![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/01/25/q3.jpg?itok=xBNWzJva)
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளில் வசித்து வந்தாலும் சர்வதேச விளையாட்டு மைதானங்களில் இலங்கை கொடியுடன் தனது நாட்டுக்காக பதக்கங்களை வெல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் மெதில்டா கார்ல்சன் (சுவீடன்), கிறேஷ் யடவர (அமெரிக்கா), ஹென்னா மேரி ஒன்றச்சி (கனடா), ஹிருணி விஜேரத்ன (அமெரிக்கா) போன்றோர் சமகாலத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்து போட்டிகளில் கலந்துகொள்ளும் வெளிநாடுகளில் வசித்து வரும் வீராங்கனைகளாகும். மெதில்டா கார்ல்ஸன்
இவர் இம்முறை ஜப்பான் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி குதிரை ஓட்டப் போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றவுள்ளார். இலங்கை சார்பாக இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள உறுதி செய்யப்பட்ட ஒரே ஒரு வீரர் இவராவார். இவர் இலங்கையர் எனச் சொல்லிக் கொண்டாலும் அவர் தற்போது சுவீடன் நாட்டிலேயே வசித்து வருகிறார். குதிரை ஓட்டப் போட்டி நிகழ்ச்சி பெரும் பணக்காரக் குபேரர்களுக்கே சொந்தமான விளையாட்டாகும். என்றாலும் மெதில்டாவின் வளர்ப்புப் பெற்றோர்களின் தயவினால் அவர் இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக இந்தப்போட்டி நிகழ்வில் பங்குகொள்கிறார்.
மெதில்டாவை 3மாத கைக்குழந்தையாக இருக்கும் போதே சுவீடனைச் சேர்ந்த கார்ல்சன் தம்பதிகளால் தத்தெடுத்தனர். அது முதல் அங்கேயே வளர்ந்து வந்த மெதில்ல்டா மிகவும் செல்வச் செழிப்பிலும், வளர்ப்புத் தம்பதியினரின் அன்பு, அரவணைப்பிலும் வளர்ந்ததால் சிறு வயதில் இலங்கையைப் பற்றியோ, தமது தாய் தந்தையரைப் பற்றி அறிமாமல் வளர்ந்தார். ஆனால் இவர் குதிரை ஓட்டப் போட்டி நிகழ்ச்சிகளில் பிரபல்யமானதினால் அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மன், நெதர்லாந்து ஆகிய நாட்டு ஊடகங்களில் இவரின் பெயர் அடிக்கடி வெளிவந்தது. ஆனால் இலங்கையில் அவ்விளையாட்டு பிரபல்யம் இல்லாததால் இவரைப் பற்றி அறியக்கிடைக்கவில்லை. ஆனால் இப்போது இப்போட்டி நிகழ்ச்சியில் இலங்கையைப் பிரதிநிதித்த மெதில்டா முன்வந்திருப்பது விசேட அம்சமாகும்.
இவர் இம்முறை ஒலிம்பிக் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவது பற்றிக் கூறும் போது: “தற்போது எனது வயது 35ஆகும். வெள்ளையர்கள் மத்தியில் என்னைப் போன்றவர்கள் சுவிடனில் இருப்பது குறைவே, எனது சிறு வயதுப் பருவம் நன்றாக இருந்தது. நான் படிக்கும் காலத்திலும் வேறுபட்ட என் நிறம் பற்றி சக மாணவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. எனது சுவீடன் பெற்றோர் நல்ல அன்புள்ளம் கொண்டவர்கள். எனக்கு சுவீடனில் சகோதரர் ஒருவரும், சகோதரியும் உள்ளனர். மூன்றாவதாக என்னையும் அவர்கள் அன்பாக வளர்த்ததை எண்ணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கையைப் பற்றிய சிந்தனை உருவானது இங்கு வருவதற்கு ஒரு சந்தரப்பம் கிடைத்தமையினாலாகும் என்று கூறும் அவர், ‘இதற்கு முன் இலங்கை நாட்டுடன் தொடர்பு வைக்க ஒரு சந்தர்ப்பமும் எனக்குக் கிடைக்கவில்லை. அந்தளவுக்கு எனது சுவீடன் பெற்றோர்கள் அன்பாக என்னை வளர்த்தனர். தற்செயலாக இங்கு வந்த பிறகுதான் நான் பிறந்த நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவானது.
