வடகொரிய - அமெரிக்க போட்டியும் கிம் ஜோங் - உன் தந்திரோபாயமும் | தினகரன் வாரமஞ்சரி

வடகொரிய - அமெரிக்க போட்டியும் கிம் ஜோங் - உன் தந்திரோபாயமும்

வடகொரிய - அமெரிக்க – தென் கொரிய விவகாரம் தொடர்ச்சியான அரசியல் பெறுமானத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த காலப்பகுதியில் அமைதியாக இருந்த போதும் மீளவும் நெருக்கடிமிக்க சூழலை தந்துள்ளது. வெளிப்படையாகப் பார்த்தால் யுத்த சூழல் தணிந்துள்ளதாக அமைந்தாலும் உள்ள மூன்று நாடுகளுக்கும் இடையில் போருக்கான முனைப்புகள் தீவிரமானதாக தென்படுகிறது. சர்வதேச மட்டத்தில் வல்லரசுகளும் அவற்றை எதிர்க்கும் நாடுகளும் ஒரு வகை யுத்த முகத்துடனேயே செயல்படுவது, தவிர்க்க முடியாத இராணுவ அரசியலாகும். இக்கட்டுரையும் வட கொரியத் தலைவரின் உத்திகளை புரிந்து கொள்வதாகவே அமையவுள்ளது.  

வட கொரியாவின் விமானப் படை மற்றும் விமான எதிர்ப்பு படைப் பிரிவுகள் சேர்ந்து பரசூட் வீரர்களின் திடீர்ப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டன. முன்னறிவிப்புமின்றி இராணுவப் பயிற்சி நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இத்தகைய போர் பயிற்சியை அந்நாட்டின் தலைவர் கிம் நேரடியாக ஆய்வு செய்ததாகவும் அவர் அது தொடர்பில் தெரிவிக்கும் போது வட கொரியாவின் இராணுவத்தை வெல்லமுடியாததாக உருவாக்குவதுடன் அப்போருக்கு தயார் நிலையில் இருப்பதற்கும் இத்தகைய அறிவிப்பின்றிய போர்ப் பயிற்சிகள் அவசியம் என்றார்.  

இதே நேரம் அமெரிக்கா தம்முடன் நிகழ்த்தும் பேச்சுவார்த்தையை எளிதாக்குவதற்கும் தென்கொரியாவுடன் அமெரிக்கா நடத்த திட்டமிட்டுள்ள இராணுவப் பயிற்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வடகொரியா அமெரிக்காவிடம் விண்ணப்பித்திருந்தது. ஆனால் அமெரிக்கா இவ்வருடம் நடாத்தவிருந்த போர் பயிற்சியை தள்ளிவைப்பதாக அறிவித்தது. இதற்கு பதிலளிக்கும் விதத்தில் வடகொரியாவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நிகழ்த்திய வடகொரியாவின் மூத்த அதிகாரி கிம் யாங் ஜோல் அமெரிக்காவுக்கு எதிராக தெரிவிக்கையில் இக்கூட்டு இராணுவப் பயிற்சியை அமெரிக்கா ஒத்திவைப்பதென்பது பொருத்தமற்றதாக உள்ளது. நாங்கள் இக்கூட்டு இராணுவ பயிற்சியை அமெரிக்கா கைவிட வேண்டும் அல்லது ஒரு முறையாவது நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். பயிற்சியை தற்காலிகமாக நிறுத்துவதனால் கொரிய தீபகற்பத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு ஏற்படாது. இது இராஜதந்திர முயற்சிக்கு உதவாது. தந்திரமாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடாத்த வட கொரியாவுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. அமெரிக்கா தனது விரோதப் போக்கு கொள்கைகளை முற்றிலுமாக திரும்பப் பெறும் வரை, வடகொரியா பேச்சுவார்த்தைக்கு திரும்பப் போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.  

கிம் ஜோலின் அறிக்கை மிக தந்திரோபாயமிக்கதாகவும் இராஜதந்திர உரையாடலாகவும் அமைந்துள்ளது. முற்றிலும் வளர்ச்சியடைந்த தேசத்தின் தலைமைகள் உரையாடுவது போன்றே அவ்வறிவிப்பு அமைந்துள்ளது.

அமெரிக்க வல்லரசிடம் கூட தற்போது எதிர்பார்க்க முடியாத அளவுக்கு வலிமையானதும் வளர்ச்சி அடைந்ததுமான அறிவிப்பாக தெரிகிறது.

