பிரட்மனை நெருக்க ஸ்மிதால் முடியுமா? | தினகரன் வாரமஞ்சரி

பிரட்மனை நெருக்க ஸ்மிதால் முடியுமா?

இதுவரை கிரிக்கெட் உலகில் உருவான சிறந்த கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட்டின் தந்தையெனவும் அழைக்கப்படும் அவுஸ்திரேலியாவின் சர். டொனல் பிரட்மன்னின் சாதனையை அண்மிக்கும் சந்தர்ப்பம் தற்போதைய துடுப்பாட்ட வீரர்களில் முன்னணியில் இருக்கும் அவுஸ்திரேலியாவின் மற்றுமொரு சிறந்த வீரர் ஸ்டீவ் ஸ்மித்தினால் மட்டுமே முடியும் என கிரிக்கெட் விமர்சகர்களும், ஊடகங்களும் தெரிவிக்கின்றன. 

இவ்விருவரையும் ஒப்பிட்டுக் கருத்துக்கள் வெளிவருவதற்கு முக்கிய காரணம் டெஸ்ட் வரலாற்றில் ஓட்டக் குவிப்பில் கூடிய சராசரியைப் பெற்றுள்ள சர். டொனால்ட் பிரண்டமன்னின் 99.94என்ற சராராசரியை அண்மிக்கும் வீரர்களில் முன்னிலையில் இருப்பவர் ஸ்டீவ் ஸ்மித்தாகும். 

டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித்தின் சராசரி 62.96ஆகும். இருவரும் குறைந்த போட்டிகளுக்கு முகம் கொடுத்து கூடிய சதங்களையும் விளாசியுள்ளனர். பிரட்மன் 52போட்டிகளில் 29சதங்களையும் ஸ்மித் 65போட்டிகளில் 25சதங்களையும் பெற்றுள்ளனர்.  

விசேடமாக பிரட்மன் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் காலத்தில் டெஸ்ட் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்துள்ளது. அதனால் அவர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளிலேயே அதிகமாக விளையாடியுள்ளார். எனவே அவர் அதிக சதங்களையும், இரட்டை சதங்களையும், முச்சதங்களையும் இங்கிலாந்து அணிக்கெதிராகவே பெற்றுள்ளார். அதே போல் ஸ்மித்தும் தனது 25சதங்களில் 10சதங்களை இங்கிலாந்துக்கு எதிராகவே பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள இரு இரட்டை சதங்களையும் இங்கிலாந்துக்கு எதிராகவே பெற்றுள்ளார்.  

மேலும் ஸ்டீவ் சுமித் கடந்த ஒரு வருடகாலமாக போட்டித் தடையின் பின் கடந்த உலகக் கிண்ணத் தொடரில் சர்வதேச போட்டிகளில் விளையாட ஆரம்பித்ததிலிருந்து மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். 

அண்மையில் இங்கிலாந்தில் ஆரம்பமான அஷஸ் தொடரில் பர்மிங்ஹாம் எஸ்பஸ்டனில் ஆரம்பமான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 118ஓட்டங்களுக்கு 8விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அவுஸ்திரேலிய அணியை தனி ஒருவராக நின்று போராடி 10வது விக்கெட்டாக இவர் ஆட்டமிழக்கும் போது சதமடித்ததுடன் அணியும் 288ஓட்டங்களைப் பெற்று சற்று வலுவான நிலைக்கு அணியை இட்டுச் சென்றார். அப்போட்டியில் சுமார் 100ஓட்டங்கள் பின்னணியில் இருந்து தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணியை அவ்வினிங்சிலும் சதம் பெற்று வலுவான நிலைக்கு இட்டுச்சென்றார். இரு இன்னிங்ஸிலும் சதம் பெற்று அணியை வெற்றி பெறச் செய்ததோடு ஆட்டநாயகன் விருதையும் பெற்று தனது திறமையை மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளார். 

30 வயதான ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் நீண்ட நேரம் நின்று ஆடும் பாணியைப் பார்க்கும் போது இன்னும் சில வருடங்கள் அவரால் திறமையாக விளையாட முடியும் என எதிர்பார்க்கலாம். தற்போது அவரது துடுப்பாட்டத் திறமை இந்த நம்பிக்கையை அளித்துள்ளது. இதே திறமை தொடருமானால் சர் டொனல் பிரண்மனின் சராசரியை சமன் செய்யக் கிடைக்காவிட்டாலும் அவரது சராசரியை நெருக்குவதற்கு ஸ்மித்தால் முடியும் என கிரிக்கெட் விமர்சகர்களின் எதிர்பார்ப்பாகும்.

போட்டி இன். ஓட்டம்      சராசரி சதம்  
டொன் பிரெட்மன் 52 70 6996       99.94 29  
ஸ்டீவ் ஸ்மித்      65 119 6485       62.96

 

Comments