரிகிறது. அதனை அவரது ருவிட்டர் பதிவுகளே உறுதிப்படுத்துகின்றன. அதாவது ஜனாதிபதியான பின் பிரித்தானியா ஊடாக ஐரோப்பாவுக்குள் முதல் விஜயத்தை மேற்கோண்டுள்ளேன். ஜனநாயகம் அதிக சவால்களை சந்தித்துள்ள ஐரோப்பாவுக்கு இந்த வாரம் புதிய சகாப்தமாகும் என்பதைநான் அறிவேன். நாங்கள் மாற்றத்தை நிறுவிக்காட்டுவோம் என்றார் ஜோ பைடன். இக்கட்டுரையும் ஜோ பைடன் எட்டப்போகும் புதிய சகாப்தத்தை தேடுவதாக உள்ளது.
முதலாவது ஜூன்-10 இல் ஜோ பைடன் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனை சந்தித்தார். சந்திப்பு அதிக முக்கியத்துவம் உடையதாக அமைய வாய்ப்புள்ளது. இருநாட்டுக்கும் இடையிலான உறவினை பலப்படுத்தும் நோக்குடன் செயல்படும் ைபடன் இரு நாட்டுக்குமிடையிலான காலநிலை மாற்றம், வர்த்தகம், வட அயர்லாந்து தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் பற்றி கலந்துரையாடியதாக தெரியவருகிறது. குறிப்பாக, ஐரோப்பிய யூனியனிலிருந்த பிரித்தானியா வெளியேறிய பின்னர் பிரித்தானியாவுடனான வர்த்தக உறவை அமெரிக்கா அதிகம் முதன்மைப்படுத்த விருப்பம் கொண்டிருந்தது. அதற்கான வாய்ப்பு தொடர்பாக முன்னாள் தலைவர்கள் பல தடவை உரையாடி உள்ளார்கள். பிரித்தானியாவின் முதலீடுகளையும் சந்தை வாய்ப்புகளையும் ஐரோப்பாவுக்குள்ளோ அல்லது சீனாவுடனோ மேற்கொள்ளவிடாது தடுக்கும் நோக்கத்தினை ஆரம்பம் முதலே அமெரிக்கா பின்பற்றி வந்தது. எனவே இச்சந்திப்பு இருநாட்டுக்குரிய பாரம்பரிய உறவை கட்டியெழுப்புவதுடன், சீனா, ரஷ்யாவுக்கு எதிராக ஒரு கூட்டு பாதுகாப்பினை அரசியலிலும், பொருளாதாரத்திலும், இராணுவத்திலும் கட்டமைப்பதையே அவர் புதிய சகாப்தம் என குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது ஜீ7 மாநாட்டில் கலந்த கொள்கின்ற ஜோ பைடனுக்கு உலகளாவியரீதியில் எழுந்துள்ள பாரிய கொரோனா பரவலை எதிர்கொள்ளுதல் அதனால் எற்பட்டிருக்கின்ற பொருளாதார சவாலை கையாள்வது என்பது பிரதான நிகழ்ச்சி நிரலாகவே தெரிகிறது. ஜி7 நாடுகளிடையில் வூஹான் வைரஸ் பற்றிய உரையாடலை அதிகரிக்கவும் சீனாவுக்கு எதிரான அணியை உருவாக்கவும் திட்டமிட்டுள்ள பைடன் பொருளாதார அடிப்படையில் ஜீ7 நாடுகளுக்கு தலைமைதாங்கும் ஆற்றலை வெளிப்படுத்த முயலுகின்றதைக் காணமுடிகிறது. அந்நாட்டு தலைவர்களுடன் இருபக்க உரையாடல்களை வலுப்படுத்தி உறவினை மீளமைக்க திட்டமிட்டுள்ளதைக் காணமுடிகிறது. அத்துடன் காலநிலை மாற்றத்தை எதிர் கொள்வது பற்றியும், சீனாவின் பொருளாதார எழுச்சி, மற்றும் ரஷ்யாவின் இராணுவ வலிமை தொடர்பிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மிகப்பிரதான உரையாடல் அம்சங்களாக தெரிகிறது. ஜி7 தலைமைகளுடனான சந்திப்பு இந்நாடுகளுடனான வர்த்தக கூட்டினை பலப்படுத்துவதும் ஒரே அணியில் இணைந்து சீனாவின் பொருளாதார ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதும் பற்றிய உபாயங்களை வகுப்பதாகவே அமைய வாய்ப்புள்ளது.
