ஹொங்கொங் நகரின் எதிர்காலம் | தினகரன் வாரமஞ்சரி

ஹொங்கொங் நகரின் எதிர்காலம்

ஹொங்கொங்கில் புதிதாக  தெரிவு செய்யப்பட்டுள்ள  நிறைவேற்று அதிகாரி  கெரி லாம் முன்னாள் நிறைவேற்று அதிகாரியுடன் சந்திப்பின் போது...

இளையகனி...  

ஹொங்கொங் நகரின் நிறைவேற்று அதிகாரி கடந்த வாரம் கூடுதல் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். கூடுதல் வாக்குகள் என்றால், மொத்த சனத்தொகையின் பெரும்பான்மையானவர்களின் வாக்குகளால் அல்ல. வெறும் 777 வாக்குகள்.

தேர்தல் ஆணைக்குழு தெரிவுசெய்த 1200 வாக்காளர்களுள், கெரி லாம் கூடுதலானோரின் ஆதரவைப் பெற்றுக்ெகாண்டிருக்கிறார். இவர், முன்பிருந்த நிறைவேற்று அதிகாரியின் பிரதிப் பதவியை வகித்தவர். இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் இவர் பெற்ற வாக்குகளிலும் அரைவாசித் தொகையைப் பெற்றிருக்கிறார்.

ஹொங்கொங்கின் அடிப்படை அரசியல் சட்டத்தின் பிரகாரம் வெற்றி பெறும் வேட்பாளர், அங்கீகரிக்கப்பட்ட வாக்குகளில் அரைவாசியை அதாவது 600 வாக்குகளைப் பெற வேண்டும். இதன்படி வெற்றியீட்டியுள்ள கெரி லாம், எதிர்வரும் ஜூலை மாதம் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்.

ஹொங்கொங்கில் கடந்த 2005 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடிசன மதிப்பீட்டின்படி மொத்த சனத்தொகை சுமார் 70 இலட்சமாகும். சுமார் இருநூறு தீவுகள் உட்பட மொத்த நிலப்பரப்பானது சுமார் ஆயிரம் சதுர கிலோ மீற்றராகும்.

எனவே, தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரி ஒட்டுமொத்த மக்களின் பிரதிநிதி அல்லர் என்கிறார்கள் ஜனநாயக செயற்பாட்டாளர்கள். அவர் பெற்றுக்ெகாண்டுள்ள வாக்குகள் மொத்த வாக்காளர்களில் 0.03% மாத்திரமே என்கிறார்கள்.

பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த ஹொங்கொங், கடந்த 1997ஆம் ஆண்டு ஜூலை முதலாந்திகதியில் இருந்து சீனாவின் கட்டுப்பாட்டுப் பிராந்தியமாக உள்ளது. ஹொங்கொங்கைச் சீனாவிடம் ஒப்படைத்தபோது பிரிட்டனுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி, ஹொங்கொங்கின் தேர்தல் ஆணைக்குழு தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களே நிறைவேற்று அதிகாரியைத் தெரிவுசெய்ய ​வேண்டும்.

அரசியலமைப்புச் சபையின் 70 உறுப்பினர்களுடன் மாவட்ட மட்டத்தில் வர்த்தகர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் முதலானோர் உள்வாங்கப்படுவார்கள், இந்த முறைமையானது சீனாவின் ஆதிக்கத்தையே வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டுகின்றனர். ஹொங்கொங்கைத் தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதுவதால், அதற்கு முழுமையான சுதந்திரத்தை வழங்க ஒருபோதும் சீனா தயாராக இல்லை.

அதற்காக ஒரு நாடு இரண்டு கொள்கை என்ற திட்டத்திற்கு சீனா உடன்படிக்ைக செய்துகொண்டுள்ளது. எனவே, ஹொங்கொங் என்பது தனது நாட்டின் ஒரு பகுதியே என்பதை சர்வதேச அளவில் சீனா பேணி வருகிறது.

