(கடந்தவாரத் தொடர்...)
மெய்வல்லுனர் போட்டிகளுக்காக உலகில் நிர்மானிக்கப்பட்டுள்ள விளையாட்டரங்குகளில் முதன்மையான ஒன்றாக விளங்குகின்ற டோஹாவில் உள்ள கலீபா சர்வதேச விளையாட்டரங்கானது, முற்றிலும் குளிரூட்டப்பட்ட ஒரு மைதானமாக காணப்படுகின்றது.
கட்டாரில் நிலவுகின்ற அதிக உஷ்ணத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக அது இருந்தாலும், இலங்கை வீரர்களின் பின்னடைவுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
மெண்டோ என அழைக்கப்படுகின்ற ஓடு பாதையில் எமது வீரர்கள் முதற்தடவையாகப் போட்டியிட்டதால் அவர்களது அடைவுமட்டத்தினைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் போயிருக்கலாம்.
அதேபோல, எமது வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு மிகவும் அரிது என்பதால் இவ்வாறான போட்டித் தன்மை மிக்க சர்வதேச மட்டப் போட்டியில் வெற்றிகளை பெற்றுக் கொள்வது கடினமாக இருக்கும்.
உதாரணமாக, பெண்களுக்கான 3000 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் நான்காவது இடத்தைப் பெற்றுக் கொண்ட நிலானி ரத்னாயக்க, வருடமொன்றுக்கு ஒரேயொரு சர்வதேசப் போட்டியில் மாத்திரம் பங்குபற்றுகின்றார். இதில் நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் அதீத திறமைகளை வெளிப்படுத்துகின்ற ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளை பின்னுக்குத்தள்ளி பதக்கமொன்றை வெல்வது என்பது சாத்தியமற்ற விடயம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எனவே அவ்வாறான வீரர்களுக்கு அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கைககள் எடுத்தால் மாத்திரமே குறைந்தபட்சம் ஒரு வெண்கலப் பதக்கத்தையாவது எதிர்பார்க்க முடியும்.
2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவுக்குப் பிறகுதான் பெண்களுக்கான 4x400 அஞ்சலோட்டத்தில் இலங்கை அணி களமிறங்கியது. அத்துடன், இம்முறை அஞ்சலோட்டத்தில் பங்குபற்றிய நான்கு வீராங்கனைகளும் தேசிய மட்டப் போட்டியில் ஒன்றாக ஓடியிருக்காவிட்டாலும் 20 வருடங்கள் பழைமை வாய்ந்த தேசிய சாதனையை முறியடித்திருந்தனர்.
இலங்கை இராணுவத்தின் புண்ணியத்தால் இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டு இன்று தலைதூக்கிக் கொண்டிருக்கின்றது. இன, மத, மொழி வேறுபடின்றி நாட்டிலுள்ள அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பளித்து அவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சிகளை வழங்கி, சம்பளத்தையும் கொடுக்கின்ற இலங்கை இராணுவத்தைப் பாராட்டியாக வேண்டும்.
2016 தெற்காசிய விளையாட்டு விழாவுக்குப் பிறகு இலங்கையின் மெய்வல்லுனர் வீரர்களுக்காக விசேட கொடுப்பனவு முறையொன்றை விளையாட்டுத்துறை அமைச்சு முன்னெடுத்து வந்துது. இதன்காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் பல இளம் நட்சத்திர வீரர்கள் சர்வதேச மட்டப் போட்டிகளில் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர். ஆனால் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் அந்த கொடுப்பனவு இடைநிறுத்தி வைக்கப்படுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தின் பங்களிப்பு மட்டும் போதுமா?
இந்த நாட்டின் மெய்வல்லுனர் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு இலங்கை இராணுவம் மிகப் பெரிய பங்களிப்பினை வழங்கி வருகின்றது என்றால் மிகையாகாது. பாடசாலை மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களை இனங்கண்டு ஒரு சாதாரண இராணுவ வீரருக்கு வழங்கப்படுகின்ற அனைத்து வரப்பிரசாதங்களையும் அவர்களுக்கு வழங்கி மெய்வல்லுனர் விளையாட்டிற்கான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றது.
