சாதிக் கொடுமையின் இரத்த சாட்சியம்; நடூர் சுவர் மரணங்கள் | தினகரன் வாரமஞ்சரி

சாதிக் கொடுமையின் இரத்த சாட்சியம்; நடூர் சுவர் மரணங்கள்

கடந்த வாரம் தமிழகத்தில் கொட்டித் தீர்த்த பருவமழை தமிழ் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஒரு அசிங்கமான நிதர்சனத்தை பட்டவர்த்தனமாக்கி இருக்கிறது. கோயம்புத்தூர் மேட்டுப் பாளையத்தின் நடூர் கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் 80 அடி நீளமான ‘சாதிச் சுவர்’ இடிந்து விழுந்ததில் 17 பேர் மரணமடைந்துள்ளனர். ஒரு இயற்கை அனர்த்தத்தில் 17 உயிர்கள் காவு கொள்ளப்பட்டதில் என்ன விசேஷம் இருக்க முடியும், இந்தப் பத்திரிகையில் கட்டுரையாக இடம் பெறுவதற்கு? என்று வாசகர்கள் கேட்கலாம். இது வெறுமனே ஒரு விபத்து அல்ல என்பதும் தமிழனைப் பீடித்துள்ள தீரா நோயான சாதி நம்பிக்கை என்ற நோயின் வெளிப்பாடே இந்தச் சுவர் மரணங்கள் என்பதே நாம் இவ்விடயத்தை இங்கே எடுத்துக் கூறுவதற்கான காரணம். 

தமிழகக் கிராமங்களில் பெரும்பாலும் ஊர் இரண்டாகப் பிரிந்திருக்கும். மேட்டுக்குடிகளுக்கு ஒரு பக்கமும் தலித்துகளுக்கு இன்னொரு பக்கமுமாகப் பிரிந்து கிடக்கும் கிராமங்கள் தமிழகத்தில் ஏராளம் ப. ரஞ்சித்தின் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு தமிழகத்தின் சாதிப் பிரச்சினையும் அதன் வன்மமும் தெரிந்திருக்கும். நடூர் கிராமத்து உயர் வகுப்பினர் ஒரு படி மேலேபோய் இரண்டு பகுதிகளையும் பிரிக்கும் வகையில் 80 அடி நீள மதில் சுவரையே அமைத்திருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்னர் கூட தமது ஊர் வழியாக பாதை அமைத்து தலித்துகள் போய் வருகிறார்கள் என்ற காரணத்தின் பேரில் அப்பாதையின் குறுக்காக சுவர் எழுப்பினார்கள் ஆதிக்க சாதியினர். இது பெரிய விவகாரமானது. 

பின்னர் இச்சுவர் இடிக்கப்பட்டது. சாதி மாறித் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினரை தந்தையே ஆட்களை ஏவி வெட்டிக் கொலை செய்யும் சாதி ஆணவக் கொலைகளும் தமிழகத்தில் அரங்கேறுவதையும் பார்த்திருக்கிறோம். தமிழகத்து பகுத்தறிவாளர்களும் தலித் சமூகங்களும் இது பெரியார் பிறந்த மண் என மார்த்தட்டிக் கொண்டாலும் சாதிமுறையும் சாதி அரசியலும் அப்படியேதான் இருக்கிறது என்பதற்கு மற்றொரு இரத்தச் சாட்சியாக நடூர் மரணங்கள் விளங்குகின்றன. 

ஒரு புடவை வர்த்தகரான சிவசுப்பிரமணியமே இந்தச் சுவரை முன்நின்று அமைத்திருக்கிறார். எண்பது அடி நீளம் கொண்ட இச்சுவரை சாதிச் சுவர் என அழைப்பதில் தமிழக அரசுக்கு உடன்பாடில்லையானாலும் இச்சுவர் சில இடங்களில் ஐந்தடி, ஏழு அடி உயரமாகவும் தலித் மக்கள் வாழும் பகுதியூடாக செல்லும் போது 20 அல்லது 22 அடி உயரம் கொண்டதாகவும் அமைக்கப்பட்டிப்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது தலித் மக்களின் மூச்சுக் காற்றுக் கூட தங்கள் மீது பட்டுவிடக் கூடாது என்ற ஆதிக்க சாதியினரின் குரூர சிந்தனையை எம்மால் எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. 