1997ஆம் ஆண்டு ஹொங்கொங்கின் நிர்வாகத்தை பிரிட்டன் சீனாவிடம் ஒப்படைத்தபோது ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டின்படி, ஐம்பது ஆண்டுகளுக்கு (2047வரை) நிர்வாகத்தை இவ்வாறு நடத்திச் செல்வதற்கு சீனா இணங்கியிருக்கிறது. அத்துடன், அப்போது நிலவிய பொருளாதார முறைமையை அவ்வாறே தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் நீதிமன்ற சுயாதீனத் தன்மையைப் பேணுவதற்கும் சீனா நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

தவிரவும், வர்த்தக வாணிப செயற்பாடுகளைச் சுயாதீனமாக மேற்கொள்வதற்கும் சீனா இணங்கியிருக்கிறது. சீனாவின் இந்தப் பொறுப்புகள் சரிவர நிறைவேற்றப்படுகிறதா என்பதை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு கண்காணித்து, ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அறிக்ைக சமர்ப்பிக்க வேண்டும்.

அண்மையில் ஹொங்கொங்கில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு, பிரித்தானிய பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அறிக்ைகயில், மனித உரிமைகளை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட நீதித்துறை குறித்து சில பின்னடைவுகள் குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும், ஹொங்கொங் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை குறித்த நற்சான்று வழங்கப்பட்டிருந்தது. சர்வதேச மட்டத்திலான நீதிபதிகளுடன் மிக உயர்ந்த நிலையில் நீதிமன்றச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

சீனாவின் பொருளாதாரம் வெளிநாட்டு முதலீடுகளுக்குத் திறந்துவிடப்பட்டதோடு, ஹொங்கொங் ஊடாகவே வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவுக்குப் பிரவேசித்தன. ஆரம்ப காலத்தில் சர்வதேச சந்தைகளுக்கான பிரதான நுழைவாயிலாக ஹொங்கொங் நகரமே விளங்கியது.

எனினும், உலகின் இரண்டாவது பாரிய பொருளாதார மையமாக விளங்குவதாலும், அமெரிக்காவுக்கு மாத்திரம் இரண்டாவதாகத் திகழ்வதாலும் ஒரு நாடு இரு கொள்கை என்ற நடைமுறையைப் பேணுவதில் சீனாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது. விசேடமாக உலகின் பலம் வாய்ந்த நாடான அமெரிக்காவிற்கு இணையாக சீனா வளர்ந்து வருவது அச்சுறுத்தலானது என்று அமெரிக்கா கருதத்தொடங்கியிருக்கிறது.

எனவேதான் ஹொங்கொங்கை சீனாவிடமிருந்து விடுவித்து ஒரு சுயாதீன நாடாக உருவாக்கினால், தமது பொருளாதாரத்திற்கும் அரசியலுக்கும் ஏற்ற வகையில் இருக்கும் என்று அமெரிக்காவின் கொள்கை வகுப்பாளர்கள் எண்ணினார்கள். இந்நிலையில், ஹொங்கொங் பங்குச் சந்தையில் அமெரிக்க டொலரைவிடவும் சீனாவின் நாணயப் புழக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இந்தப் பின்னணியில், ஹொங்கொங்கின் பிரதான நிறைவேற்று அதிகாரியானவர் மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கக் கூடியவராக இருக்க வேண்டும் என்று இளையோர் மத்தியில் ஓர் அபிப்பிராயம் ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் தெரிவு செய்யும் வாக்காளர்கள் மாத்திரமன்றி, நாட்டின் மொத்த வாக்காளர்களும் வாக்களித்து பிரதம நிறைவேற்று அதிகாரியைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. அதேநேரம் ஹொங்கொங்கின் நிர்வாகத்தில் சீனா தலையிடுவதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்ைகயும் முன்வைக்கப்பட்டது. இதன் உச்ச கட்டமாக 2014ஆம் ஆண்டின் வீதிப்போராட்டத்தைக் குறிப்பிட முடியும். அப்போது அமெரிக்காவில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பங்குச் சந்தையைக் கைப்பற்றுவதற்காக இளைஞர்கள் பயன்படுத்திய 'கைப்பற்றுங்கள்' என்ற கோஷத்தையே ஹொங்கொங் ஆர்ப்பாட்டக்கார்களும் முன்வைத்தனர். அங்கு பங்குச் சந்தையைக் கைப்பற்றும் ​போராட்டம், இங்கு நிர்வாக இயந்திரத்தைக் கைப்பற்றும் போராட்டம். ஒருவாறு அந்தப் போராட்டம் முடிவுறுத்தப்பட்டது.

