சிறந்த பந்து வீச்சாளரான மலிங்க தலைவராக இல்லை! | தினகரன் வாரமஞ்சரி

சிறந்த பந்து வீச்சாளரான மலிங்க தலைவராக இல்லை!

தசுன் சானகவின் தலைமையில் பாகிஸ்தானுகுக்கு விஜயம் செய்த இலங்கை அணி ரி/20தரவரிசையில் முதல் இடத்திலுள்ள அவ்வணியை சொந்த மண்ணிலேயே தோல்வியடையச் செய்து இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தினர் எதிர்பார்க்கும், இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு சிறந்த வீரர்கள் உள்ளனர் என நிரூபித்துள்ளனர். 

ஆனால் அதன் பின் இலங்கை அணி பாகிஸ்தான் சென்ற இளம் வீரர்களை உள்ளடக்கி, சிரேஷ்ட வீரர்களையும் இணைத்துக் கொண்டு லசித் மலிங்கவின் தலைமையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் அவுஸ்திரேலியா பயணமானது.  

அங்கு நடைபெற்ற 3போட்டிகள் கொண்ட தொடரில் 3- – 0என்ற கணக்கில் படுதோல்வியடைந்தது. இப்படுதோல்வி  

திடீரென முடிவகளை எடுக்கக் கூடிய ரி/20போன்ற குறுகிய போட்டிகளில் தலைவரின் வகிபாகம் முக்கியமானது என்பதை உணர்த்தியுள்ளது. இவ்வகைப் போட்டிகளுக்கு இலங்கை அணிக்குத் தலைமைதாங்கும் லசித் மலிங்க சிறந்த பந்து வீச்சாளராக இருந்தாலும் அணியை வழிநடத்துவதில் பின்னடைவையே சந்தித்துள்ளார். அவர் தலைமை பொறுப்பேற்ற கடந்த காலங்களில் 7போட்டிகளில் மட்டுமே இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. அத்துடன் ரி/20தரவரிசையிலும் பின்னடவைச் சந்தித்துள்ளதுடன், அடுத்த வருடம் நடைபெற்றவுள்ள இவ்வகை உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதிகாண் போட்டியிலும் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

36வயதாகும் லசித் மலிங்கவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படுகின்றன. அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஹண்ரட் கிரிக்கெட் தொடருக்காக நடைபெற்ற ஏலத்தில் அவுஸ்திரேலியாவின் டேவிட் வோனர், கிரஹம் ஸ்மித், மிச்சேல் ஸ்டார்க், ரஷீத்கான் போன்றோரை அதிக விலைக்கு வாங்க அணிகள் போட்டிபோட்டன. மேலும் சர்வாதேச போட்டிகளில் விளையாடிய அனுபவமற்ற நேபாள வீரர் சந்தீப் லெம்ஷான் கூட அதிகவிலைக்கு ஏலம் போக, கூடிய விலைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இலங்கை நட்சத்திர பந்துவீச்சாளரான லசித் மலிங்கவை எடுப்பதற்கு ஒரு அணியும் முன்வரவில்லை. இவர் மட்டுமல்ல இலங்கையின் எந்தவொரு வீரரும் ஏலத்தில் விலைபோகவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறாக மற்றைய நாட்டு வீரர்கள் முன்னோக்கிச் செல்லும் போது எமது வீரர்கள் பின்னடைவையே சந்திக்கின்றனர். இது இவ்வாறிருக்க அண்மைய சம்பள ஒப்பந்தங்களிலும் இவ்வாறான வீரர்களையே முன்னிலைப் படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.  

அதிக சம்பளத்துக்கு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட வீரர்களில் பலர் கடந்த ஆண்டுகளில் ஓரிரு போட்டிகளிலும், ஒரு போட்டியிலும் விளையாடாத வீரர்களும் மேலும் போட்டித் தடையிலுள்ள வீரரும் அடங்குகின்றனர். 

இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் ரி/20உலகக் கிண்ணத் தொடருக்கு இலங்கை அணியை தயார்படுத்தும் இலங்கை கிரிக்கெட் இன்னும் நிரந்தரப் பயிற்சியாளர் தெரிவிலும், அணியின் தலைவர் தெரிவிலும் இன்னும் உறுதியான இறுதி முடிவை அறிவிப்பதிலும் தாமதம் காட்டி வருகின்றது.  

