இலங்கை அணியையும், அதிகாரிகளையும் பிரமிக்கவைக்கும் வகையில் பாகிஸ்தான் நகரங்களில் நாலா புறமும் இலங்கைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு அவர்களுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் ரசிகர்கள் கராச்சி மற்றும் லாகூர் மைதானங்களில் ஒரு கையில் பிறைக்கொடியையும் மறுகையில் சிங்கக்கொடியையும் ஏந்திய வண்ணம் போட்டியை காண வந்திருந்திருந்தனர். தனுஷ்க குணதிலக்க, பானுக ராஜபக்ஷ, தசுன் ஷானக போன்ற வீரர்கள் ஆறு ஓட்டங்கள் அடிக்கும் போது சிங்கக் கொடியையும், அமீர், வஹாப், வஸீம் போன்ற பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளைக் கைப்பற்றும் போது பிறைக்கொடியை உயர்த்திய காட்சி தொலைக்காட்சி ரசிகர்களையும் நெகிழ வைத்தது.
விளையாட்டின் மூலம் இவ்வாறான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை உணர்த்தியது இக்காட்சிகள். பாகிஸ்தான் மைதானங்களில் விளையாட எந்தவொரு அணியும் அங்கு செல்ல மறுத்த நிலையில், இலங்கை வீரர்கள் அங்கு சென்று விளையாடியமை நாடுகளுக்கிடையில் இருக்கும் பகைமையை மேலும் வளர்க்கக் கூடிய கருத்துக்களை கூறிவரும் சில கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த உதாரணமாக நமது வீரர்கள் திகழ்ந்தார்கள்.
அங்கு தாக்குதல் நடத்தப்படும் என புலனாய்வுத்துறையைக் காரணம் காட்டி இத்தொடரை நடக்க விடாமல் செய்யும் நோக்கில் கருத்துக்களை கூறிய சில ஊடகங்களுக்கு வெற்றிகரமாக முடிந்த இத்தொடர் ஒரு சாட்டையடியாகவே அமைந்துள்ளது.
ரொக்கட் ரோஞ்சர்களுக்கும், குண்டுகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் பயப்படாத நமது வீரர்கள் தங்களை நோக்கி வரும் வெள்ளைப் பந்துகளுக்கு பயப்படுவார்களா? என்ற கேள்விக்கு நமது வீரர்கள் பாகிஸ்தான் மண்ணில் வைத்தே தகுந்த பதிலையும் அளித்துள்ளார்கள்.
கடந்த பத்து வருடங்களாக பாகிஸ்தானில் பாதுகாப்பைக் காரணம் காட்டி உலக அணிகள் விளையாட மறுத்து வந்தன. இதனிடையே ஒரு சில அணிகளும் ஒரு சில வீரர்களும் அங்கு சென்று விளையாடினாலும் முழுமையான தொடர் அங்கு நடைபெறவில்லை.
கடந்த மாதம் நீண்ட இடைவெளிக்குப் பின் இலங்கை அணி அங்கு சென்று முழுமையான தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்தது. இலங்கையில் பயங்கரவாதம் தலைவிரித்தாடிய காலத்தில் முதலில் இலங்கைக்கு உதவியது பாகிஸ்தான் கிரிக்கெட் சபைதான். இலங்கை உலகக் கிண்ணம் கைப்பற்றிய 96ஆம் ஆண்டு இங்கு நடந்த உலகக் கிண்ண முதல் சுற்றுப் போட்டிகளில் வெளிநாட்டு அணிகள் இலங்கை மைதானங்களில் விளையாட மறுத்திருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி வீரர்கள் அச்சமில்லாமல் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் விளையாடிய முன் உதாரணத்தை சில அணிகள் பின்பற்றி இங்கு வந்து விளையாடின.
இதனால்தான் இலங்கை கிரிக்கெட் சபையும் நன்றியுணர்வோடு ஆரம்பம் முதலே பாகிஸ்தான் சென்று விளையாட முயற்சிகளை மேற்கொண்டாலும் இம்முறையே அது கைகூடியது. ஆனால் ஏதோ காரணங்களுக்காக இலங்கை கிரிக்கெட்டினதும், இலங்கை அரசினதும் வேண்டுகோளை 10 சிரேஷ்ட வீரர்கள் புறக்கணிக்க, இளம் வீரர்களைக் கொண்ட அணி அங்கு சென்று விளையாடத் தயாரானது. பாகிஸ்தனில் மீண்டும் சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கு உதவும் நோக்கிலேயே பல்வேறு நெருக்கடிக்கு மத்தியிலும் அங்கு தமது இளம் அணிகளை அனுப்பிவைத்தது இலங்கை கிரிக்கெட் சபை. இத்தொடரில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம் பெறவிருந்தாலும் அத்தொடர் அடுத்த மாதம் வரை பிற்போடப்பட்டது.
முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இலங்கை இளம் அணி சிறப்பாக விளையாடினாலும் வலுவான பாகிஸ்தான் அணியை வெல்ல முடியாமல் போனது. ஆனால் சிரேஷ்ட அணியைப் போன்று சிறப்பாகவே விளையாடியது.