கடந்த வாரம் தெரிவான கெரி லாம், அப்போது நிர்வாகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். ஆனால், கடந்த 2015ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் ஐந்து நூல் வெளியீட்டாளர்கள் காணாமற்போன சம்பவத்துடன் சீனா மீண்டும் ஹொங்கொங் விவகாரத்தில் தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அந்த நூல்கள் சீனாவிற்கு எதிரானது என்பதால் புலனாய்வு அதிகாரிகள் ஐந்துபேரையும் கடத்திச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், ஹொங்கொங்கில் மனித உரிமையைப் பாதுகாக்க சீனா நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று கோரிக்ைக விடுக்கத் தொடங்கின. அதன் பின்னர் கடந்த ஆண்டு சீனாவின் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் காணாமற்போன சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின்போது அந்த வர்த்தகர் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் உறவினர் என்றும் கனேடிய பிரஜாவுரிமை பெற்ற அவர், இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஹொங்கொங்கிற்கு வந்த விடயம் தெரிய வந்தது. அவர் கடத்தப்பட்டதாக வௌியான தகவல்களில் உண்மை இல்லை என்பதும் புரிந்தது. அதனைத் தொடர்ந்து ஊழல், மோசடி விசாரணைக்ெகன அவரை சீன அதிகாரிகள் அழைத்துச் சென்றுவிட்டனர்.

இதன் அரசியல் பின்னணி பற்றி தெளிவு இல்லாதபோதிலும், ஹொங்கொங்கின் உள்விவகாரத்தில் சீனா தலையிடுகிறது என்பதற்கான ஓர் ஆதாரமாகக் கொள்ள முடியும். மறுபுறத்தில் ஹொங்கொங் சீனாவின் பிடியிலிருந்து விடுதலையாக வேண்டும் என்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் வெளிநாடுகள் இருப்பதாக சீனா குற்றஞ்சாட்டுகிறது. விசேடமாக அமெரிக்கா பின்னணியில் செயற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

அதேநேரம், மாறி வரும் பொருளாதார முறைமைக்கு ஏற்ப, ஒரு நாடு இரு கொள்கை என்ற உடன்பாட்டை எவ்வாறு பேணுவது என்பது தற்போது சீனாவிற்குப் பெரும் சவாலாக இருக்கிறது. புதிதாகத் தெரிவாகியுள்ள பிரதம நிறைவேற்று அதிகாரி கெரி லாம், நாட்டு மக்களை ஒன்றுபடுத்தி அபிவிருத்தியைக் கட்டியெழுப்பப்போவதாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.

எவ்வாறிருப்பினும், சர்வதேச நீதிபதிகள், விசாரணைகள் எவ்விதத்திலும் நடக்காது என்று தொடர்ச்சியாகத் தெரிவித்து வரும் இலங்கை போன்ற நாடுகளுக்கு மத்தியில், உலகின் ஒரு வல்லரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு பிராந்தியத்தின் நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பில் ஆறு மாதங்குக்கு ஒரு தடவை பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அறிக்ைக சமர்ப்பித்துக்ெகாண்டிருக்கிறது என்பதையும் நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது. 

Comments