![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/08/10/q3.jpg?itok=lsWgFvVL)
1990களில் இலங்கை அணி சர்வதேச ரீதியில் அதிகம் பிரபலமான ஒரு அணியாக இருக்கவில்லை. 1996ம் ஆண்டு இலங்கை அணி உலகக் கிண்ணம் வென்றவுடன் இலங்கை அணி மட்டுமல்ல, அணியைப் பயிற்றுவித்த டேவ் வட்மோரின் பெயரும் சர்வதேச ரீதியில் புகழ் பெற ஆரம்பித்தது. உலகக் கிண்ணம் வெல்வதற்கு முன் கத்துக்குட்டியாக இருந்த இலங்கை அணியை உலகக் கிண்ணம் வெல்லும் அணியாக உருவாக்கியதில் பெரும் பங்கு பயிற்சியாளர் டேவ் வட்மோரையே சாரும். பொதுவாக ஒரு அணியை ஆரம்பம் முதல் கட்டியெழுப்புவது என்பது இலகுவான காரியம். பயிற்சியாளரின் எண்ணம் போல் சகல வீரர்களையும் உருவாக்கலாம். கிண்ணம் வென்ற பின் வீரர்கள் கூடுதலான போட்டிகளில் பங்குகொண்டதால் இலங்கை அணியின் திறமை வளர்ந்தது; எனவே டேவ் வட்மோரின் சேவைக்காலமும் முடிவுற்றது. அதன் பின் வட்மோர் வேறு பல நாடுகளுக்கு பயிற்சியளித்தாலும் பெரிதாக எடுபடல்லை.
ஹதுருசிங்க விடயத்திலும் இதுவே நடந்துள்ளது. கத்துக்குட்டிகளாக இருந்த பங்களாதேஷ் அணியை ஆரம்பம் முதலே கட்டியெழுப்பி ஒரு கட்டுக் ேகாப்புக்குள் கொண்டு வந்து பல பலம் வாய்ந்த அணிகளையெல்லாம் வெல்ல வைத்து சிறந்த பயிற்சியாளர் என்ற பெயரெடுத்த அவர், 2019ம் ஆண்டு நடைபெறவிருந்த உலகக் கிண்ணத் தொடர் வரை பங்களாதேஷ் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் பதவிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் இலங்கை அணயின் வேண்டுகோளுக்கிணங்க பங்களாதேஷ் அணியை பரிதவிக்கவிட்டு திடீரென பங்களாதேஷ் பயிற்சியாளர் பதவியை ராஜினாமாச் செய்த அவர் இலைங்கை அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்றார்.
அச் சமயம் இலங்கை அணி தொடர் தோல்விகளுக்கு முகம் கொடுத்துவந்ததால் பயிற்சியாளர்கள், முகாமையாளர்கள், தேர்வாளர்கள் என அனைவரையும் அடிக்கடி மாற்றினர். இந்த 9ஆண்டுகளில் இலங்கை அணிக்கு ட்ரெவர் பெய்லி, ஸ்டுவர்ட் லோ, ருமேஸ் ரத்நாயக்க, ஜெப் மார்ஷ், கிரஹம் போர்ட், போல் பாப்ரஸ், மார்வன் அத்தபத்து, ஜெரோம் ஜயரத்ன, மீண்டும் கிரஹம் போர்ட், நிக் போத்தாஸ் என பத்துப் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படட்னர். இதற்கு முடிவு கட்டவே சிறந்த பயிற்சியாளர் எனப் பெயரெடுத்த ஹதுருசிங்க நியமிக்கப்பட்டார்.
2017ம் ஆண்டின் இறுதிப் பகுதியிலிருந்து 2020டிசம்பர் வரை என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் மிகப் பெரிய சம்பளத்துடனும் வேறும் கொடுப்பனவுகளுடனும் இவரை தலைமைப் பயிற்சியாளராக நியமித்தது இலங்கை கிரிக்கெட். மற்றைய பயிற்சிகளுக்கு வழங்கப்படாத பல அதிகாரங்களும் அவருக்கு வழங்கப்பட்டன. ஆனாலும் அணியின் முன்னேற்றத்தில் எவ்வித மாற்றமும் தென்படவில்லை. ஒவ்வொரு தொடரிலும் இலங்கை அணி தோல்வியுறுவதும், கப்டனை மாற்றுவதும், வீரர்களை மாற்றுவதைத் தவிர இலங்கை அணியில் முன்னேற்றம் காணப்படவில்லை. மேலும் இவரின் பயிற்சிக் காலத்தில் வீரர்களுக்கிடையில் பிளவுகளும், மனக்கசப்புகளும் ஏற்பட்டன. வலைத்தளங்களில் வீரர்களின் மனைவிமாரும் கருத்துக்களை வெளியிட்டு மோதிக்கொள்ளும் அளவுக்கு அணி பிளவடைந்து பின்னடைவைச் சந்தித்தது.
அதனால் உலகக் கிண்ணம் ஆரம்பமாவதற்கு முன்பே ஹத்துருசிங்கவின் பதவி பறிக்கப்படும் எனக் கூறினாலும், உலகக் கிண்ணத்துக்கும் அவரே தலைமை பயிற்சியாளராக நீடித்தார். அதன்பின் பங்களாதேஷுடனான தொடரிலும் அவர் பயிற்சியாளராகத் தொடர்ந்தார்.
ஆனால் தீடீரென விளையாட்டு அமைச்சினால் இவ்வாரம் ஆரம்பமாகும் நியூசிலாந்துடனான தொடருக்கு இவரை நீக்கிவிட்டு இடைக்காலப் பயிற்சியாளராக ஜெரொம் ஜெயரட்ன நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பின் மீண்டும் தற்காலிகப் பயிற்சியாளராக இதுவரை இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்சியாளராகவிருந்த ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹதுருசிங்கவின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 16மாதங்கள் உள்ளதால் இடையில் அவ்வொப்பந்தத்தை முறிப்பதாயின் அவருக்கு நஷ்டஈடாக 100மில்லியன் ரூபாவுக்கும் மேல் வழங்கப்பட வேண்டும். ஆனால் அவரை கௌரமான முறையில் விலகிக் கொள்ளும்படி கோரியும் அவர் விட்டுக்கொடுக்காமல் தன்னை விலக்கும் முடிவை வாபஸ் பெறாவிட்டால் நீதிமன்றம் செல்வதாகக் கூறியுள்ளார். ஆனால் பங்களாதேஷ் ஒப்பந்தக்காலம் முடியும் முன் இவரை இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கும் போது, இவருக்கெதிராக நீதிமன்றம் செல்லவிருந்த பங்களாதேஷ் கிரிக்கெட் சபையை, இலங்கை கிரிக்கெட் வினயமாகக் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவ்வாறு ஹதுருசிங்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 2010 ஆம் ஆண்டும் இலங்கை அணியின் பகுதி நேரப் பயிற்சியாளராக இருந்த இவர் அன்றைய கிரிக்கெட் நிர்வாகத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் திடீரென விலக்கியதும் இங்கு நினைவுகூரத்தக்கதாகும்.