![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/08/17/q8.jpg?itok=h2tAa43t)
தற்போதைய கிரிக்கெட் உலகில் இந்திய அணித் தலைவர் விராட்கோஹ்லி, நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன், இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட், அவுஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் சம காலத்தில் கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமான சிறந்த வீரர்களாவர். இந்நால்வரும் வலதுகை துடுப்பாட்ட வீரர்கள். தமது அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருபவர்கள். அது மட்டுமல்ல அவ்வணிகளை சிறந்த முறையில் வழிநடத்தி வெற்றியின் பால் இட்டுச் செல்வதுடன் ஓட்டக் குவிப்பிலும் முக்கியமானவர்கள்.
இவர்கள் அறிமுகமான புதிதில் யார் சிறந்த வீரர் என்று கணிப்பிடுவதில் கிரிக்கெட் ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் பெரும் சிக்கலாகவும் சவாலாகவும் இருந்து வந்தது. 19வயதின் கீழ் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து இந்நால்வரும் சிறந்து விளங்கியதால் இந் நால்வருக்குமிடையிலான போட்டி நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக இருந்தே வந்துள்ளது. ஆனால் அண்மைக்காலமாக மற்றைய மூவரையும் விட விராட் கோஹ்லி அணியை வழிநடத்துவதிலும் சிறந்து விளங்குவதோடு துடுப்பாட்டத்திலும் சாதனை படைத்து வருகிறார்.
இவர் கடந்த வாரம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற 2வது, 3வது ஒருநாள் போட்டிகளில் முறையே 120, 114ஓட்டங்களைப் பெற்று இந்தியாவின் தொடர் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றினார். இது விராட்கோஹ்லி விளாசிய 43வது சதமாகும். அத்துடன் இவர் இப்போட்டியின் போது ஒரு நாள் தொடரில் மேற்கிற்தியத் தீவுகளுக்கு எதிராக வீரர் ஒருவர் பெற்ற கூடிய ஓட்டங்கள் என்ற சாதனையைப் படைத்தார். 26வருடங்களுக்கு முன் பாகிஸ்தான் வீரர் ஜாவிட் மியன்டாட் 64போட்டிகளில் பெற்ற 1930ஓட்டங்கள் என்ற சாதனையை மேற்படி போட்டியில் விராட் கோஹ்லி 35இன்னிங்ஸில் 2146ஓட்டங்களைப் பெற்று முறியடித்துள்ளார்.
விராட் கோஹ்லி பெற்ற இச்சதங்களின் மூலம் பல சாதனைகளைப் படைத்துள்ளதுடன் சில சாதனைகளை நெருங்கியுமுள்ளார். 30வயதான விராட் கோஹ்லி குறைந்த இன்னிங்ஸில் 11ஆயிரம் ஓட்டங்களை கடந்து பெற்ற சாதனையையும் ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளார். இதுவரை இவர் 229இன்னிங்களில் இச்சாதனையைப் படைத்துள்ளார். இவர் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் பெற்றோர் வரிசையில் இரண்டாமிடத்திலுள்ளார். முதலாமிடத்தில் 452இன்னிங்ஸ்களில் 49சதங்கள் பெற்ற இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரும் மூன்றாவது இடத்தில் 365இன்னிங்ஸில் 30சதங்கள் பெற்ற அவுஸ்திரேலிய வீரர் ரிக்கி பொண்டிங்கும் உள்ளனர்.
இதுவரை ஒரு அணிக்கு எதிராக கூடிய சதங்களைக் குவித்தவர் சச்சின் தொண்டுல்கராவார். இவர் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 9சதங்கள் பெற்றதே சாதனையாகவுள்ளது. ஆனால் விராட் கோஹ்லி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 9சதங்களைப் பெற்று அச்சாதனையை சமன் செய்துள்ளார். இதுவரை அவுஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராகவும் 8சதங்கள் வீதம் விளாசியுள்ளார். விரைவாக 10சதங்கள் பெற்று இச்சாதனையையும் இவர் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது.