ஒரு இராணுவ வீரரின் சேவை எப்போதும் நாட்டைப் பாதுகாப்பதாகும். ஆனால் யுத்தம் நிறைவடைந்த பிறகு இவ்வாறு மெய்வல்லுனர் விளையாட்டில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களை இன, மத, மொழி வேறுபாடின்றி இலங்கை இராணுவம் தம்முடன் இணைத்துக் கொண்டு அவர்களுக்கான அனைத்துவிதமான பயிற்சிகள், போஷாக்கு உணவுகள் என்பவற்றை முற்றிலும் இலவசமாக வழங்கி, மாதாந்தம் சம்பளத்தையும் கொடுத்து வருகின்றது.
இந்த நாட்டின் மெய்வல்லுனர் விளையாட்டிற்கு இவ்வாறானதொரு அபரிமிதமான சேவையினை வழங்கி வருகின்ற இலங்கை இராணுவத்தினால் பயிற்சிகளை முன்னெடுப்பதற்கான அனைத்துவிதமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்ட போதிலும், அவர்களுக்கு சர்வதேசப் போட்டிகளில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியாமல் உள்ளது. இதற்கு மெய்வல்லுனர் விளையாட்டிற்கான போதியளவு அடிப்படை வசதிகள் இல்லாமையா? அல்லது வீரர்களின் திறமையில் காணப்படுகின்ற பிழையா? என்பது புரியாத புதிராகவே உள்ளது.
கண் துடைப்பாகும் ஒலிம்பிக் கனவு
ஒலிம்பிக் வரலாற்றில் இலங்கை இதுவரை 2 வெள்ளிப் பதக்கங்களை மாத்திரமே வெற்றி கொண்டுள்ளது. இந்த இரண்டு பதக்கங்களும் மெய்வல்லுனர் விளையாட்டில் கிடைக்கப் பெற்றமையே. 1948 லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டலில் டன்கன் வைட்டும், 2000ஆம் நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 200 மீற்றரில் சுசந்திகா ஜயசிங்கவும் இவ்வாறு பதக்கங்களை சுவீகரித்தனர்.
அதன்பிறகு சுமார் 2 தசாப்தங்களாக இலங்கையால் எந்தவொரு ஒலிம்பிக் பதக்கத்தையேனும் வெற்றி கொள்ள முடியவில்லை.
நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற ஒலிம்பிக் விழாவுக்கான முன் ஆயத்தங்களோ, திட்டங்களோ எமது நாட்டில் இன்றுவரை முன்னெடுக்கப்படவில்லை. இந்த நாட்டில் 63 விளையாட்டு சங்கங்கள் காணப்பட்டாலும், ஒருசில சங்கங்களைத் தவிர மற்றைய எல்லா சங்கங்களும் விளையாட்டுத்துறை அமைச்சின் உதவியைத் தான் எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
இதனால் எமது வீரர்களுக்கு சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. எந்தத் துறையாக இருந்தாலும் அனுபவம் தான் ஒரு மனிதனுக்கு வெற்றியைக் கொடுக்கின்றது. இது விளையாட்டுக்கு மாத்திரம் விதிவிலக்கல்ல. எனவே, உள்ளூர் மட்டப் போட்டிகளில் மாத்திரம் திறமைகளை வெளிப்படுத்தி எந்தவொரு அனுபவமும் இல்லாமல் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு விழா உள்ளிட்ட போட்டித் தன்மை கொண்ட சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்களை வெல்ல முடியும் என்பது பகல் கனவாகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.
அடுத்தது என்ன?
இவ்வருடத்தைப் பொறுத்தமட்டில் இலங்கை மெய்வல்லுனர் வீரர்களுக்கு முக்கிய போட்டித் தொடராக எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழா அமையவுள்ளது. இந்தத் தொடருக்கான முழு ஏற்பாடுகளையும் விளையாட்டுத்துறை அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.
குறித்த தொடருக்கு முன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கட்டாரில் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பை அமெரிக்காவில் வசித்து வருகின்ற தேசிய மரதன் ஓட்ட சம்பியனான ஹிருனி ஜயரத்ன அண்மையில் பெற்றுக் கொண்டார். இவரைத் தவிர எந்தவொரு வீரர்களும் அதற்கான அடைவு மட்டத்தினை இதுவரை பூர்த்தி செய்யவில்லை.
அடுத்த வருடம் ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விழாவுக்கான இலங்கை அணியின் பங்குபற்றல் குறித்து தற்போது எந்த அறிவிப்பையும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முற்றும்
பரீத் ஏ.றகுமான்