12வது உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று வரலாற்றுப் புகழ்மிக்க லோட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறுகின்றது. சுமார் ஒன்றரை மாத காலமாக 11மைதானங்களில் 10அணிகளுக்கிடையில் இதுவரை நடைபெற்ற 47போட்டிகள் நடைபெற்று இன்று நடைபெறும் இறுதிப் போட்டியுடன் உலகின் மாபெரும் கிரிக்கெட் திருவிழா நிறைவுக்கு வருகின்றது.
நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாகத் தெரிவாகியுள்ளதுடன் அவுஸ்திரேலியாவில் கடந்த முறை நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரிலும் இறுதிப்போட்டிகுத் தெரிவாகிய அவ்வணி இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
10அணிகள் பங்குபற்றிய முதற் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றைய அணியுடன் ஒவ்வொரு முறை மோதியது. புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற அணிகள் அரையிறுதிக்குத் தெரிவாகின. அந்த வகையில் நியூசிலாந்து அணி இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுடனான ஆரம்பப் போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்றது. ஆனால் இறுதிக்கட்டத்தில் எதிர்கொண்ட பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுடனான போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்து பின்னடைவைச் சந்தித்தாலும் நிகர ஓட்ட வேகத்தின் அடிப்படையில் அரையிறுதிக்குத் தெரிவானது.
கடந்த 9ம் திகதி மன்செஸ்டர் ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் நடை முதல் அரையிறுத்தியில் நியூசிலாந்து பலம் வாய்ந்த இந்திய அணியுடன் மோதியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் நியூசிலாந்து அணி 21ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. இதுவரை கிண்ணம் வெல்லாத நியூசிலாந்து அணி இம்முறை எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து முதல் முறையாக கிண்ணம் வெல்ல எத்தணிக்கும். இங்கிலாந்து அணியுடன் ஒப்பிடும் போது நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம் சற்று பின்னடைவிலேயே உள்ளது. ஆரம்பப் போட்டியிலும், அரையிறுதிப் போட்டியிலும் தலைவர் கேன் வில்லியம்சன் மட்டுமே சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியிருந்தார். அவ்வணி பெரிதும் எதிர்பார்த்திருந்த அதிரடி ஆட்டக்காரர்களான மார்டின் குப்திலும் கொலின் மொன்றோவும் ஒரு போட்டியில் கூட சிறப்பாக விளையாடவில்லை. இறுதிப் போட்டியில் அவர்களது வழமையான அதிரடி தொடருமானால் எதிரணிக்கு சவாலாய் அமையும். வழமைபோல் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சும், களத்தடுப்பும் சிறப்பாகவேயுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் லொகி பெர்குசன் இதுவரை 18விக்கெட்டுகளைப் பெற்று கூடிய விக்கெட் கைப்பற்றியோர் வரிசையில் 4வது இடத்திலுள்ளார். இவருடன் பேளல்ட், மெட் ஹென்றி சுழற்பந்துவீச்சாளர் மிச்சல் சான்ட்னர் சிறப்பாகச் செயற்பட்டு வருவதால் முதல் முறையாக உலகக் கிண்ணம் வெல்லும் வாய்ப்பும் அவ்வணிக்குண்டு.
கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து அணி இதுவரை 4முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள போதிலும் இன்னும் கிண்ணம் வென்றதில்லை. 1979ம் ஆண்டு மேற்கிந்திய அணியுடனும், 1987ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியுடனும், 1992ம் ஆண்டு பாகிஸ்தான் அணியுடனும் இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற அவ்வணி சுமார் 27வருடங்களின் பின் மீண்டும் தனது சொந்த மண்ணில் இறுதிப் போடடிக்குத் தெரிவாகியுள்ளது.
2015ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் படுதோல்வியடைந்த கையோடு தனது ஒருநாள் அணியை இவ்வருட உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் நோக்கோடு மறுசீரமைத்த இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது.
முதல் சுற்றில் ஆரம்ப ஆட்டங்களில் தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான், ஆகிய அணிகளுடன் வெற்றி பெற்றதுடன் பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் மட்டும் தோல்வியடைந்தாலும் அடுத்து சுற்றுக்குத் தெரிவாகும் என்ற கணிப்பில் வலுவான நிலையில் அவ்வணி இருந்தது. ஆனால் அடுத்து வந்த ஆட்டங்களில் இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுடன் தொடர்ந்து தோல்வியுற்றதால் அடுத்த சுற்றுக்குத் தெரிவாவதில் சற்று சிக்கல் ஏற்பட்டது.
