பிரமிக்க வைத்த பென் ஸ்டோக்ஸ்! | தினகரன் வாரமஞ்சரி

பிரமிக்க வைத்த பென் ஸ்டோக்ஸ்!

உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் போது தனியொரு ஆளாக இருந்து தனது அணிக்கு உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்தவர் பென் ஸ்டொக்ஸ். 

அவர் மீண்டும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இதே பாணியிலான ஒரு வெற்றியை இங்கிலாந்து அணிக்குப் பெற்றுக்கொடுத்துள்ளார். 

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வரலாற்றுப் புகழ் மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் முழுவதும் இவரின் சிறந்த துடுப்பாட்டம் மட்டுமல்ல பந்துவீச்சு, களத்தடுப்பும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.  

கடந்த மாதம் ஆரம்பமான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலைபெற்றும் இறுதியில் போட்டியில் தோல்வியடைந்தது. 

முதல் ஆஷஸ் தோல்வியினால் மனவலிமையிழந்த இங்கிலாந்து அணி இம்முறை ஆஷஸ் தொடரை இழந்து விடும் என பல ஊடகங்களிலும் ஆரூடங்கள் தெரிவிக்கப்பட்டன. 

ஊடகங்களின் ஊகங்களுக்கு அமைய அஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியிலும் தோல்வியடையும் ஒரு இக்கட்டான நிலையில் 74ஓட்டங்களுககு 4விக்கெட் வீழ்ந்து தடுமாறியது இங்கிலாந்து அணி. அப்போது பென் ஸ்டோக்ஸ்- ஜோஸ் பட்லர் ஜோடி களத்தில் இருந்தது. உலகக் கிண்ணத்தில் கலக்கிய ஜோடி இதிலும் தமது அணியைக் காப்பாற்றி விடுவார்கள் என எண்ணியிருந்த வேளை பட்லர் ஆட்டமிழக்க இப்போட்டியிலும் இங்கிலாந்து தோல்வியுறும் நிலை உருவானது. ஆஷஸ் தொடரில் முதல் இரு போட்டிகளிலும் தோல்வியுற்றால் தொடரில் நிலைத்து நின்று தொடரை வெல்வதோ அல்லது சமநிலையில் முடிப்பதோ கடினம் என்பதை அறிந்திருந்த பென் ஸ்டோக்ஸ் விஸ்வரூபமெடுத்தார். அதுவரை 118பந்துகளுக்கு 54ஓட்டடங்களை எடுத்திருந்த அவர், கடைநிலை ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளையும் பாதுகாத்துக்கொண்டு அடுத்து சந்தித்த 47பந்துகளில் 61ஓட்டங்கள் எடுத்ததோடு வலுவான நிலைக்கு இங்கிலாந்து அணியை இட்டுச்சென்றார். இறுதி நாளில் அவுஸ்திரேலிய அணி தோல்வியைத் தவிர்க்க போராட வேண்டிய நிலையை உருவாக்கினார் பென் ஸ்டோக்ஸ். இப்போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவதற்கு பென் ஸ்டோக்கின் துடுப்பாட்டமே காரணமாயமைந்தது. 

அடுத்து ஆஷஸ் தொடரின் 3வது போட்டி இங்கிலாந்து லீட்ஸ் ஹெடின்ங்லே மைதானத்தில் நடைபெற்றது. 

முதல் இன்னிங்ஸில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 179ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து முதல் நாளே தடுமாறியது. ஆனால் ஆவுஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர் ஹெசல்வூட்டின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கிய இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களும் முதல் இன்னிங்ஸில் 67ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றிபெற 359ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதுவரை 1928ம் ஆண்டு மெல்பேர்னில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் 322ஓட்டங்களைத் துரத்தி வெற்றிபெற்றதே இங்கிலாந்து அணியின் அதிகபட்ச சேசிங்காகும். ஹெடிங்லேயில் இக்கடின இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணி நான்காம் நாள் ஆட்டம் ஆரம்பமானதும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் 5வது வீரராகக் களம் புகுந்த பென் ஸ்டோக்ஸ் மட்டும் நிதானமாக ஆடி தனது விக்கெட்டை பாதுகாத்தார். அவ் அணி 4ம் நாள் தேநீர் இடைவேளை வரை 9விக்கெட்டுகளை இழந்து 286ஓட்டங்களைப் பெற்று தோல்வி உறுதி என்ற நிலையிலிருந்தது. எல்லாம் முடிந்து விட்டதுதான் என்று நினைத்தார்கள். அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி உறுதி என்ற நிலை உருவானது. ஆனால் வெறிகொண்ட வேங்கையாக பென் ஸ்டோக்ஸ் தனியாளாகப் போராடினார். ரி/20போட்டியை ரசிப்பது போல் டெஸ்ட் போட்டியை ரசிக்க வைத்தார் பென் ஸ்டோக்ஸ். கடைசி விக்கெட்டுக்கு 73ஓட்டங்கள் எடுக்க வேண்டும். ஹேசல்வூட், நதன் லயன், பெட் கமின்ஸ் போன்ற பந்துவிச்சாளர்களையெல்லாம் துவம்சம்செய்து அதிரடியாக ஆடி 8சிக்ஸர்கள், 11பெளண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 135ஓட்டங்கள் எடுத்து மீண்டும் இங்கிலாந்து அணியை வெற்றிபெறச் செய்துள்ளார். கடைசிவிக்கெட் இணைப்பாட்டம் 76ஓட்டங்களாகும். இதில் மற்றைய வீரர் ஒரு ஓட்டமே பெற்றிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

பென்ஜமின் அண்ட்ரூ ஸ்டோக்ஸ். இவர் ஒரு மாதத்திற்கிடையில் இரு முறை இங்கிலாந்து அணியின் தேசிய வீரராக மிளிர்ந்துள்ளார். ஆனால் இவர் உலகக் கிண்ணம் ஆரம்பமாவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பு பிரிஸ்டல் பார் சம்பவம், ட்வீட்டர் போஸ்ட் என இரண்டு சம்பவங்கள் இவரின் பெயருக்கு களங்கத்தை விளைவித்திருந்தது. இச்சம்பவங்களுக்காக இவர் 30ஆயிரம் பவுண்கள் அபராதத்துக்கும், போட்டித் தடைக்கும் உள்ளாகியிருந்தார். சுமார் ஒரு வருட காலம் இவர் கிரிக்கெட்டிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தார். இயன்பொதம், பிளின்டொப் போல் இங்கிலாந்து அணிக்கு சிறந்த சகலதுறை வீரராக வருவார் என்ற எதிர்பார்பை இச்சம்பவகள் தகர்ந்தெறிந்தது. ஆனால் இவ்வவப் பெயரைத் துடைத்தெறிய தன் துடுப்பால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்திருந்த பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்தின் தீராத கனவாக இருந்த உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்ததன் மூலம் அவப்பெயரைத் துடைத்தெறிந்து தேசிய வீரராக மிளிர்ந்தார். அத்துடன் அடங்காத அவரது துடுப்புமட்டை தொடர்ந்தும் இங்கிலாந்து மக்களால் பெரிதும் மதிக்கப்படும் ஆஷஸ் தொடரின் முடிவை தன் ஒரு இன்னிங்ஸால் மாற்றியிருக்கிறார். இதுவரை சோர்ந்திருந்த டெஸ்ட் ரசிகர்களை ஆசன நுனியில் அமர வைத்து போட்டியை ரசிக்க வைத்த பென்ஜமின் அண்ட்ரூ ஸ்டோக்சுக்கு பாராட்டுக்கள்.

எம். ஐ. எம். சுஹைல்  

 

Comments