சுவர் இடிந்த பகுதி

இந்தச் சுவர் 2004ம் ஆண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. கொன்கிறீட் தூண்கள், கம்பிகள் மற்றும் ஆழமான அத்திவாரமின்றி இச் சுவர் அமைக்கப்பட்டிருந்தாகவும் ஏற்கனவே இங்கு வாழும் தலித் மக்கள் இச்சுவர் பராமரிப்பின்றி இடிந்து விழக்கூடிய நிலையில் இருப்பதாகவும் இதை இடித்து அகற்ற வேண்டும் என்றும் பல புகார்களை பொலிசார், ஊராட்சியர், கலெக்டர் ஆகியோரிடம் மனுக்களாகக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் மேட்டுப்பாளையம் பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் சாதி ஆணவக் கொலையொன்றும் நடந்தது என்பதையும் தலித் அமைப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. 

கடந்த வாரம் இப்பகுதியில் பெய்த மழை காரணமாக சுவர் உரிமையாளரான சிவசுப்பிரமணியம் வீட்டுப் பக்கமாக தண்ணீர் நிறைந்து காணப்பட்டிருக்கிறது. மறுநாள் அதிகாலையில் அந்த 20 அடிச்சுவர் இடிந்து அருகே இருந்த நான்கு தலித் வீடுகளின் மீது விழுந்து உறங்கிக் கொண்டிருந்த 17 பேர்களின் உயிரைக் குடித்துள்ளது. இவர்கள் கூலித் தொழிலாளிகள். இறந்தவர்களில் 13பேர் பெண்கள். இருவர் குழந்தைகள். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அப்பகுதிக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்தவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு இறந்த ஒவ்வொருவர் பேரிலும் பத்துலட்ச ரூபாவை நஷ்ட ஈடாக அறிவித்ததோடு புது வீடு கட்டிக் கொடுக்குமாறும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு தொழில் வழங்கவும் உத்தரவிட்டார். இதேசமயம் அப்பகுதிக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இவ் விவகாரத்தை சாதி அரசியலாக்க முயற்சி செய்கிறார் என்ற குற்றச்சாட்டையும் தமிழக முதல்வர் முன் வைத்துள்ளார். 

எனினும் பிரச்சினை இதுவல்ல. தந்தை பெரியாருக்கு முன்னிருந்தே அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் போன்ற ஆங்கிலம் கற்ற தலித்துகள் சாதிக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளார்கள். போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதை மக்கள் மயப்படுத்தி அரசியல் முகம் கொடுத்தவரே தந்தை பெரியார். ஆனாலும் இந்து வர்ணாசிரம தர்மத்தின் ஒரு தூணாக விளங்கும் சாதியமைப்பை எவராலும் அசைக்க முடியாதுள்ளது என்பது உண்மை. 

சாதி அமைப்பு மனிதர்களைப் பல கூறுகளாகப் பிரித்தாலும் மேல் சாதி அடுக்குகளில் உள்ளவர்களுக்கு உயர்ந்தவன், வசதிகள் கொண்டவன், இறுமாப்புடன் வாழும் வாய்ப்பு உடையவன் என்ற அந்தஸ்தை அது வழங்குவதால் அவர்கள் இச்சமூக அந்தஸ்த்தை இழக்க விரும்புவதில்லை. மேலும் இன்னொருவர் தோள் மீது ஏறி சவாரி செய்யும், அவரை அடக்கி ஆளும் வாய்ப்பை எவருமே நிராகரிப்பதுமில்லை. இது மனித சுபாவம். மிருகத்தின் இன்னொரு வடிவம் தானே மனிதன்! 

‘எனக்கு இச் சாதி அமைப்பின் கீழ் சமூக அந்தஸ்தும் பொருளாதார வசதிகளும் கிடைக்கின்றன; இதை ஏன் விடுவானேன்’ என்ற சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட ஆதிக்க சிந்தனையே சாதிச் சிந்தனை. இச் சிந்தனை உயர் சாதியினர் மத்தியில் நீடித்து நிற்பதற்கான காரணமும் அதுவே. உலகிலேயே இந்து சமயம் மட்டுமே மனிதர்களை உயர்ந்தவன், தாழ்ந்தவன் எனப் பிரிப்பதால்தான் தமிழர்களுக்கு இம்மதம் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்த தந்தை பெரியார். திராவிட இயக்கத்தையும், சுயமரியாதை இயக்கத்தையும் உருவாக்கி தமிழகமெங்கும் பிரசாரங்களை முன்னெடுத்தார் என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும். அண்ணாதுரையின் தலைமையில் வீறு கொண்ட அமைப்பாக அது தமிழகத்தில் எழுச்சி பெற்றதையும் ஐம்பதுகளில் இலங்கையில் அதன் தாக்கங்களை குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மத்தியில் உணர முடிந்ததையும் குறிப்பிட்டாக வேண்டும்.  

ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தமிழர் இரத்தத்தில் ஊறிப்போன இம் மதத்தையும் அதன் மீதான நம்பிக்கைகளையும் எவராலும் அவ்வளவு சீக்கிரமாக அசைத்து பார்ப்பது சாத்தியமானது அல்ல. ஆனால் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பிரசாரமும், அனைத்தையும் அப்படியே நம்பி விடாமல் சீர்தூக்கிப் பார்த்து மறுபரிசீலனை செய்யும் சிந்தனையையும் இளைய தலைமுறையினர் மத்தியில் இப் பகுத்தறிவு பிரசாரங்கள் விதைத்தன என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். சுதந்திரம், பகுத்தறிவு சிந்தனை கொண்டவர்கள் தமிழர்களிடையே குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் உள்ளனர் என்றால் அதற்கு பெரியாரின் சுயமரியாதை இயக்கம் காரணமானது என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் இவை எல்லாம் தமிழர் மத்தியில் ஊறிப்போன சாதி நம்பிக்கையை பெருமளவில் தகர்க்க உதவவில்லை. இதற்கு சமய நம்பிக்கையை விட சமூக அந்தஸ்து மற்றும் பொருளாதார காரணங்களே அடிப்படையாக அமைந்துள்ளன. சமயங்கள் எவ்வாறு பொருளாதார மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் தழைத்து வளர்ந்து நிற்கின்றனவோ அவ்வாறே சாதியமைப்பும் பொருளாதார மற்றும் அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன. 

இத்தனைக்கும் சாதி விடயத்தில் இந்திய சட்டங்கள் கண்டிப்புடனும் தீவிரத்தன்மையுடனும் தான் உள்ளன. சாதியை எதிர்ப்பவர்கள் எப்போதும் கடும் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுத்தே வந்துள்ளனர் என்பதற்கு சுப்பிரமணிய பாரதியே ஒரு சான்று. அவர் பிராமணர்களினால் ஒதுக்கி வைக்கப்பட்டதோடு ஒரு கட்டத்தில் அவர் அக்ரஹாரத்தில் இருந்தே வெளியேற்றப்பட்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ‘அனைவருக்கும் திறந்துவிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை போராட்டமாக வெடித்தது. காந்திஜி மதுரைக்கு வந்தபோது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும்படி ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்தது. ஆனால் அதை காந்தி ஏற்கவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயத்தினுள் அனுமதிக்கப்பட்டால் மாத்திரமே தான் ஆலயத்துக்கு விஜயம் செய்வது சாத்தியமாகும் என்றார் காந்தி. இதே சமயம் கோவிலில் பணியாற்றிய சாமிநாத பட்டர் என்பவர் தாழ்த்தப்பட்டவர்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தார். இதை ஏனைய பட்டர்கள், பூசகர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஒரு நாள் பணி முடிந்து சாமிநாத பட்டர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரது எதிரிகள் மாட்டுச் சாணத்தைக் கரைத்து பட்டரின் தலையில் கவிழ்த்தார்கள். தனது கொள்கைக்காக தொடர்ந்து பல துன்பங்களை அவர் சந்திக்க நேர்ந்தது. பின்னர் இந்திய அரசு ஆலய பிரவேச சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆலயத்துக்குள் பிரவேசிப்பவர்களை சாதி அடிப்படையில் எவரும் தடுக்க முடியாது என்பதும் அது தண்டனைக்குரிய குற்றம் என்பதும் சட்டம். இதையடுத்து இந்தியாவில் பல கோவில்கள் தாழ்த்தப்பட்டோருக்காக தமது கதவுகளைத் திறந்தன. மீனாட்சி அம்மன் கோவிலிலும் அது நிகழ்ந்தது. இதன் பின்னர் மகாத்மா காந்திஜி 1946ம் ஆண்டு ஐந்தாவது தடவையாக மதுரை வந்தபோது கோவில் நிர்வாகத்தின் அழைப்பை ஏற்றுக் கொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களையும் அழைத்துக் கொண்டு அவர் ஆலய பிரவேசம் செய்ததோடு பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டார். இன்று இக்கோவிலுக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம். இதே சமயம் கோவில் பூசகர்கள் சாமிநாத பட்டரை ஒதுக்கியே வைத்திருந்தனர். ஒரு உயர் சாதிக்கார பூசகர் தாழ்த்தப்பட்டவர்களுக்காக பரிந்து பேசியதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரை மட்டுமன்றி அவரது குடும்பத்தினரையும், சுப்பிரமணிய பாரதியாரைப் போலவே, இறுதிவரை ஓரங்கட்டியே வைத்திருந்தாலும் சாகும் வரை சாமிநாத பட்டரும் தன் நிலைப்பாட்டை, தெய்வத்தின் முன்பாக அனைவரும் சமமே என்பதில் இருந்து, மாற்றிக் கொள்ளவே இல்லையாம். 

