அ​மெரிக்காவுக்கு இன்னொரு வியட்நாமாகுமா வெனிசுவேலா | தினகரன் வாரமஞ்சரி

அ​மெரிக்காவுக்கு இன்னொரு வியட்நாமாகுமா வெனிசுவேலா

கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம் - யாழ்.பல்கலைக்கழகம்

வெனிசுவேலாவின் அரசியல் அதிக பதட்டத்தை நோக்கி நகர்கிறது. நம்பிக்கையூட்டும் எந்த நடவடிக்கையும் நிகழ்ந்ததாக இல்லை. ஆனால் பதட்டம் நீடிகிறது. உள்நாட்டிலும் உலக அளவிலும் அதிகரித்துவரும் நெருக்கடி தீர்க்க முடியாத சூழலை நோக்கி நகர்கிறது என்பதை காட்டுகிறது. மதுரோவும் குவைடாவும் மாறிமாறி போட்டியிட்டுக் கொண்டு மக்களை மோதவிடும் செயல்பாடு நிகழ்வது அன்றி, வேறு எந்த செயலும் நிகழ்ந்ததாக இல்லை. உலக நாடுகளுக்கு வாய்ப்பையும் அரசியல் இழுபறிக்கான களத்தையும் திறந்துவிட்டுள்ளது. இக்கட்டுரையும் அமெரிக்காவின் தீவிரம் வெனிசுவேலாவில் வளர்கிறது என்பதை விளக்குவதாகவே அமையவுள்ளது.

கடந்த மூன்று வாரங்களாக அதிக நெருக்கடியில் மூழ்கியுள்ள நாடுகள் பட்டியலில் வெனிசுவேலா முதலிடத்திலுள்ளது. பெருமளவுக்கு உள்நாட்டில் இரு தலைவருக்குமிடையே இழுபறி அதிகரித்துள்ளது. மதுரோவுக்கு எதிராக குவைடோவின் மக்கள் ஆதரவு அதிகரித்திருப்பதாகவும் மக்கள் வீதியில் இறங்கி போராடி வருவதாகவும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. பொருளாதார சுமையினால் மக்கள் அவதிப்படுவதாகவும் பணவீக்கம் எல்லையில்லாத அளவிற்கு வளர்ந்துள்ளதாகவும் வெளிவருகின்றன. ஆனால் இவை திட்டமிட்ட சோஸலிஸ புறக்கணிப்பின் தகவல்கள் என ஆளும் தரப்பு கூற முயலுகிறது. ஆனாலும் அந்த மக்கள் எல்லையோர நாடுகளில் வரிசையில் நின்று உணவுப் பொருட்களுக்கு போட்டியிடுவதை பிபிசி தொலைக்காட்சி வெளிப்படுத்திவருகிறது.

கடந்த மதுரோவின் ஆட்சிக்காலத்தில் அதிக பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்துள்ள வெனிசுவேலா அதனை முடிவுக்கு கொண்டுவரவே புதிய ஆட்சியை ஆதரிப்பதாக கூறப்படுகிறது. மக்கள் பெருமளவுக்கு சோஸலிஸ அணுகுமுறையினால் அதிக பொருளாதார நெருக்குவாரத்தை அனுபவிப்பதாகவும் வறுமையாலேயே அவர்கள் மதுரோவின் ஆட்சியை வெறுப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. அதற்கு கடந்த மதுரோவின் ஆட்சிக்காலம் முழுவதும் அமெரிக்க எதிர்ப்புவாதத்தால் அதிக வர்த்தக இழப்பையும் நேரடி முதலீட்டுக்கான வாய்ப்புக்களையும் வெனிசுவேலா இழந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் தொடர்ச்சியான அழுத்தங்களால் ஐரோப்பாவுடனும் அமெரிக்க கண்டத்து நாடுகளுடனுமான உறவும் பாதிப்பதாகவே அமைந்திருகிறது. முன்னாள் ஜனாதிபதி சாவோஸின் மரணத்திற்கு பின்னர் அமெரிக்கா தமது நலனுக்குட்பட்ட தலைவரை வெனிசுவேலாவில் ஆட்சிக்கு கொண்டுவரவேண்டுமென திட்டமிட்டிருந்து. அதற்கான வாய்புக்களை பொருளாதார இராணுவ ரீதியில் ஏற்படுத்தவும் அமெரிக்கா முயன்று வந்தது. அதனை மெதுமெதுவாக கடந்த மதுரோவின் ஆட்சிக்காலத்தில் நகர்த்திய அமெரிக்கா மிகச்சரியான வேளையில் அதனை முறியடிக்க முயன்றுவருகிறது.

