![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/02/15/q14.jpg?itok=TSvu8IrD)
சுமார் ஐந்து வருடங்களின் பின் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு கடந்த 11ம் திகதி இலங்கை வந்தடைந்தது.
இலங்கை- மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையில் 3சர்வதேச ஒரு நாள் போட்டிகள், 2ரி/20போட்டிகள் கொண்ட தொடர்கள் நடைபெறவுள்ளன. முதல் சர்வதேச ஒருநாள் போட்டி எதிர்வரும் 22ம் திகதி எஸ். எஸ். சி. மைதானத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தரவரிசைப்படி முறையே 8வது, 9வது இடங்களில் உள்ள அணிகளாகும். ரி/20தரவரிசையில் இலங்கை அணி 8வது இடத்திலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 10வது இடத்திலும் உள்ளன.
இலங்கை அணி கடைசியாக முகம் கொடுத்த ஒருநாள் தொடரானது நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்றது. முழுமையான தொடரில் பங்கேற்ற இலங்கை அணி 3போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0என்ற ரீதியில் தோல்வியுற்றது. இலங்கை அணி கடைசியாக இலங்கை மண்ணில் பங்களாதேஷுடனான ஒருநாள் தொடரில் மோதியது. 3போட்டிகள் கொண்ட அத்தொடரில் இலங்கை 3- - 0என்ற கணக்கில் வெற்றிபெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் இலங்கை மண்ணில் கடைசியாக 2015ம் ஆண்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியதுடன் இம்மூன்று போட்டியிலும் இலங்கை அணி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கிடையில் இதுவரை இலங்கை மண்ணில் 3தொடர்கள் நடைபெற்றுள்ளன.
இலங்கை- மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள் போட்டி வரலாற்றில் 1975முதல் 2019வரை 57சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 28போட்டிகளில் இலங்கையும், 26போட்டிகளில் மேற்கிந்தியத்தீவுகள் அணியும் வெற்றிபெற்றுள்ளன. மேற்கிந்தியத் தீவுகள் அணி கடைசியாக பொலார்ட் தலைமையில் நெதர்லாந்துடன் 3போட்டிகள் கொண்ட சர்வதேச ஒரு நாள் தொடரில் மோதி 3 - -0என்ற ரீதியில் முழுமையாக வெற்றிபெற்றது.
இரு அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி 22ம் திகதி கொழும்பு எஸ். எஸ். சி. மைதானத்தில் நடைபெறவுள்ளது. இம் தை மாதத்தில் கடைசியாக 2017ம் ஆண்டு இலங்கை அணி பங்களாதேஷுடன் மோதியது. இதில் இலங்கை 70ஓட்டங்களால் வெற்றிபெற்றது. 1982ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை இம்மைதானத்தில் 39போட்டிகளில் இலங்கை அணி விளையாடி அதில் 23வெற்றிகளையும், 11தோல்விகளையும் பெற்றுள்ளன. இம்மைதானத்தில் 7போட்டிகளில் மோதியுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 2போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. 4போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளன.
இரு அணிகளுக்கிடையிலான 2வது போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் 26ம் திகதி நடைபெறவுள்ளது. கடைசியாக இங்கு இலங்கை அணி 2017ம் ஆண்டு சிம்பாப்வேயுடன் மோதிய ஆட்டத்தில் அவ்வணியிடம் 3விக்கெட்டுக்களால் இலங்கை அணி தோல்வியுற்றது. இம்மைதானத்தில் இலங்கை அணி 18போட்டிகளில் விளையாடி 8வெற்றிகளையும் 8தோல்விகளையும் பெற்றுள்ளது இவ்வாட்டம் ஹம்பாந்தோட்டை மைதானத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு முதல் போட்டியாகும்.
இவ் அணிளுக்கிடையில் நடைபெறும் மூன்றாவதும் இறுதியுமான போட்டி மார்ச் மாதம் முதலாம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை இம்மைதானத்தில் 2018ம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற இங்கிலாந்துடனான போட்டியில் 18ஓட்டங்கள் தோல்வியடைந்தது. பொதுவாக இலங்கை மண்ணில் இலங்கை வெற்றிகளை விட அதிக தோல்விகளை இம்மைதானத்திலேயே பெற்றுள்ளது. அவ்வணி 12தோல்விகளையும், 10வெற்றிகளையும் பல்லேகல மைதானத்தில் பெற்றுள்ளது. இதில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு போட்டியில் விளையாடியுள்ளதுடன் அப்போட்டியில் அவ்வணி தோல்வியுற்றது.
சர்வதேச ஒருநாள் போட்டியில் இரு அணிகளுக்கிடையிலான தொடரில் அதி கூடிய ஓட்டங்களாக மேற்கிந்தியத் தீவுகள் அணி 1987ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியின் போது பெற்ற 4விக்கெட் இழப்புக்கு 360ஓட்டங்கள் பெற்றதே பதிவாகியுள்ளது. இலங்கை சார்பில் கூடிய ஓட்டங்களாக பல்லேகலையில் நடைபெற்ற போட்டியொன்றில் 6விக்கெட் இழப்புக்கு 338ஓட்டங்கள் பெற்றதே பதிவாகியுள்ளது. இலங்கை அணி 1986-.12-.03ம் திகதி சார்ஜாவில் நடைபெற்ற போட்டியொன்றில் 55ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தே இரு அணிகளுக்கியிலான குறைந்த ஓட்டங்களாகப் பாதிவாகியுள்ளதுடன், மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் 2006-.10-.16ம்திகதி மும்மையில் நடைபெற்ற போட்டியொன்றில் 80ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததே பதிவாகியுள்ளது.
