![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/09/28/q3.jpg?itok=IjJymAgm)
களத்தில் 20 நாடுகள்! 48 போட்டிகள்!!
9வது றக்பி உலகக் கிண்ணத் தொடர் கடந்த வாரம் ஜப்பான் டோக்கிய நகரில் ஆரம்பமாகி டொயோடா, புகோகா, கொமோகயா, ஹிகாஷிஒஷாகா போன்ற முக்கிய 11நகர்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கடந்த சில மாதங்களாக பல பகுதிகளிலும் நடைபெற்ற தெரிவுப் போட்டிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ள 20நாடுகள் களமிறங்கியிருக்கும் இத் தொடரில் ஏ. பி. சி. டீ என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலுமுள்ள அணி தனது குழுவில் மற்றைய அணியுடன் மோதும். இவ்வடிப்படையில் முதற் சுற்றில் 40போட்டிகளும், காலிறுதியில் 4போட்டிகள், அரையிறுதி, இறுதிப் போட்டி, 3ம் இடப்போட்டி என மொத்தம் 48போட்டிகள் இத்தொடரில் நடைபெறவுள்ளது. நவம்பர் 02ம் திகதி யகோஹாமா நகரில் இறுதிப் போட்டி நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
1987ம் ஆண்டு ஆரம்பமான முதல் றக்பி தொடரை அவுஸ்திரேலிய-−நியூலாந்து அணி இணைந்து நடத்தின. முதல் உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் அணியை 29-9என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது. றக்பி உலகில் சிறந்த அணியாக வலம்வரும் நியூசிலாந்து அணி இதுவரை மூன்று முறை கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளதுடன் அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகள் இரு முறையும், இங்கிலாந்து அணி ஒரு முறையும் கிண்ணம் வென்றுள்ளது. மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிரான்ஸ் அணியால் ஒருமுறை கூட கிண்ணம் வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அநேக றக்பி ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கால் இறுதிக்குத் தெரிவாகும் அணிகளென இனம் கண்டுள்ள 8அணிகள் வருமாறு:
கீரான் ரீட் தலைமையில் களமிறங்கும் நடப்புச் சம்பியனான நியூசிலாந்து அணி இதுவரை நான்கு முறை உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி 1987ம், 2011, 2015ஆம் ஆண்டுகளில் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. இதுவரை உலகக் கிண்ணத் தொடரில் 50போட்டிகளில் மோதியுள்ள அவ்வணி 44வெற்றிகளைப் பெற்றுள்ளது. சர்வதேச றக்பி தரவரிசையில் முதலிடத்திலுள்ள அவ்வணி இம்முறை மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் ஹெட்ரிக் வெற்றிக்காக களமிறங்கியுள்ளது.
தரவரிசையில் 2ம் இடத்திலுள்ள அயர்லாந்து அணி றோரி பெஸ்ட் தலைமையில் களமிங்குகின்றது. உலகக் கிண்ண உச்ச திறமையாக ஆறு முறை காலிறுதிக்குத் தெரிவாகியுள்ள அவ்வணி 9உலகக் கிண்ணத் தொடர்களில் 38போட்டிகளில் விளையாடி 22வெற்றிகளையும் 15தோல்விகளையும் பெற்றுள்ளதோடு ஒரு போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவுற்றுள்ளது.
தர வரிசையில் மூன்றாவது இடத்திலுள்ள இங்கிலாந்து அணி ஒவன் பெர்ரில் தலைமையில் 9வது முறையாகவும் களமிங்குகிறது. அவ் அணி 2003ம் ஆண்டு கிண்ணம் வென்ற அணியாகும். இதுவரை 44உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடி 31வெற்றிகளைப் பெற்றுள்ளது.
தரவரிசையில் 4வது இடத்திலுள்ள வேல்ஸ் அணி அலுன் வென் ஜோன்ஸ் தலைமையில் களமிறங்குகிறது. 1987ம் ஆண்டு மூன்றாமிடம் பெற்றதே அவ்வணியின் உலகக் கிண்ண உச்ச பெறுபேறாகும். 37உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடியுள்ள வேல்ஸ் அணி இதுவரை 21வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
றக்பி உலகில் சிறந்த அணிகளில் ஒன்றாகக் கருதப்படும் தென்னாபிரிக்க அணி இதுவரை இரு முறை உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. சர்வதேச தரவரிசயில் 5வது இடத்திலுள்ள அவ்வணி இம்முறை சியா கோலிசி தலைமையில் களமிறங்குகிறது. 36உலகக் கிண்ணப் போட்டிளில் விளையாடியுள்ள அவ்வணி 30வெற்றிகளைப் பெற்றுள்ளது.
மிச்சல் கேய்கே தலைமையில் களமிறங்கும் அவுஸ்திரேலிய அணி உலக தரவரிசையில் 6வது இடத்திலுள்ள அணியாகும். நான்கு முறை இறுதிப் போட்டிகுத் தெரிவாகியுள்ள அவ்வணி இதுவரை இரு முறை கிண்ணம் வென்றுள்ளது. உலகக் கிண்ணத் தொடர்களில் 48போட்டிகளில் விளையாடி 39வெற்றிகளைப் பெற்றுள்ளது.
ஸ்கொட்லாந்து அணி ஸ்டுவர் மெக்னெலி தலைமையில் களமிறங்குகிறது. உலகக் கிண்ணத் தொடரின் இவ்வணியின் உச்ச திறமை 1991ம் ஆண்டு 4வது இடமாகும். இதுவரை 38போட்டிகளில் 22வெற்றிகளைப் பெற்றுள்ளது. உலகத் தரவரிசையில் நன்காவது இடத்திலுள்ளது.
தரவரிசையில் 8வது இடத்திலுள்ள பிரான்ஸ் அணி இம்முறை 9வது தடவையாக உலகக் கிண்ணத் தொடரில் களமிறங்கியுள்ளது. அவ்வணி இதுவரை மூன்று முறை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள போதிலு்ம் ஒரு முறைகூட கிண்ணம் வென்றதில்லை. 2011ம் ஆண்டு நியூசிலாந்துடனான இறுதிப் போட்டியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் கிண்ணம் பெறும் சந்தர்ப்பத்தை இழந்தது. அவ்வணி இதுவரை உலகக் கிண்ணத் தொடரில் 48போட்டிகளில் 33வெற்றிகளைப் பெற்றுள்ளது.
எம்.எஸ்.எம். ஹில்மி