தேசிய பயிற்சியாளர்களின் திறன் மேம்பாட்டுக்காக திறைசேரியிடமிருந்து 50மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளதால் அடுத்த வருடம் இந்நாட்டு விளையாட்டு அணிகளின் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் குறித்து இருமுறை சிந்தித்து பார்க்க வேண்டியுள்ளதாக விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் தம்மிக்க முத்துகல தெரிவித்தார்.
அடுத்த தெற்காசிய போட்டியில் 100தங்க பதக்கங்களை வெல்லும் இலக்கு உள்ளது. அதற்காக வீர, வீராங்கனைகளுக்கு நல்ல பயிற்சியாளர்கள் இருக்க வேண்டுமென்பதால் இவ்வாறான முடிவுக்கு செல்ல வேண்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.
முடிவடைந்த தெற்காசிய விளையாட்ட விழாவின் முன்னேற்றம் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்றது. இச் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டு 12வது தடவையாக இந்தியாவில் நடைபெற்ற சார்க் விளையாட்டுவிழாவில் இலங்கை ஆண்கள், பெண்கள் அணிகள் வெள்ளிப் பதக்கங்களை பெற்றன. இம்முறை வெளிநாட்டு பயிற்சியாளர்களை கொண்ட அணிகளால் வெண்கல பதக்கமே வெற்றிகொள்ளப்பட்டது. இவ்வாறான பின்னணியில் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் குறித்து மீண்டும் எண்ண வேண்டியுள்ளது எனவும் தெரிவித்தார்.
நாம் திறைசேரியிடமிருந்து 50மில்லியன் ரூபாவை கோரியுள்ளோம். எமது பயிற்சியாளர்களின் திறன் மேம்பாட்டுக்காக வெளிநாட்டு பயிற்சியாளர்களை இங்கு அழைத்து வந்தோ அல்லது இங்குள்ள பயிற்சியாளர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி புதிய பயிற்சி அனுபவங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டல் எம்மால் அடுத்த சார்க் விளையாட்டுப் போட்டியில் 100தங்கப் பதக்கங்கள் என்ற இலக்கை அடைய முடியாது. அடுத்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியை இலக்காகக் கொண்டு குறிப்பிட்ட விளையாட்டு குழு பயிற்சிகளை ஜனவரி மாதம் தொடக்கம் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சார்க் விளையாட்டு விழாவுக்கு 25அதிகாரிகள் வரை அழைத்துச் சென்றதாகவும், அவர்கள் யாரென்பதை முடிவுசெய்தது முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரால் அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட குழுவாலே தீர்மானிக்கப்பட்டதாக கூறினார். அத்துடன் அவர் உள்ளிட்ட அதிகரிகள் கொண்டு சென்று கொடுப்பனவுகள் குறித்தும் தெளிவுபடுத்தினார். “நாம் இரண்டு டிரவல் கார்ட்டுகளை மட்டும்தான் கொண்டு சென்றோம். அதில் ஒன்றை மாத்திரமே பாவித்தோம். எமது அனைத்து செலவுகளும் சரியாக செய்யப்பட்டது என உள்ளக கணக்காளர் கையெழுத்திட்டுள்ளார். அச்செலவுகள் தொடர்பில் குளறுபடிகள் எதுவுமில்லை என உறுதியாகக் கூறுகின்றேன். சார்க்கில் வெற்றி பெற்ற வீர, வீராங்கனைகளுக்கு இம் மாதம் 27ஆம் திகதி பரிசுப்பணம் வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தாலும் அன்றைய தினம் நடைபெறமாட்டாது. வேறொரு தினத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் பரிசுப் பணம் வழங்கப்படுமென தெரிவித்தார். சார்க் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்துக்காக 5இலட்ச ரூபாவும், வெள்ளிப் பதக்கத்திற்காக 3இலட்சம் ரூபாவும் வெண்கல பதக்கத்திற்காக இரண்டு இலட்சம் ரூபாவும் வழங்கப்டவுள்ளது.
வெற்றிபெற்ற வீர, வீராங்கனை களின் பயிற்சியாளர்களுக்கும் பணப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இவ் ஊடகச் சந்திப்பில் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் ருவன்சந்திர சில்வா, விளையாட்டு துறை அமைச்சின் ஆலோசகர் சுசன்திகா ஜயசிங்க மற்றும் தேசிய தெரிவு குழுவின் செயலாளர் ஆர். ஏ. குலரத்ன ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.