![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/09/21/q2.jpg?itok=1a9v_U3t)
கால்பந்து, கிரிக்கெட், றக்பி, குத்துச்சண்டை, ரெஸ்லிங் மட்டுமல்ல எந்த விளையாட்டானாலும் அதற்கு கட்டாயமாக மத்தியஸ்தம் வகிக்கக் கூடிய நடுநிலையாளர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் அப்போட்டிகளில் ரசிகர்களின் ஈடுபாடும் விளையாட்டுகளில் உயிரோட்டமும் இருக்கும்.
கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் அந்தந்த நாடுகளில் நடைபெறும் போட்டித் தொடர்களுக்கு அந்நாட்டவர்களே நடுவர்களாக இருந்தனர். இதனால் அவரவர்கள் தங்களது நாடுகளுக்கு சார்பாக நடந்துகொள்கிறார்கள் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சில போட்டிகளில் நடுவர்களும் சேர்ந்து தமது நாட்டு அணிக்காக விளையாடுவதாக கண்டனங்களும் எழுந்தன. இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி பெற்ற முதல் டெஸ்ட் வெற்றியின் போது இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறு பெரும்பாலான விமர்சனங்களுக்கு பாகிஸ்தான், இந்தியா, இலங்கை ஆகிய ஆசியக் கண்ட அணிகளே உள்ளாகின.
இதனால் 90களின் ஆரம்பத்தில் மத்தியஸ்த நடுவர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன் முதலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான்கான் முன்வைத்தார். இக்கோரிக்கையை அநேக நாடுகள் அங்கீகரித்ததால் ஐ.சி.சி.யினால் மத்தியஸ்த நடுவர்கள் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் பின் இங்கிலாந்தின் டேவிட் ஷெப்பர்ட், டிகி பேர்ட், மேற்கிந்தியத் தீவுகளின் ஸ்டீவ் பக்னர் என பலர் சிறப்பாகச் செயற்பட்டு நல்ல நடுவர்கள் எனப் பெயரெடுத்தனர்.
அதன் பின் டி. வியில் ரீப்ளே மூலமும், மூன்றாவது நடுவர், டி. ஆர். எஸ். முறை என தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நடுவர்களின் தீர்ப்புகளிலும் சில தவறுகள் திருத்தப்பட்டன.
தற்போது இத்தொழில் நுட்ப வளர்ச்சியோடு போட்டி போட்டுக்கொண்டு மிகச் சரியான தீர்ப்புகளை வழங்கும் பல நடுவர்களில் இலங்கையைச் சேர்ந்த குமார் தர்மசேன முன்னிலையிலுள்ளார்.
கடந்த காலங்களில் இவரின் தீர்ப்புகளில் சிலவற்றில் சர்ச்சைகள் எழுந்து விமர்சனத்துக்குள்ளான சந்தர்ப்பங்களும் உண்டு.
கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இவர் வழங்கிய ஆறு ஓட்ட தீர்ப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தாலும் கிரிக்கெட் விதிகளின்படி இவரின் தீர்ப்பு சரியானது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்றுக்கொண்டது.
அண்மையில் முடிவுற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இங்கிலாந்து-அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியின் போது முக்கியமான தருணத்தில் கள நடுவரின் தவறான தீர்ப்பினால், அவுஸ்திரேலிய அணி தோல்வியுற்றது.
எனவே அத்தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கு நடுவராக ஐ. சி. சி. யினர். குமார் தர்மசேனவையே தெரிவு செய்தமையும் இவரின் சிறப்பான செயற்பாட்டுக்கு ஒரு எடுத்துக்கட்டாகும்.
90களில் இலங்கை அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாயிருந்த சகலதுறை ஆட்டக்காரர் “உனந்துவா” (கடும் ஊக்குவிப்பாளர்) என அழைக்கப்பட்ட குமார் தர்மசேன கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின் கள நடுவராக கிரிக்கெட் உலகிகுக்கு தனது சிறந்த சேவையை வழங்கி வருகிறார்.
தொழில்நுட்பம் வளர்ந்து அது கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில், குமார் தர்மசேன ஐ. சி. சி. யினால் வழங்கப்படும் சிறந்த நடுவருக்கான விருதை 2012ம், 2018ம் ஆண்டுகளில் பெற்றுள்ளார். நடுவர்கள்கு ஐ. சி. சியினால் வழங்கப்படும் கொடுப்பனவுப் பட்டியலிலும் குமார் தர்மசேனவே முதலிடத்திலுள்ளார்.