அமெரிக்காவின் மிகப்பிரதான உத்தியாக உள்நாட்டிலும் சர்வதேச தளத்திலும் ஒரே சந்தர்ப்பத்தில் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பொருளாதாரத் தடையின் மூலம் உலக நாடுகளை வெனிசுவேலாவிலிருந்து விலக்கி வைக்க முயலுகிறது. அண்மையில் வெனிசுவேலாவின் கச்சாய் எண்ணெயை பண்டமாற்றில் இறக்குமதி செய்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என இந்தியாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது. பொருளாதாரத் தடையை அடுத்து இந்தியாவுக்கு அதிகமான கச்சாய் எண்ணெய்யை விற்பதற்கு வெனிசுவேலா திட்டமிட்டது. அதனைத் தெரிந்து கொண்ட அமெரிக்கா, இந்தியாவுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுடன் வெனிசுவேலாவின் எண்ணை நிறுவனங்கள் நடாத்திய பேச்சுவார்த்தையின் போது அதிக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை வெனிசுவேலா பயன்படுத்த முயல்வதாகவும் தெரிய வந்த மறுகணம் அமெரிக்காவின் எச்சரிக்கை வெளிவந்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் வெனிசுவேலாவின் வளங்களை கொள்ளையடிக்கும் மதுரோவின் நடவடிக்கையை ஆதரிக்கும் நாடுகளை யும் நிறுவனங்களையும் மன்னிக்க முடியாது எனவும் வெனிசுவேலா மக்களை பாதுகாப்பதே தங்களின் பணி என்றும் அதற்கு துணைநிற்கும் நாடுகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இதே வார்த்தையுடன் மேற்காசிய எண்ணைவள நாடுகளை நோக்கிப் படையெடுத்த அமெரிக்கா அங்கு எத்தகைய பணியை ஆற்றியது என்பது தெரிந்த விடயம். ஏறக்குறைய அந்தப் பிராந்தியத்தின் அணைத்து எண்ணெவளமும் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அல்லது அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு கூறிக்கொண்டு பல படையொடுப்புக்களை அமெரிக்கா உலகத்தில் நிகழ்த்தியுள்ளது. அவ்வாறான ஒரு பணியை செயல்படுத்தவே அமெரிக்கா திட்டமிடுகிறது. அதற்கான பூர்வாங்க பணியே குவைடோவின் அறிவிப்பாகும். வேண்டும் என்றே அமெரிக்கா வெனிசுவேலாவுக்குள் புகுவதற்கு திட்டமிட்டு வருகிறது. இதில் அமெரிக்க பாதுகாப்பு பேச்சாளரின் தகவலில் மேலும் குறிப்பிடும் போது, வெனிசுவேலாவின் கச்சாய் எண்ணெய்யை மதுரோ எடுத்து விற்பனை செய்ய எந்த அதிகாரமும் அந்த அரசாங்கத்திற்கு கிடையாது. அவ்வாறு விற்பனை செய்தால் அது திருட்டுச் செயலே. திருடுபவர்களுக்கும் சரியான தண்டனை வழங்கப்படும். திருடும் நபர்களுடன் கைகோர்த்துள்ள நாடுகளுக்கும் பதிலடி காத்திருக்கிறது என்றார். வெனிசுவேலா அமெரிக்க ஆட்சியாளரின் நாடு போன்றுள்ளது அவரது செய்தி. எனவே பிரச்சினை அரசு மட்டுமல்ல அதன் வளங்களும்தான் என்பதை அவதானிக்க முடிகிறது.

