![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/07/06/q2.jpg?itok=LkKUYIQU)
இவ்வாரம் ஆரம்பமாகும் அரையிறுதி ஆட்டங்கள்
12வது உலகக் கிண்ண ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. அதன் முதற் சுற்று ஆட்டங்கள் நேற்று சனிக்கிழமை இரவு மன்செஸ்டர் ஓல்ட் ட்போர்ட் மைதானத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலிய-−தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டியுடன் நிறைவடைந்து அரையிறுதி ஆட்டங்கள் இவ்வாரம்ஆரம்பமாகவுள்ளன.
முதற்சுற்று பெறுபேறுகளின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் 1ம், 4ம் இடங்களைப் பெற்ற அணிகள் எதிர்வரும் 9ம் திகதி செய்வாய்க்கிழமை ஓல்ட் ட்போர்ட் மைதானத்தில் முதல் அரையிறுதி ஆட்டத்திலும், 2ம், 3ம் இடங்களைப் பெற்ற அணிகள் 11ம் திகதி வியாழக்கிழமை பெர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி ஆட்டத்திலும் மோதவுள்ளன. அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் எதிர்வரும் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் லோட்ஸ் மைதானத்தில் மோதும்.
உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பம் முதலே கிரிக்கெட் விமர்சகர்களினதும், விற்பன்னர்களினதும் எதிர்பார்ப்பிற்கமைய இறுதி நான்கு அணிகளில் அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணி அரையிறுத்திக்குத் தெரிவாகியுள்ளன. அரையிறுதிக்குத் தெரிவாகும் நான்காவது அணி எதுவென வெள்ளிக்கிமை இரவு நடைபெறும் பாகிஸ்தான்- பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டி முடிவில் தங்கியிருந்தது. 11புள்ளிகளுடனும், நிகர ஓட்ட வீதத்திலும் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளதால் அவ்வணிக்கே அதிக வாய்ப்புள்ளது. என்றாலும் எதிர்வு கூற முடியாத கிரிக்கெட் ஆட்டத்தில் எதுவும் நடக்கலாம். எனவே வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் பாரிய ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தால் அவ்வணிக்கு நான்காவது அணியாக அரையிறுதிக்குள் நுழையும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.
ஒரு போட்டி மீதமிருக்கையில் முதலாவது அணியாக அரையிறுத்திக்குள் நுழைந்த அவுஸ்திரேலிய அணி இதுவரை 7முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஒரே அணியாகும். இதில் 1987ம் ஆண்டு இங்கிலாந்து அணியை 7ஓட்டங்களால் வெற்றிகொண்டு முதன் முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றிய அவ்வணி தொடர்ந்து 1999, 2003, 2007, 2015ஆம் ஆண்டுகளில் கிண்ணம் வெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. வருட ஆரம்பத்தில் சற்று பின்னடைவை சந்தித்திருந்தாலும் டேவிட் வோனர், ஸ்டீவ் ஸ்மித்தின் மீள் வருகையால் அவ்வணி பலம் பொருந்திய அணியாக 6வது முறையாகவும் கிண்ணம் வெல்லும் முனைப்பில் அரையுறுத்திக்கு முன்னேறியுள்ளது.
இரண்டாவது அணியாக அரையுறுதிக்குள் நுழைந்துள்ள இந்திய அணி 1983, 2011ம் ஆண்டுகளில் கிண்ணம் வென்ற அணியாகும். 2003ம் ஆண்டு இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற அவ்வணி 1987, 1996, 2015ம் ஆண்டுகளில் அரையுறுதிவரை முன்னேறியுள்ளது. 3வது முறையாகவும் கிண்ணம் வெல்லும் அவாவில் உள்ள இந்திய அணி 7வது முறையாகவும் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
2015ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் படுதோல்வியடைந்த கையோடு தனது ஒருநாள் அணியை இவ்வருட உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் நோக்கோடு மறுசீரமைத்த இங்கிலாந்து அணி மூன்றாவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
1979, 1987, 1992ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்குத் தெரிவான அவ்வணி இன்னும் உலகக் கிண்ணம் வென்றதில்லை. 6வது முறையயாக இம்முறை அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. பல அதிரடி ஆட்டக்காரர்களைக் கொண்ட அவ்வணி தொடர்ந்து அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை அணிகளிடம் தோல்வியுற்று முதல் சுற்றுடன் வெளியேறும் என்ற நிலையிலிருந்தது.
கடைசி இரண்டு லீக் ஆட்டங்களில் தங்களை சுதாகரித்துக் கொண்டு பலவாய்ந்த இந்திய, நியூசிலாந்து அணிகளை வெற்றி கொண்டதன் மூலம் அரையிறுத்திக்குத் தெரிவானது. முதல் முறையாக கிண்ணம் வெல்லும் அதிர்ஷ்டம் இங்கிலாந்து அணிக்குக் கிடைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
இக்கட்டுரை எழுதும் வரை அரையிறுதிக்குத் தெரிவாகும் நான்காவது அணி இன்னும் ஊர்ஜிதமாக முடிவாகவில்லை.
