விதிகளில் மாற்றம் வருமா? | தினகரன் வாரமஞ்சரி

விதிகளில் மாற்றம் வருமா?

உலக கிண்ண இறுதிப் போட்டி சர்ச்சை:

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரங்களில் நடைபெற்ற 12வது உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பம் முதலே காலநிலை குளறுபடி மற்றும் நடுவர்களில் தவறான தீர்ப்புகள் என போட்டி முழுவதும் சர்ச்சைகளுடன், சுவாரஷ்மும் நிறைந்த தொடராகவே நடந்து முடிந்துள்ளது. 

இம்முறை பலம்வாய்ந்த இந்திய, அவுஸ்திரேலிய அணிகளை பார்வையாளர்களாக இருக்கவிட்டு எதிர்பாராதவிதமாக நியூசிலாந்து-  – இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியமையும், 1992ஆம் ஆண்டின் பின்னர்  ஆசியப் பிராந்திய அணியொன்று இறுதிப்போட்டிக்குத் தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் தெரிவு செய்யப்படாமையும் குறிப்பிடத்தக்கதாகும். 

உலகக் கிண்ணத் தொடர் வரலாற்றில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டி இதுவாகும். ஆயிரக்கணக்கான மைதான ரசிகர்களையும், கோடிக்கணக்கான தொலைக்காட்சி ரசிகர்களையும் ஆசன நுணியில் உட்காரவைத்து இறுதிவரை பரபரப்பாக பார்க்க வைத்த போட்டியாக இம்முறை உலகக் கிண்ண இறுதி போட்டி அமைந்திருந்தது.  

மிகவும் விறுவிப்பாக நடைபெற்ற இப்போட்டி சமநிலையில் முடிவுற்று, முதல்முறையாக உலகக் கிண்ணத் தொடரின் இறுதியாட்டம் சுப்பர் ஓவர் வரை சென்று, அதிலும் சமநிலை கண்டதால் ஒவ்வொரு அணியும் விளாசிய பௌண்டரி கணக்கெடுக்கப்பட்டு அதிக பெளண்டரி அடித்த இங்கிலாந்து அணி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் இம்முடிவு குறித்து உலக கிரிக்கெட் வர்ணனையாளர்கள், விற்பன்னர்கள், இந்நாள், முன்னாள் வீரர்களும் கடும் கண்டனங்களையும் அதிருப்தியையும் ஊடகங்களிலும், வலைத்தளங்களிலும் வெளியிட்டு வருகின்றனர். தொடர் முடிந்து ஒருவாரகாலமாகியும், கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல வேறு துறைசார்ந்தவர்களும் இம்முடிவை வண்மையாகக் கண்டித்துள்ளனர். இறுதியாட்டத்தில் கடைசி ஓவரில் நான்காவது பந்தில் “ஓவர் த்ரோ’ மூலம் ஆறு ஓட்டங்கள் கொடுத்தமை தவறு என்ற கருத்து பல தரப்புகளிலிருந்தும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. 

கடைசி 3பந்துகளில் 9ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 4வது பந்தில் 2ஓட்டங்கள் எடுக்க முயற்சித்தார். 

அப்போது களத்தடுப்பில ஈடுபட்டிருந்த குப்தில் எறிந்த பந்து, ஸ்டோக்கின் துடுப்பு மட்டையில்பட்டு பவுண்டரி சென்றது. இதற்கு நடுவர் குமார் தர்மசேன 6ஓட்டங்கள் கொடுத்தார். விதிப்படி பந்தை எறியும் முன் எடுத்த ஓட்டத்துடன் பவுண்டரியைச் சேர்க்க வேண்டும். இதன்படி 2வது ஓட்டம் எடுக்க மறு முனையில் ஓடிய ரஷித் எல்லைக்கோட்டை எட்டவில்லை. இதற்குள் பந்து ஸ்டொக்கின் துடுப்புமட்டை விளிம்பில் பட்டு பவுண்டரி சென்றது. இதற்கு 5ஓட்டங்கள் மட்டும்தான் கொடுத்திருக்க வேண்டும் என முன்னாள் அவுஸ்திரேலிய நடுவர் சைமன் டோபல் உட்பட பலர் தெரிவித்துள்ளனர். 

‘ஓவர் த்ரோ’ விதிமுறை 19.8ஆம் பிரிவின்படி ஓவர் துரோ பவுண்டரியாக மாறும் போது 4ஓட்டங்கள் மற்றும் வீரர்கள் ஓடி எடுத்த ஓட்டங்களுடன் சேர்த்து வழங்கப்பட வேண்டும். மேற்படி ஓவர் துரோவின் போது மறுமுனையில் ஓடிய ரஷீத் ஓட்டத்தை பூர்த்தி செய்யவில்லை. எனவே அங்கு 5ஓட்டங்களைத்தான் வழங்கியிருக்க வேண்டும். அப்படிவழங்கியிருந்தால் 5வது பந்தை ஆதில் ரஷீத்தான் சந்தித்திருக்க வேண்டும். அப்போது சில வேளை சுப்பர் ஓவருக்குச் செல்லாமலே நியூசிலாந்து வெற்றிபெற வாய்பேற்பட்டிருக்கும். 