இதில் இன்னோர் விடயம் ஈரான் விடயத்தில் அமெரிக்கா இவ்வாறுதான் இந்தியாவை எச்சரித்திருந்தது. ஆனால் இந்தியா கண்டுகொள்ளவில்லை. அமெரிக்கா எது கூறினாலும் ஈரானிடமிருந்து கச்சாய் எண்ணெயை இந்தியா கொள்வனவு செய்தமை கவனிக்கத்தக்கது. அவ்வாறே வெனிசுவேலா விடயத்திலும் இந்தியா நடந்து கொள்ளும் என்றே அவதானிகள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமன்றி அதனை இந்திய ரூபாயில் கொள்வனவு செய்வது என்பதே அமெரிக்காவின் அதிக நெருக்கடியாகும். டொலருக்கு பதிலாக ரூபா அமையாது விட்டாலும் அதன் பெறுமானம் நெருக்கடியில் வளரக்கூடியதாக மாறிவிடுமோ என அமெரிக்கா கருகிறது. அமெரிக்காவின் எச்சரிக்கையில் மறைந்துள்ள மிகப் பிரதான விடயம் அதுவாகவே அமைந்துள்ளது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை குறைந்த செலவீனத்தில் கச்சாய் எண்ணெயை இறக்குமதி செய்வதென்பது அதிக இலாபகரமான செயலாகவே அமைந்துள்ளது. அதனை ஈரானிடம் இழக்க மறுத்தது போல் வெனிசுவேலாவிலும் செயல்படுமென கருத வாய்ப்புள்ளது. எப்போதும் இலாபத்தை நோக்கியே நாடுகள் செயல்படுவதை காணமுடிகிறது அதில் இந்தியா விதிவிலக்கானது கிடையாது.

மதுரோவுக்கு தற்போது இருக்கும் வாய்ப்புக்களை நோக்குவோம். மிகப்பிரதானமானது அவரது அரசாங்கமும் நீதித்துறையுமாகும். அதனால் குவைடோவால் அதிகமாக எதனையும் சாதிக்க முடியாதுள்ளது. அரசாங்கம் தனது கட்டுப்பாட்டிலுள்ள இராணுவத்தையும் பொலிஸையும் சரியாவே கையாண்டு வருகிறது. அதனால் மக்களுடன் வீதியில் திரள்வதைக் கூட குவைடோவால் எச்சரிகையுடன் மட்டுமே சாதிக்க முடிகிறது. இது மதுரோவுக்கு பெரும் பலமாக உள்ளது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் நிகழும் ஆட்சித்துறைச் செயல்பாடுகள் அனைத்தும் மதுரோவிடமுள்ளது. ஆனால் மக்களின் பொருளாதாரத் தேவையை அவரால் சாத்தியப்படுத்த முடியவில்லை. பணவீக்கம் வேகமாக ஏறுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்தும் பலமற்றவராக மதுரோ காணப்படுகின்றார்.

இரண்டாவது விடயம் ரஷ்யாவினதும் சீனாவினதும் ஆதரவு மதுரோவுக்கு இருப்பதாகும் அண்மையில் ஆயதங்களுடன் கப்பல்களும் விமானத்தின் மூலம் தங்கமும் இருநாட்டுக்குமிடையில் பரிமாற்றப்பட்டதாக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. வெனிசுவேலாவின் இரண்டாவது மிக முக்கிய உற்பத்தி தங்கம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ரஷ்யா அதிகமான தங்கத்தை வெனிசுவேலாவிலிருந்து எடுத்துச் செல்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் குஐவுடொ மக்களின் அதரவை அதிகரித்துள்ளமை கவனிக்கத் தக்கதாகும்.

மதுரோ குறிப்பிடுவது போல் வெனிசுவேலா இன்னோர் வியட்னாமாக மாறுமா என்பதும் உள்நாட்டு யுத்தம் ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரித்துவருகிறது. இரண்டுமே அமெரிக்காவுக்கும் வல்லரசுகளுக்கும் வாய்ப்பான தகவலாகும்.

Comments