வடகொரிய, அமெரிக்க உறவில் மீண்டும் அதிக திருப்பங்களை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைக்கு பின்பு ஆசியாவின் பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்த முனைகின்றது. இரு நாட்டுக்குமான உறவில் ஏற்பட்ட விரிசலை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இன் கொரிய விஜயம் சரிசெய்திருந்தது கவனிக்கத்தக்கது. இரு நாடுகளும் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்க திட்டமிடுவதாகவும் அதற்கான தயார்ப்படுத்தலை அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மேற்கொண்டிருந்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் வட கொரியாவே மீளவும் தனது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் விதத்தில் ஏவுகணைப் பரிசோதனையை நிகழ்த்தியுள்ளது. இக்கட்டுரையும் வட கொரியா-, -அமெரிக்க மட்டத்தில் நிலவும் அரசியல் சூழலையும் தந்திரங்களையும் புரிந்து கொள்வதாக அமையவுள்ளது. .
அண்மையில் (31.07.2019) வட கொரியா இரு கண்டம் வி-ட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்துள்ளதாக தென் கொரியா அறிவித்தது. இந்த ஏவுகணையானது 155 மைல் தூரம் சென்று தாக்கு திறன் கொண்டதாகவும் தெரியவருகிறது. இது ஜப்பானியக் கடல்பகுதியில் வீழ்ந்ததாகவும் தென் கொரியா அறிவித்துள்ளது. ஆனால் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சு தென் கொரியாவின் தகவலை மறுத்துள்ளது. தமது கடல் பிராந்தியத்தில் எந்தவித பரிசோதனையும் நிகழவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் தென் கொரியாவோ மீண்டும் மீண்டும் வடகொரியாவின் பரிசோதனை நிகழ்ந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. இது புதிய வகை ஏவுகணை என்றும் குறைந்த தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை பரிசோதனை வடகொரியாவின் கிழக்கு கடல்பகுதியில் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதையும் ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தியுள்ளது. அதே நேரம் இன்னோர் தென்கொரிய அதிகாரி இது பாரிய துாரம் சென்று தாக்கும் திறன் கொண்டது எனக் குறிப்பிட்டுள்ளதுடன் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு இராணுவ நிகழ்ச்சியின் மீதான ஆத்திரத்தினாலேயே அத்தகைய பரிசோதனையை வடகொரியா மேற்கொண்டதாக மேலும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய நடவடிக்கையை வடகொரியா நிறுத்த வேண்டும் என தென்கொரியா அறிவி-த்துள்ளது. இத்தகைய பதட்டமான சூழலை அடுத்து அமெரிக்க நடவடிக்கைகள் இப்பிராந்தியத்தில் மீண்டும் ஆரம்பித்துள்ளன.
குறிப்பாக, கிழக்கு ஆசியான் நாடுகளுக்கான பாங்கொக்கில் நிகழும் (02.08.2019) உரையாடலில் கலந்து கொண்ள்ள வருகை தந்துள்ள அமெரிக்க விசேட துாதுவர் ஸரீபன் பெகன் தென்கொரிய மற்றும் ஜப்பானிய பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். அந்த சந்திப்பில் வடகொரியர்களை அழைத்திருந்த போதும் அவர்கள் சமூகமளிக்கவில்லை. குறிப்பாக அமெரிக்கா, இரு நாடுகளுடனான சந்திப்பில் வட கொரியாவுடனான பேச்சுக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் சில முன் மொழிவுகளை அமெரிக்க விசேட பிரதிநிதி தெரிவித்துள்ளார். இதே நேரம் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மைக் பாம்பியோ வடகொரியாவுடன் பேசுவதற்கான வாய்ப்பினை எதிர்பார்த்திருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் அதனை ஆரம்பிக்க முடியுமெனவும் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகம் அத்தகைய பேச்சுக்களை ஆரம்பிப்பதில் ஆர்வமாக உள்ளது எனவும் இராஜதந்திர நடவடிக்கைகளில் சிறிய சறுக்கல்கள் இயல்பானவை எனவும் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
2012 இல் ஆட்சிக்கு வந்துள்ள கிம் ஜோன் உன் இதுவரை 80இற்கு மேற்பட்ட ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளார். 2016 இல் இரு அணுவாயுதப் பரிசோதனையை செய்துள்ளது வடகொரியா. அதே ஆண்டு 26 மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்திருந்தமை குறிப்பி-டத்தக்கதாகும். 2017 இல் மட்டும் 18 ஏவுகணைகளை பரிசோதித்தது. அவற்றில் 5 தோல்வியில் முடிந்துள்ளமையும் கவனிக்கத்தக்க விடயமாகும். அவற்றில் 2 நடுத்தரவீச்சு ஏவுகணைகளாகும். இவற்றை பரிசோதிப்பதன் ஊடாக வட கொரியா தனது பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ள முனைகிறது என கிம் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் இரட்டை அணுகுமுறையால் ஆத்திரமடைந்துள்ள வட கொரியா, பிராந்திய நாடுகளை மட்டுமல்ல, அமெரிக்காவை அச்சுறுத்தும் பாணியிலேயே தற்போதைய ஏவுகணைப் பரிசோதனையை நடாத்தியுள்ளமை தெளிவாக தெரிகிறது. குறிப்பாக கூட்டு இராணுவ பயிற்சிக்கான திட்டமிடலை தாம் செய்துள்ளதாக தென் கொரியா அண்மையில் அறிவி-த்தது அதனை அடுத்தே வடகொரியா தனது பாதுகாப்பினையும் எதிர்த் தரப்புக்குமான அச்சுறுத்தலையும் முன்வைக்கும் விதத்தில் இப்பரிசோதனையை செய்துள்ளது.
