![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/07/27/q2.jpg?itok=CddRDi3D)
காலி ரத்கம பிரதேசத்தில் டென்னிஸ் பந்தினால் கலக்கி வந்த ஓர் இளைஞன் பின்னாளில் உலகமே வியக்கும் பந்து வீச்சாளராக மாறுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால் பின்னாளில் இலங்கை கிரிக்கெட்டை வெற்றியின்பால் இட்டுச் சென்ற அப்பந்துவீச்சாளர் ஆயிரக்கணக்கான இலங்கை ரசிகர்களின் இதயங்களை வெற்றி கொண்டவர். தனக்கே உரிய வித்தியாசமான சிகை அலங்காரத்துடன், கல்லெடுத்து எறிவது போல் எதிரணியைத் திணரவைக்கும் பந்துவீச்சும் அவரின் தனித்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்திருந்தது. அவர் வேறு யாருமல்ல யோக்கர் மன்னன் என்று அழைக்கப்படும் லசித் மலிங்க. இவர் கடந்த 26ம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற பங்களாதேஷ்- இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது போட்டியுடன் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றார்.
1983ஆம் ஆண்டு பிறந்த லசித் மலிங்க காலி கிரிக்கெட் கழகத்தின் மூலம் முதல்தர கிரிக்கெட் உலகுக்கு அறிமுகமானார். காலி கழகத்தின் பந்துவீச்சாளர் சம்பிக ராமநாயக்க இவரின் வித்தியாசமான பந்து வீச்சுப் பாணியைப் பார்த்து அன்று காலி கிரிக்கெட் கழகத்தில் இணைத்து கொண்டார். அவரது முதல் போட்டியிலேயே துடுப்பாட்ட வீரர்களை தடுமாற வைத்த இவரின் பந்து வீச்சு ஆரம்பப் போட்டியிலேயே அவ்வணியின் வெற்றிக்கு உதவியதோடு அவரின் கிரிக்கெட் வாழ்க்கையும் அன்றே ஆரம்பமானது. சம்பிக ராமநாயக்கவின் உதவியின் மூலம் அவர் கொழும்பு எஸ். எஸ். சி. கழகத்துடன் இணைந்து முதல் தரப் போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்த லசித் மலிங்க 2004ஜுலை மாதம் 1ம் திகதி அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரின் போதே சர்வதேச போட்டிகளில் காலடி எடுத்துவைத்தார்.
இவரின் டெஸ்ட் வாழ்க்கை மிகவும் குறுகியதாகவே அமைந்தது. இவர் டெஸ்ட் போட்டிகளில் 2010ஆண்டு ஓய்வுபெறும் போது 30போட்டிகளில் விளையாடி 101விக்கெட்டுக்களையே கைப்பற்றியிருந்தார். டெஸ்ட் போட்டிகளில் 2010ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக காலி மைதானத்தில் பெற்ற 50ஓட்டங்களுக்கு 5விக்கெட் கைப்பற்றியதே இவரின் சிறந்த பந்து வீச்சாக பதிவாகியுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்கள் விரைவாகக் களைப்படைவதாலும், காயமடைவதாலும் இவரின் டெஸ்ட் வாழ்க்கை தொடர்ந்து ஒரே சீராக இருக்கவில்லை. எனவே ஒரு தொடரில் விளையாடுவதும், விடுவதுமாக இருந்த இவர் டெஸ்ட் தொடரிலிருந்து விரைவாகவே ஓய்வை அறிவித்தார். அதன் பின் இவர் ஒரு நாள் போட்டிகளில் தனது முழுமையான கவனத்தை செலுத்தி ஒருநாள் போட்டிகளில் திறமையை வெளிக்காட்ட ஆரம்பித்தார்.
ஒருநாள் தொடர்களில் ஆரம்ப ஓவர்களைச் சிறப்பாக வீசும் இவர் சர்வதேச கிரிக்கெட் உலகின் ஆரம்ப ஜோடிகளுக்கு இவரின் பந்து வீச்சுக்கு முகம் கொடுப்பது சிம்மசொப்பணமாகவே இருந்தது.
வேகமாகவும் விக்கெட்டை நோக்கி யோக்கர் முறையில் பந்து வீசுவதால் கடைநிலை ஆட்டக்காரர்கள் இவரின் பந்து வீச்சை அச்சத்துடனேயே எதிர்கொள்வர்.
இவர் தனது ஒருநாள் அறிமுகத்தை 17-.07-.2004ம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிராக தம்புள்ளையில் நடைபெற்ற ஆசியக் கிண்ணப்போட்டியின் போது பெற்றார். இதுவரை 255போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 335விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். எட்டு முறை 5அல்லது அதற்கு மேல் விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ள இவர் 2011ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் கென்ய அணிக்கு எதிராக 38ஓட்டங்களுக்கு 6விக்கெட் கைப்பற்றியதே இவரின் சிறந்த பந்து வீச்சுப் பெறுதியாகும்.
