விசித்திரமாகப் பந்துவீசும் கெவின் கொத்திகொட! | தினகரன் வாரமஞ்சரி

விசித்திரமாகப் பந்துவீசும் கெவின் கொத்திகொட!

உலக விளையாட்டு வீரர்கள் பிரபல்யமாவதற்கு திறமை முக்கியமானதாகும். ஆனால் திறமையைப் போன்றே வீரர்கள் பிரபலய்மாவதற்கு அவர்களின் உடல் மொழி, சிகை அலங்காரம், விசேடமான நடனங்கள், வினோதமான செயற்பாடுகள் காரணமாகவும் சில வீரர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வார்கள். குறுந்தூர ஓட்டவீரரான ஹுசைன் போல்ட் வானவில் ​போல் அழகாக கையைவிரிப்பது, மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்கள் நடனம் ஆடுவது போன்றவைகளை இங்கு குறிப்பிடலாம். 

கிரிக்கெட் உலகில் பல வீரர்கள் தங்களது தனிப் பாணியிலான பந்து வீச்சின் மூலம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். 80களில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்துல் காதர் பந்து வீச ஓடி வரும் போது இருகைகளிலும் எச்சிலைத்தடவி பந்து வீசும் பாணியால் பிரபலமடைந்திருந்தார். இதே பாணியில் மெதுவாக நடந்து வந்து பந்து வீசும் அவுஸ்திரேலிய சுழற்பந்து ஜாப்பவான் ஷேன் வோர்ன் பிரபல்யமடைந்திருந்தார்.  

இவ்வகையில் தனக்கென ஒரு பாணியை அமைத்து அதில் மிகவும் பிரபல்யமடைந்தவர் இலங்கை அணியின் லசித் மாலிங்க. இவர் சிகையலங்காரம் மூலமும், கையை நேராக உயர்த்தி பக்கவாட்டில் பந்தை எரிவது போல் பந்து வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ராவும் மலிங்கவின் பந்து வீச்சுப் பாணியில் பந்து வீசி ரசிகர்கள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். தற்போது இப்பாணியிலான பந்து வீச்சை சில இளம் பந்து வீச்சாளர்கள் பின்பற்றி வருகின்றனர். ஆனால் அண்மையில் மிகவும் விசித்திரமான முறையில் பந்து வீசும் ஒரு பந்துவீச்சாளரைப் பற்றிய செய்தி வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.  

இவர் இலங்கை சுழற்பந்து வீச்சாளரான கெவின் கொத்திகொட. இவரது விசித்திர பந்து வீச்சால் கிரிக்கெட் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். 

கிரிக்கெட் வீரர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள பெரியளவில் போட்டியை சந்தித்து வரும் நிலையில் இவ்வாறான புதிய பாணியிலான பந்து வீச்சு வழிமுறைகளை சில வீரர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். 

காலி உனவடுனவில் 1998ம் ஆண்டு பிறந்த இவர் காலி மஹிந்த வித்தியாலயத்திலிருந்து கிரிக்கெட் உலகுக்கு அறிமுகமானவர். இவர் 2017ம் ஆண்டு நடைபெற்ற 19வயதின் கீழ் ஆசியக்கிண்ணத் தொடரில் சர்வதேச கிரிக்கெட் உலக அறிமுகத்தைப் பெற்றார். 

விசித்திரமான முறையில் ஓடி வந்து குப்புற கவிழ்ந்து விழுவது போல் பந்து வீசி வியப்பில் ஆழ்த்தியுள்ளார் இலங்கை இளம் வீரர் கெவின் கொத்திகொட. 

தற்போது அபூதாபியில் 10ஓவர்கள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் யுவராஜ் சிங், அன்ரூ ரசல், திஸர பெரேரா, இயன் மோகன், ஷேன் வொட்சன், ஹசீம் அம்லா, லசித மாலிங்க, மத்தியூஸ், போன்ற முன்னணி வீரர்கள் விளையாடி வருகின்றனர். இத்தொடரில் பங்களா டைகர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் இலங்கை வீரர் கெவின் கொத்திகொட. 

அவர் கடந்த வாரம் கர்நாடகா டஸ்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வித்தியாசமாக பந்து வீசி ஷேன் வொட்சனை ஆட்டமிழக்கச் செய்து அனைவரையும் திகைக்க வைத்துள்ளார். இந்த வித்தியாசமான பந்து வீச்சு தற்போது வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

சுழற் பந்து வீச்சாளரான கெவின் பந்து வீச ஓடிவரும் போது காலை எக்ஸ் வடிவில் மடக்கி ஓடி வருகிறார். பின் காலை பக்க வாட்டில் வைத்துக்கொண்ட முகத்தை பிரதான நடுவரைத் திரும்பிப் பார்க்கும் வகையில் திருப்பி இரு கைகளையும் பின்நோக்கி எடுத்துச் சென்று பந்தை விசுகிறார். 

அவர் பந்து வீசும்போது துடுப்பாட்ட வீரரையோ, விக்கெட்டையோ பார்ப்பதில்லை. கையிலிருந்து பந்தை எறியும் போது அவரது பார்வை பிரதான நடுவரின் பக்கம் தான் திரும்புகிறது. பந்து கையைவிட்டுச் சென்ற பிறகுதான் துடுப்பாட்ட வீரரின் பக்கம் அவரது பார்வை செல்கிறது. 

இவரது இந்தப் பந்து வீச்சுப் பாணியைப் பார்க்கும் போது தென்னாரிக்க அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான போல் அடம்ஸ்தான் ஞாபகத்துக்கு வருகிறார். அப்பாணியிலேயே கெவின் பந்து வீசுகிறார். இந்தப் பாணியிலான பந்து வீச்சு எடுபடுமா என்பது அவரது திறமையைப் பொறுத்துள்ளது. இவரது பந்து வீச்சு தொடர்பாக மாறுபட்ட கருத்தக்கள் உள்ளன. துடுப்பாட்ட வீரரையோ அல்லது விக்கெட்டையோ பார்க்காமல் பந்து வீசுவது பெரிதாக எடுபடப் போவதில்லை என்றே அநேக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

என்றாலும் இவ்வாறான பாணியில் பந்து வீசிய போல் அடம்ஸ் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுள்ளார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. 

கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியன் பிரிமியர் லீக் தொடரிலும் இது போன்ற பந்து வீச்சாளர் ஒருவர் அறிமுகமாகியிருந்தார். அவ்வாண்டு குஜராத் லயன்ஸ் அணிக்காக ஆடிய சிவில் கௌஷிக் என்ற இந்தியப் பந்து வீச்சாளர் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டாலும், அவரது பந்து வீச்சு பெரிதாக எடுபடவில்லை. கெவின் கொத்திகொட உடலை வளைத்து சிரமப்பட்டு பந்து வீசினாலும் பந்து அதிகம் சுழல்வதில்லை. எனவே இவரது பந்து வீச்சுப் பாணி ரசிக்கும்படியாக இருந்தாலும், பந்து வீச்சு துடுப்பாட்ட வீரர்களுக்கு இலகுவாக விளாசக் கூடியதாகவே உள்ளதென சுட்டிக்காட்டப்பட்டள்ளது.

எம். எஸ். எம். ஹல்மி

Comments