![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/10/26/q4.jpg?itok=fJVsIVAc)
விளையாட்டு வீரர்களின் ஊதியப் பிரச்சினைகளால் அந்நாட்டு விளையாட்டுத்துறையே பின்னடைவைச் சந்திக்க நேரிடுகின்றது. அந்த வகையில் முக்கியமாக கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் இப்பிரச்சினை பூதாகரமாகக் காணப்படுகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடு மேற்கிந்தியத் தீவுகள், சிம்பாப்வே போன்ற அணிகளாகும். மேற்கிந்தியத்தீவுகளில் 2000ஆம் ஆண்டுக்குப் பின் ஏற்படும் சம்பளப் பிரச்சினையின் காரணமாக அந்நாட்டுக் கிரிக்கெட் சபையுடன் வீரர்களுக்கு ஏற்படும் தகராறினால், அங்கு சிறந்த வீரர்கள் இருந்தும் கூட கடந்த இரு தசாப்தங்களாக ஒரு சிறந்த அணியை உருவாக்க முடியாமல் உள்ளது.
கடந்த காலங்களில் உலகப் பிரபல்யம் பெற்றுவிளங்கும் விளையாட்டுக்களான கால்பந்து, டென்னிஸ், கூடைப்பந்து போன்ற போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கே அதிக ஊதியம் கிடைப்பதால் அவ்வகை விளையாட்டுகளில் ஈடுபடும் வீரர்களே பெரும் செல்வந்தர்களாக வலம்வருகின்றனர். ஆனால் அண்மையில் அறிமுகமான ரி/20கிரிக்கெட் லீக் போட்டிகளின் ஆதிக்கத்தால் கிரிக்கெட் வீரர்களின் ஊதியமும் வருடா வருடம் அதிகரித்த வண்ணமேயுள்ளது. இதில் சற்று பின்னடைவு ஏற்பட்டால் கூட மற்றைய தொழிற்துறைகளைப் போல் விளையாட்டு வீரர்களும் ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர். இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பணக்கார கிரிக்கெட் சபைகளினால் அவர்கள் கேட்கும் கொடுப்பனவுகளை ஒரு பிரச்சினைகளுமின்றி வழங்கக் கூடியதாகவுள்ளது. ஆனால் மேற்கிந்தியத்தீவுகள், சிம்பாப்வே, பங்களாதேஷ் போன்ற நாடுகளின் கிரிக்கெட் சபைகள் இப்பிரச்சினையால் பெரும் சிக்கலுக்குள்ளாகின்றன. இதனால் சிம்பாப்வேயில் கிரிக்கெட் அழிந்துவிடும் நிலைமையும் உருவாகியுள்ளது.
கடந்த காலங்களில் கிரிக்கெட் வீரர்கள் கரிக்கெட் சபையுடன் இணங்கிப் போகும் ஒரு போக்கு இருந்தது. அதற்குக் காரணம் அவ்வீரர்கள் தனது அணிக்கு மட்டுமே விளையாடுவதால் அநேகமாக சம்பளப் பிரச்சினைகளில் தலையிடுவதில்லை. ஆனால் ரி/20கிரிக்கெட் போட்டியின் அறிமுகத்துடன் அநேக நாடுகளில் ரி/20லீக் தொடர்கள் ஆரம்பிக்கட்டு, அவ்வணிகளின் உரிமையாளர்கள் சிரேஷ்ட வீரர்களை அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்வதால் அதிக ஊதியம் வழங்கும் அத்தொடர்களில் சிரேஷ்ட வீரர்கள் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சம்பளப் பிரச்சினைகளின் போது அவ்வீரர்கள் கிரிக்கெட் சபையுடன் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கிரிக்கெட் சபைகளும் வருடா வருடம் தனது வீரர்களின் கொடுப்பனவுகளை அதிகரித்த வண்ணமேயுள்ளது. இதனடிப்படையில் கடந்த வாரம் இலங்கை வீரர்களுக்கும் 4பிரிவுகளின் அடிப்படையில் கொடுப்பனவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் பங்களாதேஷ் அணி ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் அடுத்த மாதம் இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெறவுள்ள தொடர்கள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பங்களாதேஷில் நடைபெறும் ரி/20பிரிமியர் லீக், இந்தியன் பிரிமியர் லீக் பாணியில் உரிமையாளர்கள் நடத்தி வந்தார்கள். ஆனால் சூதாட்டம் உள்ளிட்ட கிரிக்கெட் ஊழல் புகார்களினால் உரிமையாளர்கள் தொடரை நடத்தும் முறையை இரத்துச் செய்தது. இதனால் வீரர்களின் வருவாயும் அதிகளவில் குறைந்துள்ளது. மேலும் முதல் தரக் கிரிக்கெட்டில் வீரர்களின் கொடுப்பனவுகளும் உயர்தப்படவில்லை என அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
முதல் தரக்கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு, பிரிமியர் லீக் தொடரை வர்த்தக முறையில் மாற்ற வேண்டும், உள்ளூர் பயிற்சியாளர்கள், உடலியல் நிபுணர்கள், களப்பணியாளர்கள் ஊதியம் அதிகரிக்க வேண்டும் போன்ற 11அம்சக் கோரிக்கையை முன் வைத்து பங்களாதேஷ் சிரேஷ்ட வீரர்கள் உட்பட பலரும் போட்டிப் பகிஷ்கரிப்புகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.
அந்நாட்டுப் பத்திரிகைக்கு பேட்டி அளித்த அணித் தலைவர் சகீப் அல் ஹசன் தெரிவிக்ைகயில்: கிரிக்கெட் சபையிடம் ஒரு தொலைநோக்குத் திட்டமும் இல்லை. உலகக் கிண்ணம் என்றால் ஒரு வருடத்துக்கு முன்பே திடடங்களைத்தீட்டி தயாராகுவார்கள். ஆனால் மற்றைய தொடர்களுக்கு அப்படியில்லை. உடனே தயாராக வேண்டும். அதனால்தான் பங்களாதேஷ் அணி திடீர் திடீரென சரிவுகளைச் சந்திக்க நேரிகின்றது. இதனால் பங்களாதேஷ் நிர்வாகத்துக்கு தூரநோக்குள்ள, அணியை முன்னோக்கிச் செல்வதற்கான சிறந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், வீரர்களின் குறைநிறைகளை புரிந்து கொள்வதற்குமான நிர்வாகியொருவரை நியமிக்க வேண்டும் என்றும் ஷகிப் அல்−ஹஸன் தெரிவித்தார்.
இக்கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை கிரிக்கெட் விளையாட மாட்டோம் என மொஹம்மதுல்லா, முஸ்பிகூர் ரஹிம், தமீம் இக்பால், ருபேல் ஹொசைன் உட்பட சிரேஷ்ட வீரர்கள் பலரும் கூறினர்.
இப்போராட்டங்களினால் உடனடியாக பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அடுத்த மாத ஆரம்பத்தில் இந்தியாவில் நடைபெறவுள்ள ரி/20போடடிகள், மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சம்பியன் தொடர் ஆரம்பமாகவுள்ளதால் கடந்தவாரமே அதற்கான பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட இருந்தது. ஆனால் இப்பிரச்சினையால் அப்பயிற்சி முகாமும் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இப்பிரச்சினை தொடர்பாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் நிர்வாகி நிஜாமுதீன் சௌத்திரி கூறிகையில்: இப்பிரச்சினை பற்றி உரிய ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இரு தரப்புகளிலும் சில விட்டுக்கொடுப்புகளுடன் இப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிந்திய தகவலின்படி இப்போராட்டம் கைவிடப்பட்டது.