வெற்றியின் நாயகன் திமுத் கருணாரத்ன | தினகரன் வாரமஞ்சரி

வெற்றியின் நாயகன் திமுத் கருணாரத்ன

இலங்கை- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது போட்டி கொழும்பு சரா ஓவலில் நடைபெற்றுவருகின்றது. கடந்த வாரம் காலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இலங்கை அணி அபாரமாக வெற்றிபெற்று 2போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்டின் வெற்றியானது இலங்கை அணி வீரர்களுக்கு சொந்த மண்ணில் நீண்ட நாட்களுக்குப் பின் கிடைத்த சிறப்பான வெற்றியாகும். கடந்த இரண்டு வருடங்களாகப் பின்னடைவைச் சந்தித்து வந்த இலங்கை அணிக்கு இவ்வெற்றி பெரும் உந்துதலாக அமைந்துள்ளது. மேலும் இவ்வெற்றியின் மூலம் சர்வதேச டெஸ்ட் சம்பியன் ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற வாய்ப்பேற்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் ஒவ்வொரு தொடரின் போதும் பயிற்சியாளர்களை மாற்றுவதும், தலைவர்களை மாற்றுவதும், வீரர்களை மாற்றுவதுமாக இருந்த இலங்கை அணியை மீளக் கட்டியெழுப்புவதற்காக பலத்த இழுபறிகளுக்கு மத்தியில் சந்திக்க ஹதுருசிங்க பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இலங்கை வரலாற்றில் வெளிநாட்டுப் பயிற்சியாளர்களுக்குக் கூட வழங்கப்படாத அளவுக்கு அதிக ஊதியத்துடன் அவரைப் பயிற்சியாளராக நியமித்தது இலங்கை கிரிக்கெட். 

அவரின் பயிற்சி ஆரம்பமான புதிதில் அணியில் பெரிய மாற்றங்கள் ஏற்படாத போதிலும் பின்னர் அணியில் முன்னேற்றம் ஏற்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அணியில் ஒரு முன்னேற்றமும் இல்லாமல் எதிர்மறையாகவே இருந்தது. இலங்கை அணியின் தொடர் தோல்விகள் தொடர்ந்த வண்ணமே இருந்தன. அணியை வெற்றிப் பாதையில் இட்டுச்செல்வதில் ஹத்துருசிங்கவும் தோல்வி கண்டார். ஹத்துருசிங்கவுக்கு மற்றைய பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படாத சில மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வதிகாரமே அணியில் வீரர்களுக்கு மத்தியில் பிரச்சினையைத் தோற்றுவித்தது. வீரர்கள் அணிக்குள் குழுக்களாகச் செயற்பட ஆரம்பித்தனர். பயிற்சியாளருக்கும், அணித் தலைவருக்குமிடையில் புரிந்துணர்வற்ற நிலைமை தோன்றியது. 

இந்தச் சூழ்நிலையில்தான் யாரும் எதிர்பாராத விதமாக பல எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் திமுத் கருணாரத்ன ஒரு நாள் அணிக்கும் தலைவராக நியமிக்கப்பட்டார். சுமார் நான்கு வருடங்கள் ஒருநாள் போட்டிகளில் களமிறக்கப்படாத கருணாரத்ன திடீரென ஒருநாள் அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

 அவரால் ஒருநாள் அணியையும் சிறப்பாக வழிநடத்துவார் என்ற நம்பிக்கை இலங்கை கிரிக்கெட்டுக்கு இருந்தது. 