இது வட கொரியாவின் முதிர்ச்சியை காட்டுகிறது. அது இராஜதந்திரத்திலும் உபாயங்களை வரைவதிலும் வலுமிக்க சக்திகளுக்கு நிகரானதாக மாறிவருகிறது.  

அது மட்டுமன்றி ஒரு சிறிய மக்கள் தொகையையும் சிறிய இராணுவத்தையும் கொண்டுள்ள தேசம் அமெரிக்காவுக்கு சவால்விடும் அளவுக்கு வளர்ந்துள்ளது என்பது கவனிக்கத்தக்க விடயமாகும். இங்கு சவால் என்பது அமெரிக்காவுக்கு சமதையான தேசமாக இல்லை என்பது மட்டுமல்ல பொருளாதாரத்திலும் சமூக கட்டமைப்பிலும் தொழிநுட்ப வளர்ச்சியிலும் விஞ்ஞான ரீதியான விருத்தியிலும் மிகப் பலவீனமான அரசாகவே வடகொரியா காணப்படுகிறது. ஆனால் அத்தனை பலவீனங்களையும் கடந்து தனது இருப்பையும் மக்களது இருப்பையும் ஆட்சியையும் பாதுகாக்கும் அனைத்து உபாயங்களையும் கொண்டதாக, வடகொரியாவை மாற்றி வருகின்றார் கிம். அது மட்டுமன்றி புவிசார் அரசியல் ரீதியில் அதிக நெருக்கடியும் வாய்ப்புகளும் கொண்ட தேசமாக வடகொரிய உள்ளது. ஆனால் நெருக்கடியை கடந்து வாய்ப்புக்களை சரியாகவும் தி-ட்டமிட்ட அடிப்படையிலும் வகுத்து கையாண்டுவருவது கவனிக்கக் வேண்டிய விடயமாகும்.  

குறிப்பாக கிம் தற்போது திடீரென நிகழ்த்திய போர்ப்பயிற்சியானது அமெரிக்காவின் அனைத்து நகர்வுகளுக்கும் சவாலானதாகவே மாறியுள்ளது. அமெரிக்கா- தென் கொரிய பயிற்சியை ஒத்திவைத்ததுடன், அதனை முழுமையாக கைவிட கோரியுள்ளதை போர்ப் பயிற்சி மூலம் உணர்த்தியுள்ளது. அதாவது அமெரிக்கா செய்ய வேண்டிய அனைத்தையும் வடகொரிய செய்துள்ளது. இது பெரும் மிரட்டலாகவே தென்படுகிறது. அத்தகைய மிரட்டலுக்கு பிரதான காரணம் அணுவாயுதம் மட்டுமல்ல அதன் புவிசார் அரசியல் பலமுமாகும். அத்தகைய இரண்டையும் கையில் வைத்துக் கொண்டு ஒரு சிறிய தேசிய இனம் அதன் தலைமையினால் திட்டமிட்டு வழிநடத்தப்படுகிறது.  

எனவே, வடகொரியாவின் திடீர் போர்ப்பயிற்சி வெற்றிகரமானதாகவோ அல்லது பிற சக்திகளை கையாளுவதற்கானதாகவோ இருக்கலாம் அல்லது இல்லாது போகலாம் ஆனால் அமெரிக்காவின் அனைத்து வாய்ப்புகளுக்கும் இழுத்தடிப்புகளுக்கும் அதன் இராஜதந்திர உத்திகளுக்கும் முடிவு கட்டிவி-ட்டது.

இது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பின் வெற்றி வாய்ப்பினை நெருக்கடிக்கு உள்ளாக்கும். வடகொரியாவை முன்னிறுத்தி அதி-க இலாபத்தினை அடைய முனைந்தவர் என்ற வகையில் ட்ரம்ப்க்கு பாதிப்பானதே. இதன் மூலம் தென் கொரியாவையும் ஏனைய நட்புச் சக்திகளையும் இழப்பதா அல்லது வடகொரியாவுடன் நிரந்தர பகைமையை ஏற்படுத்துவதா என்பதே அமெரிக்காவின் தற்போதைய குழப்பமாகும். ஆனால் ட்ரம்ப்பை பொறுத்தவரையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் பிரதான சவாலாக வடகொரியா விவகாரம் அமைந்துள்ளது.

கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்  

Comments