அதனால்தான் இலங்கைக் கொடியின் கீழ் இம்முறை ஒலிம்பிக் விழாவில் பங்குகொள்ளத் தீர்மானித்துள்ளேன்” என்று மெதில்டா கார்ல்சன் தெரிவித்துள்ளார்.
ஹென்னா மேரி ஒன்றச்சி
19வயதான இவர் கனடாவில் டொரொன்டோவில் பிறந்தார். ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான இவர் சர்வதேச புகழ்பெற்றவராவார். முதலில் கடனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், தனது பெற்றோர்களின் பூர்வீகமான இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தற்போது போட்டிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் கடந்தமுறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக களமிறங்கினார். இலங்கை ஹெந்தல வத்தளையில் வசித்த எலிஸ்டயர்-சுசான் ஒன்றச்சி தம்பதிகளின் புதல்வியான இவர் 9வயது முதல் ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளில் ஈடுபட்டுவந்துள்ளார்.
2017ம் ஆண்டு நடைபெற்ற உலக ஜிம்னாஸ்டிக் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் கலந்துகொண்டார். உலக ஜிமனாஸ்டிக் போட்டிகளில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட முதல் வீராங்கனை இவராவார். பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவில் ஜிம்னாஸ்டிக் இறுதிப் போட்டிக்குத் தெரிவான ஒரே இலங்கை வீராங்கனையாகவும் இவர் திறமை காட்டியுள்ளார். 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டு விழாவிலும் இவர் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவர் கடந்த வாரம் சுவிட்சர்லாந்து சூரிச் நகரில் இடம்பெற்ற 18நாடுகளைச் சேர்ந்த 300போட்டியாளர்கள் கலந்துகொண்ட முதலாவது ரிதமிக் ஜிம்னாஸ்டிக் தொடரில் பங்குகொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இவ்வெற்றியின் மூலம் இவர் இப்பிரிவில் இம்முறை ஒலிம்பிக் போட்டிகளிலும் இலங்கை சார்பாக பங்குகொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலுள்ளார்.
கிறேஷ் யடவர
கிறேஷ் யடவர கொல்ப் வீராங்னையாவார். அமெரிக்காவில் வசித்துவரும் இவர், கடந்த மாதம் முடிவுற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார்.
இலங்கை தந்தைக்கும் அமெரிக்கா தாய்க்கும் இரண்டாவது மகளாப் பிறந்த இவர் ஒரு பொறியியல் பட்டதாரியாவார். அமெரிக்க செலிஸ்பரி நகரில் வசித்துவரும் அவர் செலிஸ்பரி உயர் பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தி கோல்ப் விளையாட்டில் ஈடுபட்டுவருகிறார்.
கல்வியோடு விளையாட்டுத்துறைக்கும் முக்கியத்துவம் அளித்துவரும் அவர், முடிந்தளவு காலம் கோல்ப் விளையாட்டில் ஈடுபட்டு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட விரும்பும் அவர், தற்போது அமெரிக்க பகிரங்க சம்பியன் தொடருக்கு விளையாடுவதற்கான தகுதியையும் பெற்றுள்ளார்.
ஹிருணி விஜேரத்ன
ஹுருணி அமெரிக்காவில் வசித்து வரும் மரதன் ஓட்ட வீராங்கனையாவார்.
கடந்த காலங்களில் இலங்கையை பிரநிதிநிதிபத்துவப்படுத்தி பல சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
ஆசிய, தெற்காசியா, பொதுநலவாய விளையாட்டு விழா, உலக மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டகளில் இலங்கை சார்பாக மரதன் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்.
அண்மையில் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக தங்கம் வென்று சாதித்துள்ளார்.
ஜேர்மனி, அரிசோனா, டெக்சாஸ், இந்தியானா, ஜெகார்த்தா, கோல்ஸ்ட்கோஸ்ட், லண்டன், இயூஜின், ஓடாவா, பொஸ்டன், வொஷிங்டன் உட்பட உலகின் நாலாபுறங்களிலும் நடைபெறும் மரதன் போட்டிகளில் இலங்கை சார்பாக கலந்து கொண்டு இலங்கைக் கொடியை உலகம் முழுவதும் பிரபல்யப்படுத்த முயற்சிக்கும் விராங்கனையாக ஹிருணி வஜேரத்ன திகழ்கிறார்.
எம்.எஸ்.எம்.ஹில்மி