மூன்றாவது. அமெரிக்க ஜனாதிபதி பைடனின் நேட்டோ சந்திப்பும் நிகழவுள்ளது. 2018ஆம் ஆண்டுக்கு பின்னர் பைடன் இத்தகைய மாநாட்டில் நேட்டோ நாடுகளை சந்திப்பது இதுவே முதல்தடவையாகும். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் காலத்தில் நேட்டோ நாடுகளுடனான விரிசலடைந்துள்ள அமெரிக்க உறவினை சரி செய்வதும், ரஷ்யாவின் இராணுவ வளர்ச்சியை பிராந்திய ரீதியில் எதிர்கொள்வதும் முக்கிய விடயமாக அமையவுள்ளது., சீனாவின் சைபர் தாக்குதல் நெருக்கடி, ரஷ்யாவின் இராணுவ விரிவாக்கம், மற்றும் ஆப்கானிலிருந்த அமெரிக்கத் துருப்புக்களை விலக்கி கொள்ளுதல் போன்ற மூலோபாய ரீதியான சவால்களை எதிர்கொள்வது பற்றிய உரையாடல்களாகவும் அமைய இருக்கிறது. இதில் துருக்கிய ஜனாதிபதி எர்டோகனுடனான சந்திப்பு முக்கியமான நேட்டோ விவகாரமாக பார்க்கப்படுகிறது.
அது மட்டுமன்றி துருக்கியின் இராணுவ வளர்ச்சியும் ரஷ்யாவுடனான நெருக்கமும் இச்சந்திப்பில் அதிக முக்கிய விடயமாக அமைய வாய்ப்புள்ளது.
நான்காவது அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்குமிடையிலான வர்த்தக மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தமான மாநாடு ஒன்றை பைடன் ஏற்படுத்தியுள்ளார். 2014இற்கு பின்னரான முதற்சந்திப்பாக இது அமைகிறது. உற்பத்தி சார்ந்த ஏற்றுமதி இறக்குமதி மட்டுமல்லாது தொழில்நுட்ப பரிமாற்றங்களையும் அவை தொடர்பான ஏற்றுமதி இறக்குமதி நடைமுறைகளையும் மீள அமைப்பதோடு வர்த்தக நடவடிக்கை சார்ந்த நீண்ட இடைவெளியை நிரப்புவதாகவும் அமெரிக்க - ஐரோப்பிய யூனியன் மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது.
ஐந்தாவது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான சந்திப்பொன்றினை ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார். இச்சந்திப்பு பல்வேறுபட்ட எதிர்பார்ப்புக்களை கொண்டிருந்தாலும் உக்ரைன் விவகாரம், அமெரிக்கா மீதான தேர்தல் தலையீடு, ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவாலினி தொடர்பான புட்டினது நடவடிக்கைகள் பற்றியதாக அமைவதோடு உலகளாவிய ரீதியல் இரு நாட்டுக்கும் இடையில் நிலவும் ஆயுதப் போட்டியினை பற்றியதாக அமைய வாய்ப்புள்ளது.
எதுவாயினும் அமெரிக்க ஜனாதிபதியின் ஐரோப்பிய விஜயம் ஜனநாயகத்திற்கான புதிய சகாப்தத்தை உருவாக்கப் போகிறது என்பதை ஜோ பைடன் முதன்மைப் படுத்திவருகிறார். அத்தகைய ஜனநாயகம் என அவர் வலியுறுத்தும் விடயம் ஜனநாயகத்திற்கு விரோதமான சீனாவினதும் ரஷ்யாவினதும் நடைமுறையை மறைமுகமாக குறிப்பிடுவதாகவே தெரிகிறது. ஜனநாயகத்தின் பெயரால் உலகத்தை ஆளும் மேற்குலகத்திற்கு சவால் விடும் இரு தேசங்களும் ஜனநாயகத்திற்கு விரோதமான சக்திகள் என்பதை மறுக்க முடியாது. அதனாலேயே ஜோ பைடன் ஜனநாயகத்தை முதன்மை சுலோகமாக கையில் எடுத்துள்ளார்.. காரணம் ஐரோப்பாவுக்குள் நுழைந்ததும் பிரிட்டன் றோயல் இராணுவத்தை சந்தித்த போதும் ரஷ்யாவைக் கண்டித்திருந்ததும் கவனத்திற்குரியதாகும்.
