இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை | தினகரன் வாரமஞ்சரி

இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

12வது உலகக் கிண்ணத் தொடர்: 

கிரிக்கெட் போட்டிகள் என்றால் உபகண்ட நாடுகளான இந்திய- பாகிஸ்தான் அணிகள் கலந்து கொள்ளும் போட்டி எங்கு நடைபெற்றாலும் மைதானம் ரசிகர்களால் நிரம்பி வழியும். இப்போட்டிகளை போர், சமர், மோதல் என்றுதான் வர்ணிப்பார்கள். இரு நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் இப்படியான ஒரு முர்க்கக் குணம் காரணமாக இவ்வாட்டங்கள் எப்போதுமே சூடுபிடிக்கும். 

மும்பாய்த் தாக்குதல், கார்கில் சண்டையின் பின் நீண்ட காலமாக இரு நாட்டு கிரிக்கெட் உறவுகளிலும் விரிசல் ஏற்பட்டு இரு நாடுகளும் நேரடியாக மோதுவதில்லை என்ற நிலை ஏற்பட்டது.  

ஆனால் இரு நாடுகளுக்கிடையிலான தொடர் நடைபெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் அடிக்கடி இடம்பெறும். இத் தருணங்களிலெல்லாம் இரு நாடுகளும் போட்டிகளில் விளையாடும் என்று எதிர்பார்த்தே கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 

ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் நடாத்தப்படும் தொடர்களில் மட்டும் இரு நாடுகளும் மோதிக்கொள்வதால் அவ்வகையான போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். 

அந்த வகையில் 12வது உலகக் கிண்ணத் தொடரில் 22வது போட்டி இன்று மன்செஸ்டர் ஓல்ட் ட்ராப்போர்ட் மைதானத்தில் இந்திய- பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறும் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். 

ஆனால் இரு அணிகளுக்கிடையிலான கள மோதல்களுக்கு முன்பே பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் இரு நாட்டு முன்னாள், இந்நாள் வீரர்களும், விமர்சகர்களும் மோத ஆரம்பித்துள்ளனர். 

அண்மைய கால பெறுபேறுகளைப் பார்த்தால் இந்திய அணியின் கையே ஓங்கியிருப்பது தெளிவாகும். 

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பொறுத்தவரை வெற்றி வீதத்திலும் அவ்வணியே முதல் நிலையில் உள்ளது.   ஐ.சி.சி.யினால் அண்மைக்காலமாக நடாத்தப்பட்டு வந்த தொடர்களில் பெரும்பாலும் இந்திய அணியே அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஆனால் இரு நாடுகளுக்குமிடையில் கடைசியாக 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் எட்ஸ்பெஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற சம்பியன் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்திய- பாகிஸ்தான் ஒருநாள்போட்டி வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் மொத்தமாக 128போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 73போட்டிகளில் பாகிஸ்தானும் 51போட்டிகளில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.  

இவ்வுலகக் கிண்ணப் போட்டித் தொடரிலும் ஆரம்பப் போட்டிகளில் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களான ஷிகர் தவான், ரோஹித் சர்மா சதமடித்ததுடன் தலைவர் கோஹ்லியும் வழமையான துடுப்பாட்ட போர்மில் உள்ளார். இவர்களுடன் அனுபவ வீரர் தோனி, ராகுல் என இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசை பலமாகவே உள்ளது. பந்துவீச்சிலும் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஸ்வர்குமார், ஜஸ்டின் பும்புரா, ஹார்திக் பாண்டியா மற்றும் சஹால், குல்தீப் யாதவ் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களுமாக மொத்தத்தில் முழு அணியுமே பாகிஸ்தான் அணிக்கு சவாலாக விளங்கக் கூடியவர்களே. 

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை இதுவரை நடைபெற்ற இவ்வுலகக் கிண்ணப் போட்டிகளில் நல்ல பெறுபேறுகள் இல்லை. அவ்வணி விளையாடி 4போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலிலும் 8வது இடத்திலேயேயுள்ளது. அவ்வணியில் மொஹமட் அமீர், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், சஹீன்ஷா அப்ரிடி என வேகப்பந்து வீச்சு பலமாகவிருந்தாலும் அவ்வணியின் துடுப்பாட்ட வரிசை இந்திய அணியுடன் ஒப்பிடும் போது சற்று பின்னிலையிலேயே உள்ளது. எல்லோரும் ஒரே நேரத்தில் சொதப்பக்கூடியவர்களே. கடந்தவாரம் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுடன் இலகுவாக வெற்றிபெற வேண்டிய போட்டியில் கூட துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால் தோல்வியுற்றது. தலைவர் சர்பராஸ் அஹமட், பாபர் அஸாம், சொஹைப் மலிக், முஹம்மட் ஹபீஸ் போன்ற அனுபவ வீரர்கள் சற்று நிதானித்து ஆடினால் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். 

முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் இந்திய அணியே இப்போட்டியில் வெல்லக் கூடும் என எதிர்வுகள் கூறியிருந்தாலும், இறுதிப் பந்துவரை எதிர்வு கூற முடியாத கிரிக்கெட் ஆட்டத்தில் எதுவும் நடக்கலாம். எது எப்படியோ கிரிக்கெட் ரசிகர்களுககு நிச்சயமாக இப்போட்டி நல்லதொரு விருந்தாகும். 

எம்.எஸ்.எம். ஹில்மி 

Comments