எனினும் அடுத்த வந்த இரு போட்டிகளிலும் பலம்வாய்ந்த நியூசிலாந்து, இந்திய அணிகளை வெற்றி கொண்டு அரையிறுதிக்குள் நுழைந்தது.
கடந்த 11ம் திகதி பெர்மிங்ஹாமில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதில் பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை இலகுவாக வெற்றிகொண்டு இறுதிப்போட்டிக்குத் தெரிவானது.
அவ்வணியைப் பொறுத்த வரையில் 2015ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் படுதோல்வியடைந்த கையோடு தனது ஒருநாள் அணியை இவ்வருட உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் நோக்கோடு மறுசீரமைத்த இங்கிலாந்து அணி இறுதிக்குள் நுழைந்துள்ளது.
உலகக் கிண்ணக் கனவுகளுடன் தமது அணியை தயார் படுத்திய இங்கிலாந்து சர்வதேச தரவரிசையிலும் முதலிடத்திலேயே இருந்து வந்தது. உலகக் கிண்ணம் வெல்லும் கணிப்பிலும் அவ்வணியே முதல் நிலையில் இருந்து வந்தது. அவ்வணியின் ஆரம்ப ஜோடியான ஜேசன் ரோய்- ஜொனி பெரஸ்டோவ் தொடர் முழுவதும் சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்து அவ்வணியியின் வெற்றிக்கு பங்களித்துள்ளனர். இந்த ஜோடி தொடர் முழுவதும் 3சதங்களுடன், 4சத இணைப்பாட்டங்களையும் பெற்றுள்ளதோடு இதுவரை இந்த ஜோடியே ஓட்டக் குவிப்பில் அவ்வணி சார்ப்பாக முன்னிலை பெற்றுள்ளனர். உபதலைவர் ஜோரூட், ஜோஸ்பட்லர், தலைவர் இயன் மோர்கன் துடுப்பாட்டத்தில் நல்ல நிலையில் உள்ளதால் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தின் பந்து வீச்சாளர்கள் சவாலை எதிர்நோக்க நேரிடும்.
இங்கிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சும் பலமாகவே உள்ளது. கிரிஸ் வோக்கஸ், மார்க் வோட், லியம் ப்லங்கட் தொடர் முழுவதும் சிறப்பாகப் பந்து வீசியிருந்தனர். இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென்ஸ்டொக் துப்பாட்டத்திலும், பந்து வீச்சிலும் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடினமாக உழைத்து வருகிறார். எனவே பந்து வீச்சு, துடுப்பாட்டம் என சம பலத்துடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
ஐ. சி. சி. நடத்தும் பாரியளவிலான தொடர்களில் இன்னும் கிண்ணம் வெல்லாத இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் முதல் முறையாக கிண்ணம் வெல்லும் அவாவில் இறுதிப் போட்டியில் களமிறங்குவதால் இரு அணிகளுக்கும் இன்றைய போட்டி கடும் சவால் மிக்கதாக அமையும்.
இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் ஆரம்பம் முதல் துடுப்பாட்ட வீரர்களில் சொர்க்க புரியாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து ஆடுகளங்களில் முதற் சுற்று ஆரம்பப் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்திருந்தனர். ஆனால் பிற்பகுதி ஆட்டம் மற்றும் அரையிறுதி ஆட்டங்களில் துடுப்பாட்ட வீரர்கள் மிகவும் சிறப்பட்டே ஓட்டங்களைக் குவிக்க கூடியதாகவிருந்தது. ஆரம்பத்தில் 300ஓட்டங்களையும் இலகுவாக கடந்து வெற்றி பெற்ற சில அணிகள் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிக் கட்ட ஆட்டங்களில் 200- 250ஓட்டங்களையும் துரத்திச் செல்வதில் சிரமப்படுவதைக் காணக்கூடியதாக இருந்தது.
இவ்வுலகக் கிண்ணத்தை நோக்குமிடத்து பொதுவாக துடுப்பாட்டம், பந்து வீச்சு ஆகிய இரண்டுக்கும் சாதகமான ஆடுகளங்கள் அமைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
துடுப்பாட்டத்தில் கடந்த கால உலகக் கிண்ணப் போட்டிகளுடன் ஒப்பிடும் போது இம்முறை அநேக துடுப்பாட்ட வீரர்கள் 500ஓட்டங்களைக் கடந்து பெற்றுள்ளனர். இந்தியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மாவும், அவுஸ்திரேலியாவின் டேவிட்வோனரும் 600ஓட்டங்களுக்கு மேல் கடந்து பெற்றுள்ளனர்.