சர்வதேசப் போட்டிகளில் இருந்து 2006ம் ஆண்டு ஓய்வுபெற்ற பின் இரண்டு வருடங்கள் நடுவர்களுக்கான பயிற்சிகளிலும், தேர்வுகளில் ஈடுபட்டு சிறந்த முறையில் சித்தி பெற்று 2009ம் ஆண்டு சர்வதேச நடுவராகத் தெரிவு செய்யப்பட்டார் குமார் தர்மசேன.
சகலதுறை ஆட்டக்காரரான இவர் இலங்கை அணிக்காக 31டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 868ஓட்டங்களையும் 69விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் 141சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 1222ஓட்டங்கள் பெற்றுள்ளதோடு 138விக்கட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இதுவரை இவர் 62டெஸ்ட் போட்டிகளுக்கும், 103ஒருநாள் போட்டிகளுக்கும், 22ரி/20போட்டிகளுக்கும் கள நடுவராகக் கடமையாற்றியுள்ளார். தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடுவர்களில் முன்னிலையிலிருக்கும் இவருக்கு இந்த ஆண்டு 76,200டொலர்கள் (சுமார் 1,37,53,000ரூபா) சம்பளாகப் பெற்றுள்ளார்.
இந்த வரிசையில் இரண்டாமிடத்திலிருக்கும் பாகிஸ்தனைச் சேர்ந்த சிரேஷ்ட நடுவர் அலிம்தார், 2000ம் ஆண்டு கள நடுவராகக் கடமையை ஆரம்பித்தார். தற்போதைய நடுவர்களில் அதிக சர்வதேச போட்டிகளுக்கு இவரே நடுவராக கடமையாற்றியுள்ளார். இதுவரை இவர் 128டெஸ்ட் போட்டிகளுக்கும், 206சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கும், 43ரி/20போட்டிகளுக்கும் களநடுவராகக் கடமையாற்றியுள்ளார்.
இவர் இந்தாண்டு 74,600டொலர்கள் (1,34,64,000ரூபா) சம்பளமாகப் பெற்றுள்ளார்.
இவ்வரிசையில் மூன்றாமிடத்திலுள்ளவர் இங்கிலாந்தின் ரிச்சர்ட் கெட்டில்பொராக். இவர் ஓய்வின் பின் 2002ம் ஆண்டு முதல்தரக் கிரிக்கெட்டில் நடுவராகக் கடமையாற்றிய பின் 2010ம் ஆண்டு சர்வதேச நடுவரானார். இவர் இதுவரை 60டெஸ்ட் போட்டிகளுக்கும், 88சர்வதேச ஒருநாள் போட்டிகளும், 22ரி/20போட்டிகளுக்கும் நடுவராகக் கடமையாற்றியுள்ளார்.
இவரின் வருமானம் ஆண்டிற்கு 68,800டொலர்கள் (1,24,17,000ரூபா) சம்பாதிக்கிறார்.
இவ்வரிசையில் நான்காவது அதிக சம்பளம் பெறும் நடுவராக 55வயதான மாரைஸ் எராஸ்மஸ் திகழ்கிறார். தென்னாபிரிக்காவைச் சேர்ந்த இவர், 2006இல் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு நடுவராக அறிமுகமானார். இதுவரை இவர் 57டெஸ்ட் போட்டிகளுக்கும், 90சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கும், 26ரி/20போட்டகளுக்கும் நடுவராகக் கடமையாற்றியுள்ளார்.
இவர் ஆண்டிற்கு 68,000டொலர்கள் (1,22,73,000ரூபா) சம்பளமாகப் பெறுகிறார்.
நியூசிலாந்தைச் சேர்ந்த கிறிஸ் கப்பென்னி. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாவிட்டாலும், முதல் தரப் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரராக விளங்கியவர். ஓய்வின் பின் 2014ம் ஆண்டு சர்வதேச நடுவராகக் களமிறங்கினார்.
இதுவரை இவர் 29டெஸ்ட் போட்டிகளுக்கும், 68சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கும், 26ரி/20போட்டிகளுக்கும் நடுவராகக் கடமையாறறியுள்ளார்.
இவர் 66,600டொலர்கள் (1,20,20,000ரூபா) சம்பளமாகப் பெறுகிறார்.
எம்.ஐ.எம். சுஹைல்...