![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/09/15/colvm-pppp110645936_7397921_14092019_EPW_CMY.jpg?itok=WnI9F7Ff)
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் ஆப்கானிஸ்தான் ஈரான் வட கொரியா போன்ற நாடுகளின் போக்குகளால் அதிக முரண்பாட்டை அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முன்வைத்த வெளியுறவுக் கொள்கைகள் அனைத்தையும் ஜனாதிபதி ட்ரம்ப் நிராகரித்து வருகிறார். அவரது அணுகுமுறைக்கு தற்போதைய வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ ஆதவு தெரிவித்து வருகிறார். இது பென்டகனையும் வெள்ளை மாளிகையையும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. அதன் ஓரம்சமாகவே தலிபான்கள் உடனான உடன்படிக்கைக்கு அமெரிக்காவில் அதி-க அதிருப்தி ஜனாதிபதி ட்ரம்ப் மீது ஏற்பட்டுள்ளது. இக்கட்டுரையும் தலிபான்களுடனான அமெரிக்க நகர்வுகளில் ஏற்பட்டுவரும் நெருக்கடியை தேடுவதாக அமைந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது தேர்தல் பரப்புரையின் போது ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகளை விலக்குவதாகவும் அமெரிக்கப் படைகள் எங்கிருந்தாலும் அவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்படுவார்கள் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார். அதற்கு அமைவாக சில கட்டங்களை அறிவித்து அமெரிக்கப் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கியிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே தற்போதைய பேச்சுக்கள் அமைய திட்டமிடப்பட்டது. ஆனால் தலிபான்கள் நிகழ்த்திய திடீர் தாக்குதலால் ஆத்திரமடைந்த ஜனாதிபதி ட்ரம்ப் பேச்சுக்களை ரத்து செய்ததுடன் பேச்சுக்களுக்கான அனைத்து நடவடிக்கையும் முடிவுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியைப் பொறுத்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தை அவ்வமைப்பிமை சமாதான அரசியலுக்கு கொண்டுவருவதுடன் அது சரிவராத பட்சத்தில் அவ்வமைப்புக்கு நெருக்கடி கொடுத்து சரணடையச் செய்வதாக அமைந்திருந்தது. குறிப்பாக அமெரிக்காவின் கையாளும் சக்தியாக தலிபான்களை மாற்றுவதே நோக்கமாக அமைந்திருந்தது. அத்துடன் தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசுடன் இணைந்து செயல்படுவதற்கான உடன்பாடொன்றிலும் கைச்சாத்திட வைப்பதே ட்ரம்ப் பின் நோக்கமாக அமைந்திருந்தது. அத்துடன் இப்பேச்சுக்களுக்கு முன்பாகவே அமெரிக்காவுக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் மூலம் ட்ரம்ப் உடன்பாட்டுக்கான பூர்வாங்க வேலைகளை செய்திருந்தார். அதன்படி அமெரிக்க துருப்புக்கள் 5500க்கும் மேற்பட்டவர்களை திருப்பி அழைப்பதாக இருந்தது. அதற்கு பதிலாக அதிதீவிர இஸ்லாமிய அமைப்பான அல்கொய்தா உடனான தொடர்பை தாலிபன் கைவிட வேண்டும் என்பது உடன்படிக்கையில் காணப்பட்ட அம்சமாக அமைந்திருந்தது. ஆனால் காபூலில் நிகழ்ந்த தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றதன் பின்பு அதனை ரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது பற்றி தலிபான்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தமையானது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு இருக்கும் வரை தலிபான்களின் தாக்குதல்கள் தொடரும். அமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கை அந்த நாட்டிற்கு பல இழப்புக்களை ஏற்படுத்தும். அமெரிக்காவின் அமைதிக்கு எதிரான நிலைப்பாடு பேச்சுக்களை ரத்து செய்ததன் மூலம் உலகிற்கு அமெரிக்காவின் நிலைப்பாடு தெரிந்திருக்கும். உயிரிழப்புக்களும் சொத்து இழப்புகளும் அமெரிக்காவுக்கு அதிகமாகும். ஆனால் தலிபான்கள் ஒரு போதும் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புக்களை நிராகரிக்கப் போவதில்லை. போருக்கு பதிலாக பேச்சுவார்த்தை என்ற வழிமுறையை தேர்ந்தெடுத்தால், தலிபான்கள் இறுதி வரை உறுதியுடன் இருக்க தயாராக உள்ளனர் எனக் குறிப்பிட்டிருந்தமை கவனத்திற்குரியது.