இவர் நியூசிலாந்துக்கு எதிராராக 5, தென்னாபிரிக்காவுக்கு எதிராக 4, இங்கிலாந்து, பங்களாதேஷுக்கு எதிராக 3, பாகிஸ்தானுக்கு எதிராக 2சிம்பாப்வேக்கு எதிராக 1என சதங்கள் விளாசியுள்ளார்.
இவர் ஒரு அணிக்கு எதிராக குறைந்த இன்னிங்களில் (34) 2000ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் நிலைட்டியுள்ளார். இதற்கு முன் ரோஹித் சர்மா அவுஸ்திரேலியாவுக்கு 2000ஓட்டங்களைக் கடந்து பெற 37இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டது.
இந்திய வீரர் சச்சி டெண்டுல்கருக்கு 40போட்டிகளில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராகவும், மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி வீரர் விவ் ரிச்சர்ட் 44போடடிகளில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராகவும், விராட் கோஹ்லி 44போட்டிகளில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராகவும், மற்றொரு இந்திய வீரர் மகேந்திர சிங் டோனி 45போட்டிகளில் இலங்கைகு எதிராகவும் 2000ஓட்டங்களைப் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மேலும் விராட் கோஹ்லி மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 9இன்னிஸ்களில் 6சதங்களைப் பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் விராட் கோஹ்லி பெற்ற சதம் அவரது 68வது சர்வதேச (டெஸ்ட், ஒருநாள்) சதமாகும்.
சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த அணித் தலைவராக இருப்பதில்லை. ஆனால் விராட் கோஹ்லி தலைமை பொறுப்பை ஏற்றதிலிருந்து தனது துடுப்பாட்டத்திலும் சிறந்து விளங்குகின்றார். மேற்கிந்தித் தீவுகளுக்கு எதிராகப் பெற்ற சதம் அவர் தனது தலைமையின் கீழ் பெற்றுக் கொண்ட 21வது சதமாகும். ஒரே தலைவரின் கீழ் வீரர் ஒருவர் பெற்ற அதிக சதங்களையும் கோஹ்லியே பெற்றுள்ளார். இவர் தோனியின் தலைமையின் கீழ் 19சதங்களைப் பெற்றுள்ளார்.
மேலும் ஒரு நாள் போட்டியில் ஒரு அணிக்கு எதிராக கூடிய சதங்கள் பெற்ற தலைவர்கள் வரிசையிலும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 7சதங்களைப் பெற்று விராட் கோஹ்லியே முதலிடத்திலுள்ளார். அவுஸ்திரேலிய வீரர் ரிக்கி பொண்டிங் நியூசிலாந்து எதிராக 5சதங்களையும், இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு எதிராக 4சதங்களையும் பெற்று அடுத்து கூடிய சதங்களைப் பெற்ற தலைவவர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளார்.
சதங்களில் சாதனைபடைத்து வரும் விராட்கோஹ்லி சில தொடர்களிலும் சதங்கள் பெறாமலுமிருந்துள்ளார். 2015ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடர் உட்பட அக்காலப் பகுதியில் தொடர்ந்து 13இன்னிங்ஸ்களில் அவர் சதமடிக்காமல் இருந்துள்ளார். அண்மையில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் விளையாடிய 9இன்னிஸ்களிலும் அவரால் சதம் விளாச முடியவில்லை.
விராட் கோஹ்லி 2011ம் ஆண்டு பெப்ரவரி 27 முதல் செப்டம்பர் 11ம்திகதி வரை 17 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் சதமடிக்கவில்லை என்பதும் அவரது மோசமான சாதனையாகும். ஆனால் அதற்குப் பிறகு சதமடிக்கும் இடைவெளியை குறைத்துக் கொண்டதால்தான் வேகமாக 43 சதங்களை அவரால் பெற முடிந்துள்ளது.
எம். ஐ. எம். சாஹில்