ஒரே ஒருமுறை இறுதிப்போட்டிக்கும் 7முறை அரையிறுத்திப் போட்டிக்கும் தெரிவாகியுள்ள நியூசிலாந்து அணி இன்னும் கிண்ணம் வென்றதில்லை. உலகக் கிண்ண ஆரம்பப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி முதல்நிலை பெற்றாலும் இறுதிக்கட்ட ஆட்டங்களில் சொதப்பும் வரலாறே அவ்வணிக்கு உண்டு. 1992ம் ஆண்டில் முதற்சுற்றில் எல்லாப் போட்டகளிலும் வெற்றி பெற்று இறுதியாக பாகிஸ்தானிடம் தோல்வியுற்று இறுதியாட்ட வாய்ப்பை இழந்தது அவ்வணி. அந்நிலைமையே இத்தொடரிலும் ஏற்படுமா என்பது வெள்ளிக்கிமை பங்களாதேஷ்-பாகிஸ்தான் அணிகளின் போட்டியின் முடிவில் தெரிந்திருக்கும்.
இதுவரை நடைபெற்ற முதற்சுற்று ஆட்டங்களின்படி இம்முறை துடுப்பாட்ட வீரர்களுக்கு சொர்க்கபுரியாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து ஆடுகளங்களில் பந்து வீச்சாளர்களும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் திறமை காட்டி வருகின்றனர்.
அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டாக் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இரு போட்டிகளில் 5விக்கெட்கள் வீதம் வீழ்த்தி மொத்தம் 24விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடத்திலுள்ளார். இம்முறை சிறந்த பந்து வீச்சுப் பெறுதியாக தொடரின் 37வது போட்டியில் நியூசிலாந்து அணிக்கெதிராக ஸ்டாக் 26ஓட்டங்களுக்கு 5விக்கெட் கைப்பற்றியதே பதிவாகியுள்ளது. அவ்வணியின் மற்றைய வேகப்பந்து வீச்சாளர்களான பெட் கமின்ஸ், ஜேசன் பெஹர்ன்டோபும் சிறப்பாகப் பந்து வீசியுள்ளனர்.
நியூசிலாந்து அணியின் லாக்கி பெர்குசன் இதுவரை 7போட்டிகளில் 17விக்கெட்டுகளைப் பெற்று இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து அணியின் ஜோப்ரா ஆச்சர் 9போட்டிகளில் 17விக்கெட்டுகளைப் பெற்று மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான் அணியின் மொஹம்மட் ஆமிர் 7போட்டிகளில் 16விக்கெட்டுகளைப் பெற்று 4வது இடத்திலும், மொஹம்மட் சமி 4போட்டிகளில் 14விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஐந்தாவது இடத்திலுமுள்ளனர். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இதுவரை 12விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்
வழமையாக உலகக் கிண்ணத் தொடர்களில் ஆதிக்கம் செலுத்திவரும் சுழற்பந்து வீச்சாளர்கள் இம்முறை பெரிதாக பிரகாசிக்கவில்லை. எப்போதும் இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்து வரும் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், சஹால் கூட இம்முறை ஓட்டங்களை வாரி வழங்கியிருந்தனர். சுழற்பந்து வீ்ச்சில் பங்களாதேஷ் அணி வீரர் சகீப் அல் ஹசன் மாத்திரமே இம்முறை பிரகாசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
துடுப்பாட்டத்தில் 7போட்டிகளில் இதுவரை 4சதங்களுடன் இந்திய வீரர் ரோஹித் சர்மா 544ஓட்டங்களுடன் முதலிடத்திலுள்ளார். இவர் உலகக் கிண்ணத் தொடரில் இதுவரை (சனிக்கிழமை நடைபெறும் இலங்கையுடனான போட்டிதவிர்ந்து) நான்கு சதம் பெற்று ஒரு தொடரில் நான்கு சதம் பெற்ற இலங்கை வீரர் குமார் சங்கக்காரவின் சாதனையை சமன் செய்துள்ளார். இரண்டாவது இடத்திலுள்ள பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் சகிப் அல் ஹசன் 2சதங்களுடன் 542ஓட்டங்களைப் பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் அவுஸ்திரேலிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட்வோனர் 8போடடிகளில் 2சதங்களுடன் 516ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் பங்களாதேஷ் அணியுடன் பெற்ற 166ஓட்டங்களே இதுவரை வீரர் ஒருவர் பெற்ற கூடிய ஓட்டங்களாகப் பதிவாகியுள்ளது. 300க்கும் அதிகமான சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ள இத்தொடரில் ஒருபோட்டியில் கூடிய சிக்கசர்கள் விளாசிய வீரராக தொடரின் 24வது போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணித் தலைவர் பெற்ற 17சிக்சர்கள் பதிவாகியுள்ளதுடன் இவ்வுலகக் கிண்ணத் தொடரிலும் இதுவரை அவரே கூடிய சிக்சர்களை (22) விளாசியுள்ளார்.
இத்தொடரில் ஒரு அணி பெற்ற கூடிய ஓட்டங்களாக தொடரின் 24வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி பெற்ற 6விக்கெட் இழப்புக்கு 397ஓட்டங்களே பதிவாகியுள்ளது. தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டியில் 105ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததே இதுவரை குறைந்த ஓட்டமாகப் பதிவாகியுள்ளது.
எம்.எஸ்.எம். ஹில்மி