ஓ.பி.எஸ்: திரிசங்கு நிலையில் ஒரு தமிழக முதல்வர்! | தினகரன் வாரமஞ்சரி

ஓ.பி.எஸ்: திரிசங்கு நிலையில் ஒரு தமிழக முதல்வர்!

அருள் சத்தியநாதன்

எம்.ஜி.ஆர். மறைந்த பின்னர் உடனடியாகவே அ.தி.மு.க.வில் பூசல்கள் ஆரம்பமாகிவிட்டன. யார் முதல்வராவது, யார் பொதுச் செயலாளராவது, யாருக்கு தலைமைக் கழகம் சொந்தம் என்ற இழுபறி ஜெயலலிதா தலைமையிலான குழுவுக்கும் ஆர்.எம்.வீரப்பன் தலைமையிலான குழுவுக்கும் இடையே தீவிரமாக ஆரம்பமாகி அதன் ஒரு கட்டமாக ஜானகி ராமச்சந்திரன் தமிழகத்தின் முதல்வரானார். ஆனால் 24 நாட்களே அவரால் முதலமைச்சராக நீடிக்க முடிந்தது. சட்டசபையில் அவரால் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க முடியாததால் அந்த ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் ஆளுநர் ஆட்சி தமிழகத்தில் பிரகடனப்படுத்தப்பட்டது. அடுத்து வந்த தேர்தலில் குழம்பிய குட்டையில் மீன் பிடித்தது. தி.மு.க 13 ஆண்டுகளின் பின்னர் எம்.ஜி.ஆர். என்ற பெரு மக்கள் செல்வாக்கின் மறைவின் பின்னர், ஆட்சியைக் கைப்பற்றி முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றார். 1977 ஜூன் 30ம் திகதி எம்.ஜி.ஆர். முதல் தடவையாகப் பதவியேற்றார். அவர் மறைந்த பின்னரேயே 1989 ஜனவரி 27ம் திகதி தமிழக முதல்வராக கலைஞரால் பொறுப்பேற்க முடிந்தது. எம்.ஜி.ஆர், அப்படிப்பட்ட ஒரு பிரமாண்டமான ஆளுமை!
ஜெயலலிதா அம்மையார் திடீரென மரணமடைந்ததையடுத்து தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் வெற்றிடம், அதை நிரப்பி முதல்வர் ஆசனத்தில் அமர்வதற்கு தற்போது நடைபெற்றுவரும் போட்டா போட்டியை சரியாகப் புரிந்து கொள்வதற்கு இந்தப் பழைய வரலாறு உதவும் என்பதாலேயே இதை நினைவுபடுத்த வேண்டியதாயிற்று.
நடிப்பு என்றால் சாவித்திரியைச் சொல்வார்கள். அந்த அளவுக்கு சிறந்த நடிகையாக இல்லாவிட்டாலும் மூன்று மணித்தியாலமும் சலிப்பின்றி பார்க்கக் கூடிய நடிகையாகவும், சிறந்த நடன மணியாகவும் விளங்கியவர் ஜெயலலிதா. அவர் காலத்தில் அவர்தான் ராணி. ஜெயலலிதாவிடம் ஒரு குணம் இருந்தது. எதைச் செய்தாலும் அதைத் திறம்படச் செய்வார். சினிமாவில் அதைச் செய்ததைப் போலவே அரசியலும் ஜெயலலிதா சாதித்துக் காட்டினார்.