இதேநேரம் அமெரிக்க ஜனாதிபதி தலிபான்களது நடவடிக்கை பற்றித் தெரிவிக்கும் போது தலிபான் தீவிரவாத அமைப்புடன் பேசுவதற்கு திட்டமிடப்பட்டது. அதில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியும் இணைந்து கொள்வார் என முடிவாகியிருந்தது. ஆனால் பேச்சுவார்த்தை நிகழும் தருணத்தில் போர் நிறுத்த உடன்பாட்டை தலிபான்கள் மீறிவிட்டனர். அதனால் அதற்கான தகுதி நிலையை தலிபான்கள் இழந்துவிட்டனர். மக்களை கொலை செய்பவர்களுடன் ஓர் உடன்பாட்டுக்கு போக முடியாது எனக் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மைக் பாம்பியோ தெரிவிக்கும் போது இது ஒரு மோசமான நிலை. 12 பொதுமக்களை கொன்று அதில் அமெரிக்கப் படைவீரரும் கொல்லப்பட்ட பின்பு தலிபான்களுடன் பேசுவது வீணான செயலாகவே பார்க்கப்படும் என்றார்.
14 ஆயிரம் படைகளை ஆப்கானிஸ்தானில் கொண்டுள்ள அமெரிக்கா எதிர்காலத்தில் படைகளை அதிகரிக்கவும் தாக்குதலை தீவிரப்படுத்தவும் தயாராவதை அல்யசீரா உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் அண்மிப்பதனால் இஸ்லாமிய நாடுகள் மீது ட்ரம்ப் பின் கவனம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தலிபான்கள் மீள் எழுச்சி பெற்று வருவதாகவும் அத்தகவல்கள் மேலும் தெளிவுபடுத்தியுள்ளன. ஆனால் ஆப்கானிஸ்தானின் புவியியல் தீவிவாதத்திற்கும் தாக்குதலுக்கும் அமைவான பிரதேசமாக அமைந்திருப்பதனால் அமெரிக்காவின் நடவடிக்கைகள் இலகுவானதாகவோ முற்றாக அழிவை ஏற்படுத்துவதாகவோ அமைவது கடினமானதாகவே அமையும்.
சிரியாவில் ஜிகாதிகளை பேச்சுக்களுக்கு சிரிய அரசாங்கம் அழைத்த போது அமெரிக்கா ஏவுகணை மூலம் அந்த ஜிகாதிகளை அழித்தமை தலிபான்களுக்கும் பாடமாக அமைந்திருக்கும். காரணம் பேச்சுக்களை அமெரிக்க ஜனாதிபதிகள் ஓய்வெடுக்கும் மாளிகை அமைந்துள்ள காம்டேவிட்டில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அது மட்டுமன்றி காம்டேவிட் உடன்படிக்கை மூலமே பாலஸ்தீனம் தனது சுயத்தை இழந்ததுடன் யசீர் அரபாத்தை பலிகொடுத்தது. அதன் மூலமே ஆயுதப் பேராட்டமும் முடிவானது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
எனவே, தலிபான்கள் மீண்டும் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் நிலையை உருவாக்கியுள்ளனர். அதிலும் இஸ்லாமிய அமைப்புக்களின் எழுச்சியானது அமெரிக்காவின் இஸ்லாத்துக்கு எதிரான கொள்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிலையை தீவிரப்படுத்தும். அது ஐரோப்பாவில் ஏற்பட்டுவரும் மாற்றத்துடன் கைகோர்த்து வலுவான அரசியல் இராணுவ சூழலை ஏற்படுத்தக் கூடியதாக அமையும். அதனால் உலக இருப்பு இலண்டன் மேயர் சாதிக் கான் குறிப்பிடுவது போல் ஆபத்தானதாக அமையும். ஐரோப்பா அடுத்த கட்ட போருக்கு தயாராவதையும் அமெரிக்காவின் வெளியுறவில் ஏற்பட்டுவரும் குழப்பம் மேலும் நெருக்கடியான உலகத்தை தரிசிக்க வைக்கும் என்பதுவும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.
கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்