 ‘ஓவர் த்ரோ’வுக்கு 6ஓட்டங்கள் கொடுத்த களநடுவர் குமார் தர்மசசேன ஏற்கனவே ரோஸ் டெய்லருக்கும் தவறான ஆட்டமிழப்பு வழங்கியிருந்தார். சிறந்த நடுவர் என்று ஐ. சி. சி. யினால் விருது பெற்ற குமார் தர்மசேன அண்மைக்காலங்களில் மற்றொரு நடுவரிடமோ அல்லது மூன்றாவது நடுவரிடமோ ஆலோசனை பெறாமல் அவசரமாக தீர்ப்புகளை வழங்குகிறார். இது அவரின் மெத்தெனப்போக்கு என்ற விமர்சனங்களும் எழுந்த வண்ணமுள்ளது. இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் களநடுவர்களின் பிழையான தீர்ப்புகளால் பல வீரர்கள் எரிச்சலடைந்த சம்பங்கள் இடம்பெற்றதைக் காணக்கூடியதாகவிருந்தது. ஆரம்பச் சுற்றில் அவுஸ்திரேலிய-மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியின் போது ஒரே வீரருக்கு 3முறை பிழையான ஆட்டமிழப்பை கொடுத்ததை வர்ணனையாளர்கள் விமர்சித்ததை ஐ. சி. சி. கண்டித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

ஐ. சி. சி. யின் போட்டி விதிமுறையை பலர் விமர்சித்துள்ளனர். உலகக் கிண்ணம் போன்ற முக்கிய போட்டிகளில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் போட்டி விதிகள் சொதப்புவதே தொடர்கதையாகவுள்ளது. 1992ம் ஆண்டு அரையிறுதிப் போட்டியில் வெல்லும் வாய்ப்பிருந்த தென்னாபிரிக்க அணிக்கு மழை குறுக்கிட 1பந்துக்கு 22ஓட்டம் என வினோதமான விதிமுறை விளையாட இங்கிலாந்து இறுதிக்குத் தெரிவானது. 1999இல் அவுஸ்திரேலியா- தென்னாபிரிக்கா மோதிய அரையிறுதி சமநிலையில் முடிந்தது. அப்போது ‘சுப்பர் சிக்ஸ்’ சுற்றில் அதிக ஓட்டவீதம் பெற்ற விதிப்படி அவுஸ்திரேலிய இறுதியாட்டத்துக்குச் சென்றது. 

இப்போது இறுதியாட்டம் சமநிலையில் முடிய சுப்பர் ஓவரும் சமநிலையில் முடிய பவுண்டரி அடிப்படையில் இங்கிலாந்துக்குக் கிண்ணத்தைக் கொடுத்தது. ஆனால் இதற்கு முன் சில தொடர்களில் மழை குறுக்கிட்டால் அல்லது ரை ஆனால் கிண்ணம் பகிர்ந்து வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களும் இருந்தது.  

இம்முறை சுப்பர் ஓவரில் முடிவு எட்டப்படும் என்றனர் ஐ. சி. சி. யினர். இதிலும் குழப்பமாகவே முடிந்தது. ஒவ்வொரு முறையும் விதிகளை மாற்றி ஆட்டத்தையும், ரசிகர்களையும் குழப்பாமல் மற்றைய விளையாட்டுகளில் இருப்பதைப் போல் நிலையான விதிகளைக் கொண்டுவர வேண்டும் என்பதே கிரிக்கெட் விற்பன்னர்களிதும், ரசிகர்களினதும் எதிர்பார்ப்பாகும். 

இம்முறை உலகக் கிண்ணம் வென்ற இங்கிலாந்து அணியில் உலகின் பல நாடுகளில் பிறந்து இங்கிலாந்து குடியுரிமைபெற்று விளையாடிய வீரர்களின் உலகக் கிண்ணமென்றே கூறவேண்டும். 

அணியை வழி நடத்திய இயன் மோர்கன் அயர்லாந்தைச் சேர்ந்வர். ஆதில் ரஷித், மொயின் அலி பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள், ஜேசன் ரோய், ரொம் கரன் தென்னாபிரிக்காவைச் சேர்ந்தவர்கள். மேற்கிந்திய வீரரான ஜோப்ரா ஆச்சரை அணிக்கு உள்வாங்குவதற்காகவே அணி நிர்வாகம் பல ஆண்டுகளாக இருந்து வந்த சட்டவிதியையே மாற்றியது இங்கு குறிப்பிடத்தக்கது.  

இறுதிப் போட்டியுட்பட தொடர் முழுவதும் தனது திறமையால் இங்கிலாந்து அணிக்கு சிறந்த பங்காற்றிய சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 12வயதில் இங்கிலாந்து வந்த பென் ஸ்டொக்ஸ் நியூசிலாந்துக்கே வினையாக மாறினார். அவரின் தந்தை நியூசிலாந்து ரக்பி வீரர், தாயார் கிரிக்கெட் வீராங்கனை. ‘மகனின் திறமையைக் கண்டு மகிழ்ந்தாலும், நியூசிலாந்து அணியின் பரிதாபத் தோல்வியை தன்னால் ஜீரணிக்க முடியவில்லை’ என்று பென் ஸ்டோக்ஸின் தந்தை போட்டியின் பின் ஒரு பேட்டியின் போது குறிப்பிட்டுள்ளார். 

இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் ஒரு அணி பெற்ற கூடிய ஓட்டங்களாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி பெற்ற 6விக்கெட் இழப்புக்கு 397ஓட்டங்களே பதிவானது.  

எம். எஸ். எம். ஹில்மி   

 

Comments