இதே போல் பந்து வீச்சிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் இம்முறை முன்னிலை பெற்றுள்ளனர். மிச்செல் ஸ்டார்க், முஸ்டபிசுர்ரஹீம், ஜோப்ரா ஆச்சர், லோக்கி பெர்குசன், மொஹம்மட் ஆமிர், ஜஸ்பிரிட் பும்ரா முன்னிலை பெற்றுள்ளனர். அநேக வீரர்கள் 5விக்கெட்டுகள் கைப்பற்றிய சந்தர்ப்பங்கள் பல உள்ளன. இம்முறை சிறந்த பந்து வீச்சுப் பெறுதியாக தொடரின் 44வது போட்டியில் பங்களாதேஷ் அணிக்கெதிராக பாகிஸ்தான் இளம் வீரர் சாஹீன் ஷா அப்ரிடி கைப்பற்றிய 35ஓட்ங்களுக்கு 6விக்கெட் கைப்பற்றியதே பதிவாகியுள்ளது. ஒரு தொடரில் கூடிய விக்கெட்டாக 26விக்கெட்டுகளை கைப்பற்றி 2007ஆம் ஆண்டு அவுஸ்தரேலிய வேகப்பந்து வீச்சாளர் கிளேன் மெக்ராத் படைத்த சாதனைய இம்முறை அதே நாட்டைச்சேர்ந்த மிச்செல் ஸ்ட்ராக் முறியடித்தார்.
இம்முறை இங்கிலாந்து, இந்திய, அவுஸ்திரேலிய ஆரம்ப ஜோடிகளான ஜேஸன் ரோய்- ஜோனி பெயர்ஸ்டோ, ரோஹித் சர்மா-யோகேஷ் ராகுல் (ஷிகர் தவான்), டேவிட் வோனர் ஆரோன் பிஞ்ச் இணைந்து 10சத இணைப்பாட்டங்களையும், 15சதங்களையும் பெற்றுள்ளனர். இதில் ரோஹித் சர்மா 5சதங்களைப் பெற்று தொடரொன்றில் கூடிய சதம்பெற்ற 2015ம் உலகக் கிண்ணத் தொடரின் போது சங்கக்காரவின் (4சதங்கள்) சாதனை முறியடித்துள்ளார். டேவிட் வோனர் தொடரின் 26போட்டியில் பங்களாதேஷ் அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் 166ஓட்டங்கள் பெற்றதே இம்முறை உலகக் கிண்ணப்போட்டியில் வீரர் ஒருவர் பெற்ற கூடிய ஓட்டங்களாகும்.
இதுவரை ஆரம்ப ஜோடி
100ஓட்டங்களை
கடந்து பெற்ற இணைப்பாட்டங்கள்
அவுஸ்திரேலியா ஆரோன் பிஞ்ச்- டேவிட் வோனர்
146ஓட்டங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக
123ஓட்டங்கள் இங்கிலாந்துக்கு எதிராக
121ஓட்டங்கள் பங்களாதேஷுக்கு எதிராக
இந்தியா ரோஹித் சர்மா- ராகுல்
189ஓட்டங்கள் இலங்கைக்கு எதிராக
180ஓட்டங்கள் பங்களாதேசுக்கு எதிராக
136ஓட்டங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக
இங்கிலாந்து பெயர்ஸ்டோ- ஜேசன் ரோய்
160ஓட்டங்கள் இந்தியாவுக்கு எதிராக
128ஓட்டங்கள் பங்களாதேஷுக்கு எதிராக
124ஓட்டங்கள் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக
123ஓட்டங்கள் நியூசிலாந்துக்கு எதிராக
இதுவரை முடிவில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள்
ரோஹித் சர்மா இந்தியா) 648ஓட்டங்கள்
டேவிட் வோனர்(அவுஸ்திரேலிய) 647ஓடடங்கள்
ஷகிப் அல் ஹசன் (பங்களாதேஷ்) 606ஓட்டங்கள்
ஆரோன் பிஞ்ச் (அவுஸ்திரேலியா) 506ஓட்டங்கள்
ஜோ ரூட் (இங்கிலாந்து) 500ஓட்டங்கள்
அதிக விக்கெட்டுகள்
மிட்செல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா) 27விக்கெட்
முஸ்தாபிசுர் ரஹ்மான்(பங்களாதேஷ்) 20விக்கெட்
ஹோப்ரா ஆச்சர் (இங்கிலாந்து) 19விக்கெட்
பெர்குசன் (நியூசிலாந்து) 18விக்கெட்
ஜஸ்பிரிட் பும்ரா (இந்தியா) 18விக்கெட்
முகம்மது ஆமீர் (பாகிஸ்தான்) 17விக்கெட்
எம்.எஸ்.எம். ஹில்மி