இஸ்ரேலியப் பாராளுமன்றத் தேர்தல் மீண்டும் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையைக் கொடுக்கவில்லை. ஆட்சி அமைப்பதில் யூதக் கட்சிகள் தமக்கிடையே முரண்பட்டுக் கொள்ளும் போக்கினைக் காணமுடிகிறது. யூதர்கள் இவ்வாறு வாக்களித்ததற்கு பின்னால் ஏதோ ஒரு முக்கிய காரணம் அமைந்திருக்கும். ஆனால் இத்தகைய ஆட்சிக் குழப்பம் பிராந்திய மட்டத்திலும் சர்வதேச அரசியல் தளத்திலும் இஸ்ரேலுக்கு ஆரோக்கியமானதாக இல்லை என்பதே முதன்மையான செய்தியாகும். இக்கட்டுரையும் இஸ்ரேலுக்கு ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் பிராந்திய சர்வதேசத் தளத்தில் காணப்படும் நெருக்கடியையும் புரிவதாக அமையவுள்ளது.
இஸ்ரேலில் அரசியலில் குறுகிய காலத்தில் மீண்டும் ஒரு பொதுத் தேர்தலை (17.09.2019) யூதர்கள் சந்தித்துள்ளனர். கடந்த ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலில் மூன்றாவது தடவையாக பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு தேர்ந்தெடுக்கப்பட்டார். அத் தேர்தலில் 120 இடங்களில் 65 இடங்களில் நெதன்யாகுவின் லிகுட் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பெற்றிருந்தன. ஆனால் அக்கூட்டணிக் கட்சிகள் அதிகார ரீதியாக தமக்குள் முரண்பட்டுக் கொண்டதனால் அவசர தேர்தலுக்கு போக வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக இஸ்ரேல் பெய்டனு கட்சித் தலைமை நெதன்யாகு அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றதன் விளைவே பாராளுமன்றத்தில் அவருக்கான பெரும்பான்மை பலம் இழக்க வேண்டியேற்பட்டது.
நடந்து முடிந்த தேர்தலில் பிரதமர் நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கும் முன்னாள் இராணுவத் தளபதி பென்னி கன்டஸ் தலைமையிலான புளு அண்ட் வயிட் கட்சிக்கும் இடையில் பலத்த போட்டி நிலவியது. தேர்தல் பிரசாரத்தின் போதே பெருமளவு மோதல்கள் காணப்பட்டன. பல இடங்களில் கைகலப்புக்கள் நிகழ்ந்தன. தேர்தலுக்கு பின்னர் வெளியிடப்பட்ட முடிவுகளின்படி நெதன்யாகுவிற்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர் மீதான ஊழல் அதிகார துஸ்பிரயோகம் மற்றும் நீண்ட நாள் ஆட்சியில் அமர்ந்துள்ளார், போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக மேற்காசியாவில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலை மேலும் பதட்டமாக்க நெதன்யாகு முனைவதாக வாக்காளர் கருதுகின்றனர். 120 ஆசனங்களை கொண்ட பாராளுமன்ற தேர்தலில் லிகுட் கட்சி 31 இடங்கள் மட்டுமே பெற்றது. அதன் வலது சாரி கூட்டணியுடன் சேர்ந்தே 55 இடங்களைப் கைப்பற்றியுள்ளது. எதிர்கட்சியான பென்னி கான்ட்ஸ் தலைமையிலான புளு அன்ட் வயிட் கட்சி 33 இடங்கள் உள்ளிட்ட கூட்டணிக்கு 54 இடங்களை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் அரபு கட்சிகளின் கூட்டமைப்பான ஜாயின்ட் லிஸ்ட் கட்சி 12 இடங்களுடன் இருக்கிறது. பழைமைவாத கட்சியான ஷாஸ்க்கு 9 இடங்கள் கிடைத்துள்ளன. ஆட்சி அமைக்க 61 ஆசனங்கள் தேவையெனும் பட்சத்தில் இரண்டு பிரதான கட்சியும் தனிப்பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சியான பளூ அன்ட் ஒயிட் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அத்தகைய முயற்சி பிரதமர் தெரிவில் குழப்பத்தை ஏற்படுத்தியது. தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தானே முதல் பிரதமராக வேண்டும் எனவும் மீதிக்காலப் பகுதிக்கு எதிர்க்கட்சி தலைவரான பென்னி கான்ட்ஸ் பிரதமராகலாம் என்றும் கருத்து தெரிவித்தார். ஆனால் இதனை மறுத்துள்ள பென்னி முதல் காலப்பகுதியில் தானே பிரதமராக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் தேசிய அரசமைப்பதில் சாத்தியப்பாாடு அற்ற நிலையில் இஸ்ரேலின் ஜனாதிபதி ரியுவென் ரிவ்லின் நெதன் யாகுவை ஆட்சி அமைக்குமாறு அழைத்துள்ளார்.