தனி நபர் கூடிய ஓட்டங்களாக 1987-.10-.13ம் திகதி கராச்சியில் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியொன்றின்போது மேற்கிந்தியத் தீவுகள் அணி அதிரடி வீரர் சர். விவியன் ரிச்சர்ட் பெற்ற 181ஓட்டங்களே பதிவாகியுள்ளது.
இலங்கை சார்பாக கூடிய ஓட்டமாக 2000-.10-. 04ம் திகதி கென்ய நைரோபி நகரில் நடைபெற்ற போட்டியொன்றில் அவிஷ்க குணவர்தன பெற்ற 132ஓட்டங்களே பதிவாகியுள்ளது. கூடிய மொத்த ஓட்டங்களாக இலங்கை சார்பில் சனத் ஜயசூரிய 30போட்டிகளில் 922ஓட்டங்களையும், மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் பிரயன் லாரா 25போட்டிகளில் 1122ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.
ஒரு இன்னிங்ஸில் சிறந்த பந்து வீச்சாக இலங்கை சார்பில் 2006-. 10-.10ம் திகதி மும்மையில் நடைபெற்ற போட்டியொன்றில் பர்வேஸ் மஹ்ருப் பெற்ற 14ஓட்டங்களுக்கு 6விக்கெட்டுகளும், மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் கொட்னி வோல்ஷ் 1986-.12-.03ம் திகதி பெற்ற 1ஓட்டத்துக்கு 5விக்கெட் கைப்பற்றியதே பதிவாகியுள்ளது. மொத்தமாக விக்கெட் கைப்பற்றியோரில் இலங்கை சார்பில் முத்தையா முரளிதரன் 27போட்டிகளில் 34விக்கெட்டுகளையும், மேற்கிந்தியதீவுகள் சார்பில் கொட்னி வோல்ஷ் 22போட்டிகளில் 26விக்கெட்டுகளுமே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்குமிடையில் நடைபெறும் 2போட்டிகள் கொண்ட ரி/20தொடர் பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளன. முதலாவது போட்டி மார்ச் 4ம் திகதியும் இரண்டாவது போட்டி மார்ச் 6ம் திகதியும் நடைபெறவுள்ளன. கடைசியாக இவ்வருட ஆரம்பத்தில் இந்திய அணியுடன் நடைபெற்ற தொடரில் இலங்கை அணி 2- - 0என்ற கணக்கில் தோல்வியுற்றது. இரு அணிகளுக்குமிடையில் கடைசியாக 2015ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தொடரில் 1 - -1என்ற ரீதியில் சமநிலையில் முடிவடைந்தது. இதுவரை இரு அணிக்களுக்கிடையில் 9ரி/20போட்டிகள் நடைபெறுள்ளன. அதில் இலங்கை 6வெற்றிகளையும், மேற்கிந்தியத் தீவுகள் அணி 3வெற்றிகளையும் பெற்றுள்ளன. மேற்கிந்தியத் தீவுகள் அணி கடைசியாக அயர்லாந்துடன் மோதிய ரி/20தொடரில் 1 - -1என்ற ரீதியில் சமநிலையில் முடிவடைந்தது.
ரி/20தொடரில் இரு இன்னிங்ஸ்சில் கூடிய ஓட்டங்களாக 2015-.11.-09ம் திகதி பல்லேகல மைதானத்தில் இலங்கை அணி பெற்ற 3விக்கெட் இழப்புக்கு 215ஓட்டங்கள் பெற்றதே பதிவாகியுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக அதேபோட்டியில் பெற்ற 185ஓட்டங்களே கூடிய ஓட்டங்களாகப் பதிவாகியுள்ளது. தனி நபர் ஓட்டங்களாக 2010-.05.-07ம் திகதி பிரிஜ்டவுன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியொன்றில் மஹேல ஜயவர்தன பெற்ற 98ஓட்டங்களே பதிவாகியுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் 2016-. 03.-02ம் திகதி பெங்களூரில் நடைபெற்ற போட்டியொன்றில் அன்ட்ரு பிளேச்சர் பெற்ற 84ஓட்டங்களே பதிவாகியுள்ளது. ஒரு இன்னிங்ஸில் சிறந்த பந்து வீச்சாக 2012-.1-0.7ம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதனத்தில் நடைபெற்ற போட்டியொன்றில் அஜந்த மெண்டிஸ் 12ஓட்டங்களுக்கு 4விக்கெட் கைப்பற்றியதே பதிவாகியுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் 2009-.06.-10ம் திகதி ஹெடிங்லியில் நடைபெற்ற போட்டியொன்றில் பிரண்டன் சிமன்ஸ் 19ஓட்டங்களுக்கு 4விக்கெட் கைப்பற்றியதே பதிவாகியுள்ளது.
கடந்த காலங்களில் பல பின்னடைவுகளைச் சந்தித்து வந்த மேற்கிந்தியக் கிரிக்கெட் அணியை புதிய தலைவர் கிரான்ட் பொலார்ட் வழிநடத்தி வருகிறார். 30வயது பொலார்ட் 110ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அடிக்கடி மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் சபையுடன் முரண்பட்டதால் கடந்த மூன்று வருட காலமாக தேசிய அணியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. கடந்த வருடம் இணைந்து கொண்ட அவர் அணியை சிறப்பாக வழிநடத்துவதோடு சகல துறைகளிலும் திறமையாக விளயாடி வருகிறார். எனவே இத்தொடரில் புதிய தலைவர் கிரான்ட் பொலார்ட் இலங்கை அணிக்கு பெரும் நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.
எம். ஐ. எம். சுஹைல்