![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/08/03/w5.jpg?itok=9NGAh7fs)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் நடாத்தப்பட்ட 50ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் கடந்த மாதம் முடிவுற்ற கையோடு ஐ.சி.சி. யினால் முதல் முறையாக நடத்தப்படும் டெஸ்ட் சம்பியன் ஷிப் போட்டிகள் கடந்த 1ம் திகதி வியாழக்கிழமை இங்கிலாந்து- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இங்கிலாந்து பர்மிங்ஹாம் மைதானத்தில் நடைபெறும் ஐந்து போட்டிகளைக் கொண்ட அஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியுடன் ஆரம்பமாகின்றது.
டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டித் தொடரை நடத்துவதற்கு ஐ.சி.சி. 2010ஆம் ஆண்டே ஆயத்தங்களைச் செய்து வந்தது. ஆனால் அதன் பின் பல சந்தர்ப்பங்களில் அத்தொடரை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டாலும் பல்வேறு காரணங்களுக்காக அத்திட்டங்கள் கைவிடப்பட்டதுடன் இவ்வருடம் முதல் அத் தொடர் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை ஐ. சி. சி. சிறப்பாகச் செய்து முடித்துள்ளது.
டெஸ்ட் சம்பியன் ஷிப் தொடரின் முதற் கட்டமாக இங்கிலாந்து- அவுஸ்திரேலிய, நியூசிலாந்து-, இலங்கை, மேற்கிந்திய தீவுகள்- இந்திய அணிகளுக்கிடையில் இம்மாதம் நடைபெறும் டெஸ்ட் தொடருடன் ஆரம்பமாகி 2021ம் ஆண்டு மேற்கிந்திய,- இலங்கை அணிகளுக்கிடையில் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் 2போட்டிகள் கொண்ட தொடருடன் டெஸ்ட் சம்பியன் ஷிப் முதற் சுற்று ஆட்டங்கள் முடிவுறுகின்றன. புள்ளிப்பட்டியலில் முதலிரு இடங்களைப் பெறும் அணிகள் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதவிருக்கின்றமை குறிப்படத்தக்கது.
இரண்டு வருடங்களாக நடைபெறவிருக்கும் இத்தொடரில் டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இலங்கை, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய 9நாடுகள் மோதவிருப்பதுடன் இதில் 27தொடர்களில் மொத்தமாக 72போட்டிகள் நடைபெறவுள்ளன. அண்மையில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான், அயர்லாந்து இத் தொடரில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
டெஸ்ட் தொடர்களில் பங்கு கொள்ளும் அணிகள் தாம் விரும்பிய 6நாடுகளுடன் 6டெஸ்ட் தொடர்களில் மோத வேண்டும். உள்ளூர் மைதானங்களில் மூன்று தொடர்களிலும், வெளிநாட்டு மைதானங்களில் மூன்று தொடர்களிலும் பங்குகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு தொடரும் 2, 3, 4, 5போட்டிகள் கொண்ட தொடராக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொடரிலும் போட்டிகளின் எண்ணிக்கை கூடினாலும் அத்தொடருக்கு வழங்கப்படும் புள்ளிகள் சம அளவிலேயே இருக்கும். ஒவ்வொரு தொடரிலும் வெற்றி பெறும் அணிக்கு 120புள்ளிகள் வழங்கப்படும். ஒரு அணி பங்கு பற்றும் ஆறு தொடர்களிலும் எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மொத்தமாக 720புள்ளிகள் வழங்கப்படும். ஒவ்வொரு அணிகளும் தாம் விளையாடும் போட்டிகளின் எண்ணிக்கை கூடிக் குறைந்தாலும் புள்ளிகள் சமமாகவே வழங்கப்படும். இந்தச் சம்பியன் ஷிப் தொடரில் இங்கிலாந்து அணியே ஆகக் கூடிய போட்டிகளில் விளையாடுகின்றது. அதன் எண்ணிக்கை 22ஆகும். குறைந்த போட்டிகளில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் (13) மோதுகின்றன.
புள்ளிகள் வழங்கப்படும் முறை
2போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானால் 1போட்டிக்கு 60புள்ளிகள் வீதம் 2போட்டிகளுக்கு 120புள்ளிகள் வழங்கப்படும். போட்டி ஓட்டங்கள் சமநிலைபெற்று ரையில் முடிந்தால் தலா 30புள்ளிகள் வழங்கப்படும். போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தால் ஒவ்வொரு அணிக்கும் 20புள்ளிகள் வீதம் வழங்கப்படும்.
3டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானால் 1போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 40புள்ளிகள் வழங்கப்படும். ரையில் முடிந்தால் இரு அணிகளுக்கும் 20புள்ளிகள் வீதம் வழங்கப்படும். முடிவு பெறப்படாமல் சமநிலையில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா 13.3புள்ளிகள் வீதம் வழங்கப்படும்.
4டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானால் 1போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 30புள்ளிகள் வழங்கப்படும். ரையில் முடிந்தால் இரு அணிகளுக்கும் 15புள்ளிகள் வீதம் வழங்கப்படும். முடிவு பெறப்படாமல் சமநிலையில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா 10புள்ளிகள் வீதம் வழங்கப்படும்.
5டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானால் 1போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 24புள்ளிகள் வழங்கப்படும். ரையில் முடிந்தால் இரு அணிகளுக்கும் 12புள்ளிகள் வீதம் வழங்கப்படும். முடிவு பெறப்படாமல் சமநிலையில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா 8புள்ளிகள் வீதம் வழங்கப்படும்.
டெஸ்ட் சம்பியன் ஷிப் போட்டித் தொடர் நடைபெறும் காலப் பகுதியில் தொடருடன் சம்பந்தப்படாத டெஸ்ட் தொடர்களும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தனது விருப்பப்பட்டியலில் இல்லாத அணியுடன் மோதும் போட்டிகள் இந்த சம்பியன் ஷிப் புள்ளிப்பட்டியலில் இடம்பெறாது. இவ்வருட இறுதியில் இங்கிலாந்து- - நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறும் தொடர் சம்பியன் ஷிப் புள்ளிப்பட்டியலில் இணைத்துக் கொள்ளப்படமாட்டாது. இது போல் பல தொடர்கள் நடைபெறும்.
இத்தொடர் தொடர்பாக முன்னாள் வீரர்கள் பாதகமான தமது கருத்துக்களை கூறியுள்ளனர். சிலர் இத்தொடர் முழுமையான ரவுண்ட் ராபின் சுற்றாக இல்லாமையினால் பல விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். அனைத்து அணிகளுடனும் மற்றைய அணிகளை மோதவிடாமல் தமது புரிந்துணர்வு அணிகளுடன் மட்டுமே மோதுகின்றன. குறிப்பாக வலிமையான அணிகளுடன் மோதுவதைத் தவிர்த்து எளிதான சுற்றுக்களை அமைத்துக்கொள்வதாகக் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 12வது உலகக் கிண்ணத் தொடர் போல் டெஸ்ட் சம்பியன் ஷிப் இறுதிப் போட்டியும் சம நிலையில் முடிந்தால் முதற்சுற்றில் கூடிய புள்ளிகள் பெற்ற அணி சம்பியனாக அறிவிக்கப்படும்.
எம்.ஐ.எம். சுஹைல்