மேலும் இவர் ஒருநாள் போட்டிகளில் 4முறை ஹெட்ரிக் சாதனை புரிந்துள்ளார்.
உலகக் கிண்ணப் போட்டிகளில் இரண்டு முறை ஹெட்ரிக் சாதனை புரிந்த ஒரே வீரர் லசித் மலிங்கவே. இவர் 2007ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியின் போது முதலாவது ஹெட்ரிக் சாதனை படைத்ததோடு அவ்வாண்டு உலகக் கிண்ணத் தொடரின் கவர்ச்சிகரமான வீரராகவும் தெரிவு செய்யப்பட்டார். ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டைக் கைப்பற்றிய ஒரே பந்து வீச்சாளர் லசித் மலிங்க ஆவார். இவர் மேற்படி உலகக் கிண்ணத் தொடரில் ‘சுப்பர் 6’ சுற்றில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியொன்றில் 45வது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளிலும், 47வது ஓவரில் முதல் இரண்டு பந்துகளிலும் 2விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
2011ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியின் போதும் கென்யாவுக்கு எதிராக ஹெட்ரிக் சாதனைபடைத்த இவர் உலகக் கிண்ணத் தொடரில் இரண்டு முறை ஹெட்ரிக் சாதனைபடைத்த முதல் வீரரும், ஒரே வீரர் இவராவார்.
குறுகிய ஓவர்களைக் கொண்ட டி/டுவெண்டி போட்டிகளில் சிறப்பாகப் பந்து வீசிவரும் லசித் மலிங்க 2006ம் ஆண்டு இங்கிலாந்துடனான போட்டியுடன் இவ்வகைப் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 73 20/20போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 97விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 2012ம் ஆண்டு பல்லேகல மைதானத்தில் இங்கிலாந்துடனான ஒரு போட்டியில் 31ஓட்டங்களுக்கு 5விக்கெட் கைப்பற்றியதே அவரது சிறந்த பந்து வீச்சாகும். அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் 20/டுவெண்டி உலகக் கிண்ணத் தொடர் வரை இவ்வகைப் போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளை விட லசித் மலிங்க இவ்வகைப் போட்டிகளில்தான் சிறந்து விளங்கினார். இங்கிலாந்து கென்ட் அணி, மெல்பேர்ன் ஸ்டார், மும்பை இந்தியன் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.
இந்திய பிரிமியர் லீக் தொடரில் மும்மை இந்தியன் அணியின் சிறந்த பந்து வீச்சாளராக இருந்து வரும் லசித் மலிங்க அண்மையில் முடிவுற்ற பிரிமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன் அணி சம்பியன் பட்டம் பெற லசித் மலிங்கவின் பந்து வீச்சே முக்கிய காரணமாக அமைந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
2017, 2018ம் ஆண்டுகளில் லசித் மலிங்க சற்று பின்னடைவு அடைந்த காலமாகும். இக்காலப் பகுதியில் இலங்கை அணி ஒருநாள், மற்றும் ரி/டுவெண்டி போட்டிகளில் பல தோல்விகளைச் சந்தித்து விமர்சனங்களுக்குள்ளான காலம். அக்காலப் பகுதியில் லசித் மலிங்கவைப் பற்றி பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வந்த வண்ணமிருந்தன. அவரின் பந்து வீச்சு, தொந்தி வயிறு பற்றியெல்லாம் அமைச்சு மட்டத்திலும் பேசு பொருளாக இருந்தது. இவற்றுக்கெல்லாம் அவ்வப்போது காரசாரமான முறையில் பதிலளித்தது மட்டுமல்லாமல் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு மீண்டும் தனது வழமையான திறமையை வளர்த்துக் கொண்டு நடந்து முடிந்த உலகக் கிண்ணப் போட்டியின் போது திறமையாக விளையாடிதன் பின் ஓய்வு பெறுகிறார் லசித் மலிங்க.
யோக்கர் மன்னரான இவர் தனது வேகப்பந்து வீச்சு போலவே தனது ஊடகப் பேட்டிகளிலும் தனக்கு எதிரான, தனது திறமைக்கு சவால் விடும் அனைவருக்கும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை உபயோகித்து பதிலளிப்பார்.
அவர் தனது ஓய்வை அறிவிக்கும் போது கூட ‘இத்தனை காலமும் என்னை அணியிலிருந்து வெளியேற்ற முயற்சித்த அனைவருக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன். ஏனென்றால், நான் எனது திறமையின் காரணமாக மாத்திரமே அணியில் நீடித்திருந்தேன். கிரிக்கெட் வீரர் என்ற ரீதியில் நான் சிறப்பாகச் செயற்பட்டுள்ளேன்’ எனக் குறிப்பிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
எம்.எஸ்.எம் ஹில்மி