ஆனால் இந்த நடிகைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடுகின்ற மாதிரியான நடிகையர் திலகமாக இன்று திகழ்பவர்தான் ‘சின்னம்மா’ சசிகலா. மிகத் திறமையாக திட்டமிட்டு காய்களை முதல்வர் நாட்காலியை நோக்கி நகர்த்தி வருகிறார். அரசுக்கு சொந்தமாகப் போகும் போயஸ் தோட்டத்து வீட்டிலேயே இன்னும் வசித்து அங்கிருந்து ‘கார்டன் உத்தரவு’களைப் போடுவது, ஜெயா டி.வி.யை, தனக்கு வேண்டிய மாதிரி பயன்படுத்தி, ஒரு சசிகலா பிம்பத்தைத் தமிழகத்தில் உருவாக்குவது, யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கைகளை தன் பெயரில் ஜெயா டி.வி.யில் தன் படத்துடன் வெளியிடுவது, ஒரு முதல்வர் செய்ய வேண்டிய வேலைகளை அதாவது நாட்டு நடப்புகள் பற்றி முந்திக் கொண்டு கருத்துச் சொல்வது, ஜெயா டி.வி.யில் முதல்வர் பன்னீர் செல்வத்தை இருட்டடிப்பு செய்வது, எந்த நேரம் கேக் வெட்டிக் கொண்டாட வேண்டுமோ அப்போது கேக் வெட்டுவதும், மக்கள் முன் அம்மா பெயர் சொல்லி அழுது வடிவதுமாக நடிப்பது, மன்னார்க்குடி சொந்தங்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு தமிழக முதல்வருக்கு படிப்படியாக குடைச்சல் கொடுப்பது என திட்டமிட்டு இந்த நிஜ நடிகை தமிழக வாக்காளர்கள் தலையில் சட்னி அரைக்க முயன்று வருகிறார்.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிர்ஷ்டக்காரரா அல்லது அப்பாவியா என்று தெரியவில்லை. அவர்தான் தமிழகத்தின் சட்டரீதியான முதல்வர். ஏற்கனவே இரண்டுமுறை முதல்வராக இருந்து, ஜெயலலிதாவிடம் பதவியை ஒப்படைத்தவர். ஒதுங்கி நிற்பதும், கும்பிடு போடுவதும் அவர் இயல்பா அல்லது வெறும் நடிப்பா என்று அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. ஆனால் சில அமைச்சர்கள், நாஞ்சில் சம்பத் போன்ற கட்சிக்கு நெருக்கமானவர்கள், அவரது இயல்பே ஒதுங்கிப் போவதுதான் என்கிறார்கள். ஒதுங்கிப் போகக்கூடியவர் என்பதால்தான் முதல்வராக அவர் பதவி ஏற்க சசிகலா இணங்கினார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அவர் நினைத்தால், அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு அவரால் முதல்வராக நீடிக்க முடியும். அ.தி.மு.க.வின் முதல் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள் அனைவருமே ஊழலில் தோய்ந்தவர்கள் என்பதால் அதைப் பயன்படுத்தியே தனக்கு விசுவாசமானவர்களை அமைச்சர்களாக்கி, பன்னீரால் ஆட்சியை நடத்திச் செல்ல முடியும். ஏனெனில் பன்னீருக்கு எதிர்ப்புக் கட்சி மட்டத்தின் ஒரு பிரிவில் இருந்துதான் வருகிறதே தவிர தொண்டர்களிடமிருந்தோ பொதுமக்களிடமிருந்தோ அல்ல. அவர் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் பன்னீர் என்பவர்.
முன்னர் ஜெயலலிதா இடுப்புக் குழந்தை இப்போது சசிகலா இடுப்பில் உள்ள குழந்தை என்ற பிம்பத்தை உடைத்தெறிய வேண்டியது மட்டுமே. எப்படிப்பட்ட எதிர்ப்புகளை ஜெயலலிதா ஒரு சமயத்தில் சமாளித்தார் என்பதை அவர் எண்ணிப்பார்க்க வேண்டும்.