அண்மையில் பாகிஸ்தான் அணிக்கெதிராக தலைமைதாங்கிய தசுன் சானக சிறப்பாகச் செயற்பட்டிருந்தார். அழுத்தங்கள் ஏற்படும் வேளைகளில் சரியான முடிவுகளை எடுத்து சிறந்த முறையில் அணியை வழிநடத்தியிருந்தார். எதிர்வரும் உலகக் கிண்ணத்துக்கும் இவரையே தலைவராக நியமிக்கும்படியான அழுத்தம் இலங்கை கிரிக்கெட்டுக்கு ஏற்பட்டுள்ளது.  

மேலும் பாகிஸ்தான் தொடரில் ஒரு கட்டுக்கோப்போடு சிறப்பாக விளையாடிய தசுன் சானக, பானுக ராஜபக்ஷ, ஓஷத பெர்னாண்டோ, ஷெஹான் ஜயசூரியவை அவுஸ்திரேலிய தொடரில் சதுரங்கப் போட்டியில் காய்களை நகர்த்துவது போல் போட்டிக்குப் போட்டி துடுப்பாட்ட வரிசையை மாற்றியதும், விளையாடும் வீரர்களை மாற்றியதும் இப்படுதோல்விக்கு ஒரு காரணமாகும்.  

இத் தொடரில் விளையாடிய நிரோஷன் திக்வெல்ல கடைசியாக விளையாடிய 23ரி/20போட்டிகளிலும் ஒரு அரைசதம் மட்டுமே குவித்துள்ளார். இவ்வகைப் போட்டிகளில் அவரின் துடுப்பாட்ட சராசரி 19.50ஆகும். மற்றொரு வீரரான குசல் மெண்டிஸ் நிலையும் இதுவே. டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் சிறந்த முறையில் விளையாடினாலும் ரி/20தொடர்களில் தொடர்ந்து சொதப்பியே வருகிறார். இலங்கை கிரிக்கெட் இவர்கள் இருவரையும் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ணப் போட்டிவரை சோதனை முயற்சியில் ஈடுபடுத்தப்போகிறதா என்ற கேள்வியும் இலங்கை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இருபதுக்கு இருபது போட்டிகளில் லசித் மலிங்கவின் தலைமையில் 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 7போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளதுடன் 14போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.  

மேலும் லசித் மலிங்கவின் தலைமையில் 2014ம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்து கிண்ணம் வென்றாலும், அச்சமயம் அணிலியிருந்த அனுபவ வீரர்களான சங்கக்கார, மஹேல ஜயவர்தன போன்றோரின் ஆலோசனையும் அவருக்குக்கிடைத்திருந்தது.  

இலங்கை அணி கடைசியாக வென்ற நான்கு போட்டிகளிலும் முதலில் துடுப்பெடுத்தாடிய போட்டிகளாகும். ஆனால் அவுஸ்திரேலியாவுடனான முதல் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற பின்னும் குறுகிய பௌண்டரி எல்லையைக் கொண்ட மைதானத்தில் அவுஸ்திரேலிய அணியை துடுப்பெடுத்தாடப் பணித்தது மலிங்கவின் தவறான முடிவாகும். அப்போட்டியில் டேவிட் வோனர் சதமடித்ததுடன், அவுஸ்திரேலிய அணி தனது மண்ணில் கூடிய ஓட்டங்களையும் பதிவுசெய்தது. பாகிஸ்தான் தொடர் வெற்றிக்கு தனது பந்துவீச்சின் மூலம் பெரும் பங்காற்றிய கசுன் ராஜித இப்போட்டியில் 75ஓட்டங்களை வாரி வழங்கினார். தொடர்ந்து அவரது பந்து வீச்சுக்கு பௌண்டரி, சிக்ஸர் என அடித்தும் அடுத்தடுத்த ஓவர்களை வீச அவரை அழைத்தது மலிங்கவின் மற்றுமொரு தவறான முடிவாகும்.  

இலங்கை அணி 2018ம் ஆண்டு ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியிலேயே இலக்கை துரத்திச் சென்று வெற்றிபெற்ற கடைசி சந்தர்ப்பமாகும். அதன் பின் இலங்கை அணி வென்ற அனைத்துப் போட்டிகளும் முதலில் துடுப்பெடுத்தாடியவை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

எம்.எஸ்.எம்.ஹில்மி 

Comments