இத்தகைய ஏவுகணைத் தாக்குதல் திறனானது வடகொரியாவின் பிராந்திய நெருக்கடியை மட்டுமல்ல சர்வதேச நெருக்கடியையும் தடுக்ககூடியதாகும். குறிப்பாக அமெரிக்காவி-ன் எல்லைவரை சென்று தாக்கும் திறனுடைய ஏவுகணைகளை வடகொரியா கொண்டுள்ளது. அதன் பாதிப்பே அமெரிக்கா வடகொரியா மீது நெருக்கடி கொடுக்கவும், அதே நேரம் தாக்குதலை மறைத்து பேசுவதற்கு அழைப்பு விடுவதுமாக உள்ளது. ஒரு வகையில் இராஜதந்திர நகர்வாகவே தற்போது அமெரிக்கா, வடகொரிய விடயத்தை கையாள விரும்புகிறது. வெளிப்படையாக தாக்குதல் திறனுடைய வடகொரியாவை எதிர்கொள்ளாது இராஜதந்திர ரீதியில் எதிர்கொள்ள முனைகிறது. அதற்கு அமைவாகவே சமாதானத்தையும் போர் பற்றிய உரையாடலையும் ம் மாறிமாறி அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.
எனவே வடகொரியாவின் அணுவாயுதமும் ஏவுகணைத் தொழில் நுட்பமும் அமெரிக்காவின் அரசியல் அதிகாரத்தை மட்டுமல்ல அதன் தாய் நிலத்தையே தாக்க வல்லதாக அமைந்துள்ளது. அதனாலேயே தொடர்ச்சியான இரு வழி அணுகுமுறையை கடைப்பிடித்து வருகிறது அமெரிக்கா. அமெரிக்காவின் பாதுகாப்பு அச்சுறுத்தலே வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை முயற்சியாகும். அத்துடன் கிழக்கு மற்றும் தென்கிழக்காசியாவானது அமெரிக்காவினது பொருளாதார மற்றும் இராணுவ விடயங்களில் மிக முக்கிய புவிசார் அரசியல் பிராந்தியமாகும் இப்பகுதியை இழப்பதென்பது இரட்டிப்பு இழப்பீடாக அமைந்துவிடும் என அமெரிக்கா அச்சமடைகிறது. அதனாலேயே வடகொரியாவை கையாளும் வழிமுறையை மாற்றி மாற்றி பின்பற்றி வருகிறது.
ஆனால் வடகொரியாவுக்கு எப்போதும் அச்சுறுத்தல் உண்டு. காரணம் தனித் தலைமைகளால் உலகத்தையோ தேசியங்களையோ பாதுகாக்க முடியாது. அத்துடன் ஒரு தேசத்தின் தேசியமும் ஜனநாயகமும் ஒன்றிணைகின்றபோதே அந்த தேசத்தின் கட்டமைப்பும் பொருளாதாரமும் இராணுவ பலமும் அரசியல் உறுதியும் சாத்தியமாகும். ஒற்றை தலைமை அதிகாரத்தினால் தொடர்ச்சியான பாதுகாப்பினை அந்த தேசத்திற்கு ஏற்படுத்த முடியாது. அதற்கான தயார்ப்படுத்தலை வடகொரியா வும் அதன் தலைமையும் ஏற்படுத்த வேண்டும். அதுவே அதன் எதிர்காலத்திற்கு இலாபகரமானதாக அமையும். அமெரிக்காவின் இன்றைய தலைமையை வடகொரியா கையாண்டாலும் எதிர்கால தலைமைகளிடம் திணறவேண்டிய நிலை தவிர்க்க முடியதாததாகும்.
எனவே, வடகொரியாவின் ஆயுதப் போட்டி நீடித்த நிலையான அரசியல் உறுதிப்பாட்டை எட்டுவது அவசியமானது. அமெரிக்காவின் நலன் மட்டுமல்ல அப்பிராந்திய நாடுகளின் நலனும் இத்தகைய பரிசோதனைகளில் தங்கியுள்ளது. அமெரிக்காவின் இரட்டை அணுகுமுறைக்கு வடகொரியா கொடுத்த பதிலாகவே ஏவுகணைப் பரிசோதனை அமைந்துள்ளது.
கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்