கடைசியாக இலங்கையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான ரி/20 போட்டித் தொடரில் இலங்கை சிரேஷ்ட அணி தோல்வியுற்றிருந்ததால் இத்தொடரிலும் ரி/20 தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் பாகிஸ்தான் அணியிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளும் என்றே பலர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இத்தொடரில் இலங்கை அணியின் ஆட்டம் யாரும் எதிர்பாராத விதத்தில் மிகச் சிறப்பாகவே இருந்தது. புதிய அணி இத் தொடரில் தனது திறமையை சிறப்பாகவே வெளிப்படுத்தியுள்ளது. முதன் முதலில் தலைமைப் பொறுப்பேற்ற தசுன் சானக தமது அணியை சிறப்பாக வழிநடத்தியதுடன் இத்தொடரையும் 3-−0 என்ற வகையில் இலகுவாகக் கைப்பற்றினார்.
சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்ற ஒரு சில வீரர்களே இலங்கை அணியில் இடம்பிடித்திருந்தனர். சில புதுமுக வீரர்கள் உள்ளூர் தொடர்களில் திறமையாக விளையாடினாலும் சிரேஷ்ட வீரர்களின் பங்களிப்பினால் அவர்களுக்கு தேசிய அணியில் சந்தர்ப்பம் கிடைக்காமல் இருந்தது. ஆனால் அவர்களுக்கு கிடைத்த இச்சந்தர்ப்பத்தை சிறப்பாகப்பயன்படுத்தியுள்ளதுடன் பாகிஸ்தான் மண்ணில் முதற்தடவையாக ரி/20 தொடரைக் கைப்பற்றி சகலரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
இத் தொடர் வெற்றிக்கு அணியிலுள்ள சகல இளம் வீரர்களும் சிறப்பாகச் செயற்பட்டதே காரணம் எனலாம். முதல் போட்டியில் தனுஷ்க குணதிலக்க விரைவாக அரைச்சதமடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். பலம்வாய்ந்த துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட பாகிஸ்தான் அணியை 101 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து முதல் போட்டியில் 64 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. லசித் மலிங்க, லக்மால் இல்லாத வேகப்பந்து வீச்சு நொறுக்கப்படுமோ என்ற அச்சம் இருந்தாலும் நுவன் பிரதீப், ரஜித, லஹிருகுமார சிறப்பாகப் பந்து வீசி பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுத்திருந்தனர்.
முதல் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் உற்சாகத்துடன் களமிறங்கிய இலங்கை அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்று பாகிஸ்தான் மண்ணில் முதல் தடவையாக தொடரைக் கைப்பற்றியது.
கடந்த காலங்களில் அனுபவம் மிக்க இலங்கை அணியால் இலங்கை மண்ணில் கூட சிறிய அணிகளை எதிர்கொள்ள முடியாமல் போன பல சந்தரப்பங்கள் உள்ளன.
ஆனால் நிரந்தர அணியல்லாத இலங்கை அணி இத்தொடரை முழுமையாகப் கைப்பற்றி சாதனை படைத்தது.
இரண்டாவது போட்டியில் சர்வதேச போட்டிகளில் அனுபவமில்லாத சுமார் 10 வருடங்கள் சர்வதேச அணியில் இடம்பெறக் காத்திருந்த வீரர் பானுக ராஜபக்ஷ அபாரமாக ஆடி இலங்கையின் தொடர் வெற்றிக்கு வித்திட்டார். இவருடன் செஹான் ஜயசூரியவும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி இலங்கை அணி 182 ஓட்டங்களைப் பெற உதவினார்.
இரண்டாவது போட்டியில் சவாலான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமடைந்தது. இலங்கை அணியின் அபார பந்து வீச்சில் 11 ஓட்டங்கள் பெறுவதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது அவ்வணி.
அதன் பின் பாகிஸ்தான் அணித்தலைவர் சப்ராஸ் அஹமட் அதிரடியாக விளையாடினாலும், சுழற் பந்து வீச்சாளர் ஹசரங்கவின் 3வது ஓவரில் செஷாட், உமர் அக்மல், சப்ராஸ் அஹமட் அட்டமிழக்க பாகிஸ்தான் அணியின் தோல்வி உறுதியானது. உமர் அக்மால் சந்தித்த முதல் பந்திலேயே ஓட்டம் பெறாமல் ஆட்டமிழந்து, ரி/20 போட்டிகளில் 10 முறை பூஜ்ஜியத்துக்கு ஆட்டமிழந்த இலங்கை வீரர் டில்ஷானின் மோசமான சாதனையை சமப்படுத்தினார்.
தொடரில் முன்னிலையில் இருந்த இலங்கை அணி மூன்றாவது போட்டியில் ஆரம்பத்தில் விக்கட்டுகளை இழந்து தடுமாறினாலும் நடுவரிசையில் வந்த அறிமுக வீரர் ஓஷத பெர்னாண்டோ சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு வலுசேர்த்தார். நடைபெற்று முடிந்த இத்தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு இளம் வீரர் அதிரடியாக ஆடி இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியதைக் காண முடிந்தது. இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தொடர் முழுக்க பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் பிரகாசித்த வனிது ஹசரங்க தெரிவானார்.
புதியவர்களைக் கொண்ட இலங்கை இளம் அணியிடம் பலம்மிக்க பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியமை அத்தரப்புக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தாலும், தங்கள் மண்ணில் மிகத் தரமானதொரு சர்வதேச போட்டியை நடத்திய திருப்தியை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ரி/20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு பல இளம் வீரர்களை இனம் காட்டியுள்ளது இத்தொடர். கடந்த கால தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த இலங்கை அணிக்கு இத் தொடர் வெற்றி மிகப்பெரும் மனோபலத்தை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எஸ்.எம். ஹில்மி