ஆதிக்க சாதியினரின் குடியிருப்பு பகுதி

தமிழர்களிடமிருக்கும் பிரச்சினையும் இதுதான். மாற்றிக் கொள்வதாகக் காண்பிப்பார்களே தவிர பலர் மாறவே மாட்டார்கள். முன்னர் சில வீடுகளுக்குச் சென்றால் வாசலிலேயே பேசி அனுப்பி விடுவார்கள். உள்ளே அழைத்து அமரச் செய்து பேசினாலும் பச்சைத் தண்ணீரும் கொடுக்க மாட்டார்கள். சில வீடுகளில் தற்போது வாய் வைத்து உறிஞ்ச வேண்டியிருக்கும் என்பதால் தேனீர் வழங்காமல் கார்ட்போர்ட் உறைகளில் வரும் மென் பானங்கள், பிளாஸ்டிக் போத்தல்களில் வரும் ‘படி’ குளிர்பானங்கள் என்பனவற்றை ‘கெளரவம்’ குறையாமல் வந்தவர்களுக்கு தந்து உபசரிப்பதன் மூலம் தமது ‘தீட்டு’ பிரச்சினையை சமாளித்துக் கொள்கிறார்கள். சாதி பார்ப்பதில்லை என்று சாதிப்பவர்களும் திருமணங்களின்போது என்ன சாதி என்று பார்த்து திருமணத்தை நடத்துகிறார்கள். காலத்துக்கு ஏற்ற மாதிரித் தம்மை மாற்றிக் கொள்ளக் கூடிய சிங்கள சமூகமும் திருமணங்களில் சாதி பார்க்கவே செய்கிறது. ஆனால் தமிழர்கள் மத்தியில் இருக்கும் அளவுக்கு அவர்கள் மத்தியில் சாதி மனப்பான்மை அவர்களிடம் இல்லை என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும். ஆனால் தமிழகத்தில் நடைபெற்ற சுவாதி கொலை போன்ற சாதி ஆணவக் கொலைகள், பெண் சிசு கருக்கலைப்பு போன்ற கொடூரங்கள் இலங்கையில் இல்லை என்பது ஆறுதலான ஒரு விஷயம். சிங்கள சமூகத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்போமானால் மனிதர்களுடன் பழகும், நேசிக்கும், சாதீய பார்வை போன்றவற்றில் நாம் அவர்களிடம் கற்றுக் கொள்ள பல விடயங்கள் உள்ளன என்பதை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். 

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரேயே இந்தியாவில் நிலவும் சாதி ஏற்றத்தாழ்வு தொடர்பான ஒரு ஒப்பந்தம் 1930இல் காந்திஜிக்கும் அம்பெத்தருக்கும் இடையே கைச்சாத்தானது. இதை பூனா ஒப்பந்தம் என்று அழைப்பார்கள். நாடு சுதந்திரம் பெற்ற முப்பது வருட காலத்துக்குள் சாதிகளை இந்தியாவில் முற்றாக, சட்டரீதியாக, ஒழித்துக் கட்டுவது என்ற ஒரு தீர்மானத்துக்கு இவ்விருவரும் வந்தார்கள். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய அம்பெத்கர் ஏற்றத் தாழ்வற்ற ஒரு இந்தியாவை சட்ட ரீதியாக உருவாக்குவதில் வெற்றி கண்டார். ஆனால் நடைமுறையில் எழுபதாண்டுகளின் பின்னரும் அது சாத்தியப்படவில் என்பதே உண்மை.  