அவர் ஒருநாள் அணிக்குத் தலைமைப் பதவியையேற்றவுடன் பிரிந்து குழுக்களாகச் செயற்பட்ட இலங்கை அணி வீரர்களை ஒற்றுமைப்படுத்தினார். ஒரு அணியாக ஒருமித்து விளையாடக் கூடிய தலைமைத்துவத்தை அவர் வழங்கினார். சிரேஷ்ட வீரர்களிடத்திலும், இளம் வீரர்களிடத்திலும் சகஜமாகப் பழகி அணியில் ஒற்றுமையைக் கட்டியெழுப்பினார். அணி வீரர்களுக்கும் தலைமை மீது மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. எனவே அணி வீரர்கள் அனைவரும் ஓரணியாக விளையாட ஆரம்பித்தனர். அவர் அணிக்குத் தலைமை ஏற்றவுடன் தொடர்ந்து சிறந்த பெறுபேறுகளே கிடைக்கப்பெறுகின்றன. அதற்குக் காரணம் அணியினரை ஒற்றுமைப்படுத்தியதே என்று கருணாரத்ன பல ஊடகச் சந்திப்புக்களில் கூறியுள்ளார். 

தலைமைப் பொறுப்பேற்றதிலிருந்து அவரின் துடுப்பாட்டமும் சிறந்து விளங்குகின்றது. உலகக் கிண்ணத் தொடரிலிருந்து அவர் ஒருநாள் போட்டிகளிலும் குறிப்பிடத்தக்களவு திறமையாக விளையாடி வருகிறார். உலகக் கிண்ணப்போட்டிகளில் அரையிறுதிக்கு முன்னேறாவிட்டாலும் இவரின் தலைமையின் கீழ் இறுதிக்கட்ட ஆட்டங்களில் இலங்கை அணி சிறப்பாகவே விளையாடியது.  

உலகக் கிண்ணத் தொடர் முடிந்த கையோடு இலங்கை வந்த பங்களாதேஷ் அணியை முழுமையாகத் தோற்கடித்ததன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பின் இலங்கை மண்ணில் ஒருநாள் தொடர் வெற்றியையும் இவரின் தலைமையின் கீழ் வென்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

உலகக் கிண்ணத் தொடரில் இறுதிப் போட்டிக்குத் தெரிவான பலம்வாய்ந்த நியூசிலாந்து அணியை காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியுறச் செய்துள்ளது. இவ்வெற்றியில் திமுத் கருணாரத்னவின் நிதானமான துடுப்பாட்டமே காரணமாய் அமைந்திருந்தது. இவர் முதல் இன்னிங்ஸில் 39ஓட்டங்கள் பெற்றதோடு, இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இரண்டாவது இன்னிங்ஸிலும் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடி சதமடித்து இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இவ்வருட ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் இவரின் தலைமையின் கீழ் கைப்பற்றி, ஆசிய நாட்டு அணியொன்று தென்னாபிரிக்காவில் முதன் முதலாக தொடர் வெற்றியைப் பெற்ற சாதனையையும் படைத்துள்ளார். இதுவரை இவர் தலைமையில் இலங்கை அணி விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

அண்மையில் ஐ.சி.சி. யினால் வெளியிடப்பட்ட துடுப்பாட்ட தரவரிசையிலும் திமுத் கருணாரத்ன முன்னேற்றம் கண்டுள்ளார். இவர் 782புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தற்போது அவரது தலைமையிலான அணி சிறப்பாக விளையாடத் தொடங்கியுள்ளது.

இலங்கை அணி நியூசிலாந்துடனான வெற்றி இலங்கை அணிக்கு மிகப் பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சம்பியன் ஷிப் தொடரில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு வரும் வாய்ப்பு இலங்கை அணிக்குக் கிடைக்கும். அணித் தலைவர் திமுத் கருணாரத்னவின் வழிகாட்டலில் வீரர்களிடையே ஒற்றுமையும், ஆக்ரோஷமாக விளையாடும் பாணியும் அதிகரித்துள்ளது. மேலும் ஒரு சிறந்த பயிற்சியாளரும் நியமிக்கப்படும் பட்சத்தில் இலங்கை அணியால் மீண்டெழ முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

எம்.எஸ்.எம். ஹில்மி

Comments