இலங்கை - சிம்பாப்வே முதலாவது டெஸ்ட் இன்று ஹராரேயில் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை - சிம்பாப்வே முதலாவது டெஸ்ட் இன்று ஹராரேயில்

இலங்கை -- சிம்பாப்வே அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று 19ஆம் திகதி ஹராரேயில் ஆரம்பமாகின்றது. டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியும் ஹராரே நகரில் 27ஆம் திகதி நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த டெஸ்ட் தொடருக்கான 15பேர் அடங்கிய இலங்கை டெஸ்ட் அணி இலங்கை கிரிக்கெட் (SLC) கடந்த (14) அறிவிக்கப்பட்டது.இந் நிலையில், இந்த அணியில் குசல் ஜனித் பெரேரா உள்ளடக்கப்படாமல் போனது தற்போது பேசுபொருளாக மாறியிருக்கின்றது.

கடந்த ஆண்டு (2019) இலங்கை கிரிக்கெட் அணி வெற்றிக்காக தடுமாறிக் கொண்டிருந்த தருணத்தில் தென்னாபிரிக்காவில் டர்பன் நகரில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டி ஒன்று கிரிக்கெட் இரசிகர்கள் அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது.

அந்த போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரராக அறியப்பட்ட குசல் ஜனித் பெரேரா இந்த தசாப்தம் கண்ட மிகச் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸை தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிராக வெளிப்படுத்தினார். வேகப்பந்துவீச்சிற்கு சாதகமான ஆடுகளத்தில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களான டேல் ஸ்டெய்ன், ககிஸோ றபாடா ஆகியோரை திணறச் செய்த குசல் ஜனித் பெரேரா 153ஓட்டங்கள் பெற்றதோடு, இக்கட்டான நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியினையும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட்டினால் வெற்றி பெற பங்களிப்புச் செய்திருந்தார்.

இவ்வாறாக மிகச் சிறப்பான துடுப்பாட்ட இன்னிங்ஸ் ஒன்றினை வெளிப்படுத்திய குசல் ஜனித் பெரேரா, அதுவும் கடந்த 11மாதங்களில் வெறும் 5டெஸ்ட் போட்டிகளிலேயே விளையாட வாய்ப்பு வழங்கப்பட்ட குசல் ஜனித் பெரேரா இலங்கை டெஸ்ட் அணியில் இருந்து மோசமான துடுப்பாட்டத்திற்காக நீக்கப்பட்டிருப்பதே, இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள் இடையில் இந்த விடயம் பேசுபொருளாக மாற காரணமாக இருக்கின்றது.

குசல் பெரேரா நீக்கப்பட்ட விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வாளரான அசந்த டி மெல் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

”குசல் பெரேராவிற்கு 150ஓட்டங்கள் பெற முடியும். ஆனால், எங்களுக்கு மைதானத்தில் நீண்ட நேரம் நின்று துடுப்பாடும் ஒருவரே தேவை. இதனால், நாங்கள் திரிமான்னவை தெரிவு செய்திருக்கின்றோம்.”

கிட்டத்தட்ட 68டெஸ்ட் இன்னிங்ஸ்கள் வரையில் விளையாடி 22.64என்கிற துடுப்பாட்ட சராசரியினைக் கொண்டிருக்கும் முன்வரிசை துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்னவை, அவரைவிட கூடுதலான டெஸ்ட் துடுப்பாட்ட சராசரியினைக் (31.12) கொண்டிருக்கும் குசல் பெரேராவிற்கு பதிலாக இலங்கை டெஸ்ட் அணிக்குள் உள்வாங்கியிருப்பதும் இந்த விடயம் சூடு பிடிக்க மற்றொரு காரணியாக உள்ளது.

குசல் பெரேரா இலங்கை டெஸ்ட் அணிக்குள் உள்வாங்கப்படாது போயிருக்கும் விடயத்தினை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தனவும் தனது ட்விட்டர் கணக்கில் விமர்சித்ததோடு, குசல் பெரேராவிற்கு இன்னும் போதிய வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்ற வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

சிம்பாப்வே அவ்வளவு சவால் நிறைந்த டெஸ்ட் அணி இல்லை என்பதனால் அவர்களுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் பெதும் நிஸ்ஸங்க, கமிந்து மெண்டிஸ் மற்றும் சங்கீத் குரே போன்ற இளம் வீரர்களுக்கு திறமையினை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த விடயமும் சிம்பாப்வேயிற்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருக்கவில்லை.

கடந்த 1994ஆம் ஆண்டு சிம்பாப்வே அணி முதல் முறையாக இலங்கை அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடிய நிலையில், இதுவரையில் சிம்பாப்வே அணி இலங்கை அணியுடன் ஒரு டெஸ்ட் வெற்றியேனும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி (15) தாயகத்திலிருந்து சிம்பாப்வே நோக்கி புறப்பட்டது.

கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் தடைக்கு உள்ளாகிய சிம்பாப்வே கிரிக்கெட் அணி, குறித்த தடைக்குப் பின்னர் இலங்கை அணியுடன் விளையாடவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரே அவர்களது முதல் சர்வதேச கிரிக்கெட் தொடராக அமைகின்றது.

 இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலமே சிம்பாப்வே 2018ஆம் ஆண்டின் நவம்பரிற்குப் பின்னர் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கின்றது.

இறுதியாக இலங்கை அணி ரங்கன ஹேரத் தலைமையில் சிம்பாப்வேவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தொடரை 2-−0என வெற்றிக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன தலைமையிலான அணியில், லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ், ஓசத பெர்னாண்டோ, அஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமால், தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவான் பெரேரா, லசித் எம்புல்தெனிய, லக்ஷான் சந்தகன், சுரங்க லக்மால், லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை - -- சிம்பாப்வே அணிகள் இதுவரையில் 18டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 13போட்டிகளில் இலங்கை வெற்றிபெற்றுள்ளதுடன், சிம்பாப்வே அணி எந்தவொரு வெற்றியையும் பெறவில்லை.

சிம்பாப்வே அணி

ஷேன் வில்லியம்ஸ் (அணித்தலைவர்), சிகண்டர் ராஸா, ரெகிஸ் சகப்வா, கிரேக் ஏர்வின், கெயில் ஜர்விஸ், கெவின் கசுஷா, டிமைகன் மருமா, பிரின்ஸ் மசௌரி, பிரையன் முட்ஸிங்கன்யாமா, கர்ல் மும்பா, ஐன்ஸ்லி என்ட்லோவ், விக்டர் நியாச்சி, ப்ரெண்டன் டைலர், டெனால்ட் திரிபனோ, சார்ல்டன் ஷூமா 

பரீத் ஏ றகுமான்

Comments