1980 இல் எம்.ஜி. ஆரின் அரசைக் கலைக்க வேண்டிய தேவை பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு ஏற்பட்டது. அச் சமயத்தில் மாநில அரசொன்றை ஏதேனும் காரணம் காட்டி கலைக்கக்கூடிய அதிகாரம் பிரதமருக்கு இருந்தது. சென்னை மெரீனா சீரணி அரங்கில் உரையாற்றிய இந்திராகாந்தி, தமிழகத்தில் 12 தலித்துகள் கொலை செய்யப்பட்டதை சுட்டிக் காட்டி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை என்று எம்.ஜி.ஆர். மீது குற்றம் சுமத்தினார். அதைக் காரணம் காட்டி அரசைக் கலைக்கவும் செய்தார். தலித் பாதுகாப்பு என்பது சட்ட ரீதியாக இந்த அளவுக்கு இந்தியாவில் வலுவாகவே உள்ளது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஆதிக்க சாதியினர் அதைவிட வலுவாக உள்ளனர் என்பதை இச் சுவர் விவகாரத்தில் இருந்தே உணர்ந்து கொள்ளலாம். 

சுவர் இடிந்து 17பேர் மரணம் என்ற செய்தி வெளியானதும் மக்கள் அதை மழை ஏற்படுத்திய மற்றொரு அசம்பாவிதம் என்றே கருதினார்கள். ஊடகங்களும் கொஞ்சம் அடக்கியே வாசித்தன. ஆனால் மேட்டுப்பாளைய வாசிகள் சம்பவத்தின் பின்னணியை சட்டென நாடி பிடித்து பார்த்துவிட்டார்கள். இதனால் அன்றைய தினமே நீதி கேட்டு மக்கள் வீதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுவர் எழுப்பிய சிவசுப்பிரமணியத்தை கைதுசெய்ய வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் மூர்க்கத்தனமானக் கையாண்டு தடியடி நடத்தினர். சிலரைக் கைது செய்து உள்ளே தள்ளினர். சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எந்த வன்முறையிலும் இறங்காத நிலையிலும் நீதி கேட்டதற்காகவே பொலிஸார் அவர்களைப் பந்தாடினர். 

இது 2004ம் ஆண்டு அமைக்கப்பட்ட சுவர். இதை இடிக்கச் சொல்லி பொலீஸ், ஊராட்சியர், கலெக்டர் எனப் பலரிடமும் அம் மக்கள் மனு கொடுத்துள்ளனர். உள்ளூர் அரசியல்வாதிகளிடமும் புகார் செய்தனர். யாரும் இதைக் கண்டு கொள்ளவில்லை.

ஒரு கிராமத்தில் 20 அடி உயரத்துக்கு பாதுகாப்பற்ற வகையில் ஏன் சுவர் எழுப்பப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த அதிகாரிகளுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை.

சுவர் விழுந்த பின்னரேயே கலெக்டர் நேரில் வந்து பார்த்து சுவரை இடிக்கச் சொல்லி இருக்கிறார். இவற்றை பொருந்திப் பார்க்கும்போது ஆதிக்க சாதியினரின் எண்ணப்போக்கை உணர்ந்து கொள்ள முடியும். 

தூங்குவது போல பாசாங்கு செய்பவனை எழுப்ப முடியாது என்பார்கள். இந்தியாவில் சாதி தொடர்பான உண்மையான நிலைப்பாடு பாசாங்காக மட்டுமே இருப்பதால்தான் அதை ஒழிக்க முடியாதுள்ளது. 

இது போலவே, தலித்துக்கள் மத்தியிலும் பல பிரச்சினைகள் உள்ளன. பிரிவுகளும் கருத்து வேறுபாடுகளும் காணப்படுகின்றன. அவர்களால் முக்கியமான விஷயங்களில் எந்தக் கருத்தையும் உருவாக்க முடிவதில்லை. சாதீய எதிர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் இயக்குநர் ப.ரஞ்சித், தமிழர்கள் என்ற களத்தில் நாம் ஒன்றுபட வேண்டும் என்ற சீமானின் கருத்துடன் ஒத்துப் போகிறார் இல்லை. சாதி ரீதியாகத் தமிழன் பல கூறுகளாகப் பிரிந்து கிடக்கும்போது தமிழன் என்ற தளம் எப்படித் தமிழர்களை ஒன்றிணைக்கும் என்பது ப. ரஞ்சித்தின் வாதம்.

எனவே, தமிழனின் சாதிப் பிரச்சினை பழமையானது, ஆழமானது, சிக்கலானாது மட்டுமல்ல மத முகமும் கொண்டது. அதை சட்டத்தால் மட்டும் அடக்கிவிட முடியாது.

முறையான கல்வியும், சீரிய சிந்தனையும், சமூக பொறுப்புணர்வுமே சாதி மனப்பான்மையை படிப்படியாக நீக்க முடியும்.   

அருள் சத்தியநாதன்
[email protected]

Comments