சில வாய் பேசாதவர்கள் மிகுந்த திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். வார்தா புயலின்போது பன்னீர் செல்வம் விரைவாக எடுத்த நிவாரண நடவடிக்கைகளும், நேரிடையாக களத்தில் நின்றதையும் ஊடகங்களும் கட்சி வட்டாரங்களும் பாராட்டிப் பேசுகின்றன. அவருக்கு நரேந்திர மோடியுடன் நல்லுறவு இருப்பதாகவே தகவல்கள் சொல்கின்றன. அவரால் பா.ஜ.கா. தமிழகத் தலைவி தமிழிசை செளந்தராஜனை எளிதாக சந்திக்க முடிகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து பிரச்சினைகள் குறித்து கலந்தாலேசிக்கிறார். ஏனைய கட்சிகளுடன் ஒரு சுமுக உறவை பேணுகிறார். ஜெயலலிதா காலத்தில் இது நினைத்துப் பார்க்க முடியாதது. படிப்படியாக அவர் தான் செயல்படக்கூடிய முதல்வர் என்பதையும் அதற்கான சமிக்ஞைகளையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தி வருவதை தமிழக மக்கள் ஓரளவுக்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள். தொண்டர்களுக்கும் வித்தியாசம் புரிகிறது. பன்னீர் செல்வத்துக்கு ஜெயா டி.வி. இடம் தராவிட்டாலும் ஏனைய தொலைக்காட்சிகள், குறிப்பாக சன்.டி.வி. தாராளமாகவே அவர் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
பன்னீர் செல்வம் மிகச் சரியாக காய்நகர்்த்தி வருவதாகவே தெரிகிறது. ஆனால் அவர் மீது போயஸ் சின்னம்மா கடும் நெருக்கடிகளை தொடுத்து வருகிறார். ஜெயா டி.வி.யைப் பார்த்தால் உண்மையாகவே யார் முதலமைச்சர் என்ற சந்தேகம் ஏற்படவே செய்கிறது. ஜெயலலிதாவுடன் இருந்தபோதே கச்சிதமாகக் காய்நகர்த்தி, அ.தி.மு.க.விலும் சரி, ஜெயலலிதா அமைக்கும் அரசுகளிலும் சரி தன் செல்வாக்கைத் தொடர்ந்து வைத்திருந்தது ஏன் என்பதற்கான விடையை இப்போது காண முடிகிறது.
‘‘ஜெயலலிதாவை சிலர் சில நிமிடங்களே சந்தித்திருப்பார்கள். சிலர் அடிக்கடி பார்த்திருக்கலாம். ஆனால் நானோ 33 வருடங்களாக அவர் கூடவே இருந்திருக்கிறேன். அப்படியானால் நான் எவ்வாறான இழப்பை சந்தித்திருக்கிறேன் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்’’ என்று பொதுச் செயலாளராக பதவியேற்றபோது கூறியிருந்தார் சசிகலா. இதிலிருந்தே முதல்வராகிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் அதற்கான திட்டங்களும் எத்தனை வருடங்களாக வகுக்கப்பட்டு வந்திருக்க வேண்டும் என்பதை உங்களால் யுூகித்துக்கொள்ள முடியும்.
இந்தத் திட்டத்தின்படி அவர் கட்சியை கைப்பற்றி விட்டார். அடுத்ததாக அவருக்கு முதல்வராக வேண்டும். அதற்கான ஆயத்தங்களை மன்னார்குடி குடும்பம் முடுக்கி விட்டிருக்கிறது ஜெயா டி.வி., ஜெயா பிளஸ் மற்றும் ஜெயா மெக்ஸ் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது சசிகலா குடும்பத்தினரே. இந்த டி.வி. மூலம் மக்களை மூளைச் சலவை செய்யும் காரியத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். ஜெயா சமாதிக்கு வருபவர்களை பேட்டி கண்டு ‘அம்மாவுக்குப் பின்னர் அம்மாவின் நிழலாக இருந்த சின்னம்மாவையே முதல்வராக்க வேண்டும்’ என்ற கருத்தை விதவிதமாக சொல்ல வைத்து ஒளிபரப்புகிறார்கள். தமிழகமெங்கும் ஜெயலலிதா அனுதாப பேரணிகளை நடத்தி இறுதியில் சின்னம்மா புகழ்பாடுவதுடன் முடித்து வைக்கிறார்கள். நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை சின்னம்மா புகழ் பாடுவதாக மாறிவிட்டது. மன்னார்க்குடியினரின் பிரசார பீரங்கி தமிழகமெங்கும் ‘சின்னம்மா’ என்றே முழங்குகிறது.
இந்த அதிர்வுகளில் முதல்வர் பன்னீர் செல்வமும் தீபாவும் காணாமற் போய்க் கொண்டிருப்பது உண்மையானாலும், உண்மை நிலை இதுவல்ல என்கின்றன கருத்துக் கணிப்புகள். தமிழக மக்களிடையே சின்னம்மாவுக்கு ஆதரவு சொற்பமானது என்பதை கணக்கெடுப்புகள் காட்டி நிற்கின்றன என்பது பன்னீர் செல்வத்துக்கு சாதகமான விஷயம்.