ஆட்சி அமைக்கும் இழுபறிக்கு அப்பால் இத்தேர்தல் மூலம் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட இன்னுமொரு அரசியல் நெருக்கடி அரபுக்களின் பாராளுமன்ற அரசியலுக்கான பிரவேசமாகும். இஸ்ரேலில் இடம்பெற்ற இரண்டு பொதுத் தேர்தல்களிலும் இஸ்ரேலில் உள்ள அரபுக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அரபுக்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தேர்தல் 10 இடங்களை வென்றதுடன் இத்தேர்தலில் 13 ஆனங்களை கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் அரபுக் கட்சிகளின் கூட்டணி இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளன. இது எதிர்கால இஸ்ரேலின் இருப்பில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமையும். தனித்து யூதர்களைப் பிரதிபலிக்கும் இஸ்ரேலின் இருப்புக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்தும். இவ்வகை அரபுக்களின் வளர்ச்சிக்கு ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரம் பிரதான காரணமாக அமைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தின் போது நெதன்யாகு தாம் வெற்றி பெற்றால் ஜோர்டான் பள்ளத்தாக்கு மற்றும் வடபகுதி டெட்சீ ஆகியவை இஸ்ரேலின் இறைமைக்கு உட்படும் எனவும், தன்னால் மேற்கு கரையில் உள்ள அனைத்து குடியேற்றங்களையும் இணைத்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.
முடிவெடுப்பதில் செல்வாக்கு செலுத்த வேண்டும் என்ற அரபுக்களின் தலைமையின் நோக்கமாகவுள்ளது. அரசியல் அதிகாரம் மற்றும் இஸ்ரேலிய அமைப்பில் வளங்களை ஒதுக்கீடு செய்யும் மையமாக விளங்கும் ஆளும் கூட்டணியில் இதுவரை எந்த அரபு கட்சிகளும் உள்வாங்கப்படவில்லை. எனவே இந்நிலையினை மாற்றியமைக்கும் நோக்கோடு விழிப்புணர்வு செய்யப்பட்ட பிரச்சாரமும் அரபுக்களின் அரசியல் பங்குபற்றலில் ஈடுபாடுமே புதிய திருப்பமாக அமைந்துள்ளது. இஸ்ரேலியர்களில் 20 சதவீதத்திற்கு மேல் வசிக்கும் அரபுக்கள் எந்த அரசியல் பொறுப்பையும் வகித்ததில்லை. அய்மான் ஓடே எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், முதல் முறையாக அவருக்கு பல்வேறு முக்கிய பொறுப்புக்கள் கையளிக்க வேண்டிய நிலை இஸ்ரேலுக்கு ஏற்படும். குறிப்பாக இஸ்ரேல் உளவுத்துறை மாதம்தோறும் எதிர்க்கட்சித் தலைமைக்கு உளவு அறிக்கையினை வழங்க வேண்டும் என அரசியலமைப்பு விதி குறிப்பிடுகிறது மேலும் இஸ்ரேல் சார்பில் சர்வதேச அளவில் ராஜீக பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை தவிர்க்க முடியாததாகும். தூதுவர்களை அணுகுதல் அவர்களுக்கான விருந்து நிகழ்வில் பொறுப்பான உரையாற்றுதல் என பல விடயங்களில் அதிக பொறுப்புடைய தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் செயல்படுவார்.
மறுபக்கத்தில் ஈரானின் எழுச்சியும் மேற்காசியாவில் பாரிய நெருக்கடியை அமெரிக்காவுக்கு வழங்கியிருக்கின்றது. இங்கு அமெரிக்கா எதிர்நோக்கும் சவாலானது இஸ்ரேல் எதிர்கொள்வதற்கு சமமானது. எனவே பிராந்திய தளத்தில் இஸ்ரேலின் உறுதியற்ற ஆட்சியால் எதனையும் எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்படும். இச்சந்தர்ப்பத்தை ஈரான் பயன்படுத்திக் கொள்ள முனையும் அமெரிக்க தேர்தலும் இஸ்ரேலின் நெருக்கடியும் ஈரானின் அணுவாயுத பரிசோதனையை இலகுபடுத்தும். ஆனால் மொஸாட் அமைப்பின் நவடிக்கை கட்சி அரசியலைக் கடந்தது என்பதையும் நிராகரித்துவிட முடியாது. ஈரான் மட்டுமல்ல சீனா, ரஷ்யா போன்ற சக்திகளது நடவடிக்கைகளும் சிரியா தொடர்பான அரசியலும் அதிகமான நெருக்குவாரத்தை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தும். ஆனால் யூதர்களைப் பொறுத்தவரை மேற்காசியாவை சரியாக கையாளும் தலைமையை தேடுவதாகவே அவர்களது தேர்தல் நடத்தை காணப்படுகிறது.
எனவே இன்றுள்ள நிலையை தீர்க்கத் தவறினால் இஸ்ரேல் அதிக விளைவுகளை எதிர்நோக்கும். அரசியலில் காலத்திற்கு ஏற்ப தீர்மானம் எடுப்பதே முக்கியமானது. அந்த தருணத்தை இதுவரை இஸ்ரேல் சரிவரப் பாவித்து வந்துள்ளது. இதிலும் சரியான முடிவுகளை யூதர்கள் எடுக்கத் தவறமாட்டார்கள் என்பது கணிப்பீடாக உள்ளது. ஆனால் ஈரானியரோ அல்லது அராபியர்களோ அதிகம் அரசியல் மாற்றங்களை செய்யக்கூடிய காலப்பகுதியாக இது அமைந்துள்ளது. அதற்கு பக்க பலமாக சீனா, ரஷ்யா விளங்குவதும் பெரும் உந்துதலாக அமையும்.
கலாநிதி கே. ரீ. கணேசலிங்கம்