எனவே ஜோ பைடனது ஐரோப்பிய விஜயம் மீண்டும் அமெரிக்க ஐரோப்பிய இணைப்பினைப் பலப்படுத்துவது. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் விட்ட தவறுகளை சரிசெய்து கொண்டு உலகளாவிய விரிவாக்கத்தை தக்க வைக்கவும் உறுதிப்படுத்தவும் முயல்கிறது. அதாவது ஒரு புதிய சகாப்தமாக தெரிகிறது. அதில் பிரதான எதிரியான ரஷ்யாவையும் சீனாவையும் எதிர் கொள்வதென்பது ஐரோப்பாவுடன் இணைந்து செயல்படுவதனாலேயே சாத்தியமாகுமென அமெரிக்கா கருதுகிறது. அதில் ஜி-7 மற்றும் நேட்டோ நாடுகளது அரவணைப்பும் உத்தியும் அடுத்துவரும் உலக மாற்றத்திற்கு வழியமைக்குமென ஜோ பைடன் கருதுகின்றார்.
நேட்டோவை பலப்படுத்தவதனூடாகவும், பிரிந்துள்ள நேட்டோ நாடுகளை ஒன்றிணைப்பதனூடகவும் கிழக்கு ஐரோப்பாவிற்குள்ளும் மேற்காசியா மற்றும் ஆசியக் குடியரசுகளுக்குள்ளும் ரஷ்யாவின் பலத்தை கட்டுப்படுத்த ஜோ பைடன் திட்டமிடுகிறார். உக்ரைன் விவகாரத்தை முன்னிறுத்துவதனூடாக ரஷ்யாவின் எல்லையையும் நோக்கி நகர முடியுமெனவும் அதன் மூலம் பொருளாதார நெருக்கடியை கொடுக்கலாமெனவும் ஜோ பைடன் கருதுகிறார். எனவே இவரது நேட்டோ சந்திப்பு பிரதான எதிரியான ரஷ்யாவையும் புட்டினையும் தோற்கடிப்பதற்கான நகர்வாகவே தெரிகிறது. அதன் மூலம் ஒரு போரை ரஷ்யாவுடன் உக்ரையின் மேற்கொள்ளும் உத்தியும் காணப்படுகிறது.
எனவே, ஜோ பைடனின் ஐரோப்பிய விஜயம் மீளவும் மேற்குலகத்தின் அதிகார பலத்தை தக்கவைப்பதற்கான உத்திகளை அதிகம் கொண்டதாகவே தெரிகிறது. ஐரோப்பாவுடன் பலமான கூட்டை வைத்துக் கொண்டு ரஷ்யாவையும் சீனாவையும் எதிர் கொள்வதுடன் தவிர்க்க முடியாது நேட்டோவையும் ஜி-7 ஐயும் பலப்படுத்துவதை உத்தியாக கொண்டுள்ளது. அதே நேரம் உக்ரையினை மையப்படுத்தி ஒரு போரை தயார் செய்வது அல்லது ரஷ்யா ஒரு போரை தொடக்கினால் அதனை எதிர் கொள்வது என்ற இரட்டை உத்தியுடனும் பைடனின் ஐரோப்பிய விஜயம் அமைந்துள்ளது. மொத்தத்தில் அரசியல் பொருளாதார இராணுவ இலக்குகளை அடைவதற்கும் ரஷ்யா சீனாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தவும் ஜனநாயகத்தின் பெயரால் உலகை மீள ஆளவும் திட்டமிடப்பட்டுள்ள விஜயமாகவே தெரிகிறது.
பேராசிரியர்
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்