பன்னீர் செல்வத்தின் ஒதுங்கி நிற்கும் பண்பைப் பயன்படுத்தி, அவரை மிரட்டி, இராஜிநாமா செய்ய வைக்கலாம் என்று சின்னம்மா நினைக்கிறார். இரண்டாவது வழி, தொடர்ந்து அவருக்கு நெருக்கடி கொடுப்பது. பன்னீர் செல்வம் தமிழக அமைச்சர். அமைச்சர்களை அவர் நினைத்தால் நீக்கிவிட்டு புதியவர்களை நியமிக்கலாம். அவர் நினைக்கிறபடிதான் அரசாங்கம் இயங்க வேண்டும். ஆனால், அவரை பக்கத்தில் வைத்துக்கொண்டே ஒரு அமைச்சர் சொல்கிறார், சின்னம்மாதான் முதல்வராக வர வேண்டும் என்று. ஜெயலலிதா அல்லது கலைஞரை வைத்துக்கொண்டு எந்த அமைச்சராவது இப்படி பேச முடியுமா? இந்தியாவில் எங்குமே நடக்காத கோமாளிக் கூத்துகள் இன்று தமிழக அரசியலில் அரங்கேறி வருகின்றன.
இது, உளவியல் ரீதியாக பன்னீர் செல்வத்துக்கு கொடுக்கப்படும் சித்திரவதை. தொடர்ச்சியாக, ஒரு சட்டபூர்வமான முதல்வருக்கு நெருக்கடிகளைக் கொடுத்து வந்தால் அவர் மனம் தளர்ந்து பதவியை ராஜிநாமா செய்துவிடுவார் என்று கார்டன் எதிர்பார்க்கிறது.
பன்னீர் செல்வம் இந்த நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து தாக்குப்பிடிப்பாரா அல்லது ராஜிநாமா செய்துவிட்டு அரசியலுக்கு முழுக்குப் போடுவாரா? ஏற்கனவே அவர் ராஜிநாமா கடிதம் கொடுத்து விட்டதாக ஒரு புரளி சில தினங்களுக்கு முன் சசி தரப்பினரால் முடுக்கிவிடப்பட்டது.
சிலர் பன்னீர் செல்வம் ராஜிநாமா செய்துவிட்டு, அ.தி.மு.க.வில் தனது ஆதரவு பிரிவினருடன் இணைந்து சசிகலா தரப்புடன் மோதுவதற்கு தயாராக வேண்டும் என்று கருதுகின்றனர். ஏற்கனவே சசிகலா எதிர்ப்பு தொண்டர்கள் தீபா வீட்டின் முன்பாக தினமும் ஆயிரக்கணக்கில் கூடி, தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரி வருகின்றனர். ‘அம்மா தீபா பேரவை’ ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு தமிழகமெங்கும் கிளைகள் திறக்கப்பட்டு வருகின்றன. இப்பேரவையைச் சேர்ந்தவர்கள் சசிகலாவை மிக மோசமாக விமர்சித்து வருகின்றனர். சசிகலா எதிர்ப்புணர்வை தீபாவினால் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். பன்னீர் செல்வம் இவருடன் இணைந்தும் தன் போராட்டத்தை முன்னெடுக்கலாம்.
எப்படியோ, தமிழகம் ஒரு கவர்னர் ஆட்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவே கருத முடிகிறது. சசிகலாவோ அல்லது பன்னீர் செல்வமோ நான்கரை ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்யப் போவதில்லை.
இக்குழப்பங்கள் அனைத்தும் ஒரு விஷயத்தை தமிழக வாக்காளர்களிடம் ஆணித்தரமாக சொல்கின்றன. தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு உறுதியான, நிர்வாகம் தெரிந்த ஒரு முதல்வர் மிகமிக அவசியம். அந்த நபர், இப்போதைக்கு, தளபதி ஸ்டாலினாகவே இருக்கிறார்! என்பதே அந்த மெஸேஜ்! 

Comments