![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/02/15/q15.jpg?itok=LsO5bkkC)
கொரோனா வைரஸ் காரணமாக இம்முறை ஒலிம்பிக் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படாதென ஏற்பாட்டாளர்கள் நம்புவதாக தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் பொது செயலாளர் மெக்ஸ்வல் த சில்வா தெரிவித்தார். அது தொடர்பாக கேட்டபோது அவர் தெரிவித்ததாவது ஜப்பானின் சுகாதார பிரிவு மிகவும் வலுவான நோயெதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
“இதற்கு முன்னர் ஏற்பட்ட வைரஸ் நோய் நிலைமைகளின் போது ஜப்பான் மிகவும் சிறப்பான முறையில் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. அதனால் அவர்கள் கொரோனா தொடர்பிலும் மிக முன்னேற்றகரமான திட்டங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளார்கள். எமக்கு தெரிந்தவரையில் ஜுலை மாதத்தில் நடைபெறவுள்ள இப்போட்டி தொடரில் எவ்வித பிரச்சினையும் எழவில்லை. போட்டி ஆயத்த நடவடிக்கையில் எவ்வித பின்னடைவும் ஏற்படவில்லை. இன்னும் ஐந்து மாதங்கள் எஞ்சியுள்ளதால் போட்டியை ஒத்திப்போடாமல் நடத்த முடியும். அடுத்து முழு உலகத்திலும் விசேட வைத்திய நிபுணர்கள் கொரோனா வைரஸ் தொடர்பான சிகிச்சையை கண்டுபிடிக்க முயன்று வருகின்றார்கள். அதனை வெகுவிரைவில் கண்டுபிடித்து விடுவார்கள். அதனால் ஒலிம்பிக் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படாது” என தெரிவித்தார். தனக்கு ஜப்பானின் ஒலிம்பிக் போட்டியின் நிச்சயமற்ற தன்மை தொடர்பாக போட்டி ஏற்பாட்டாளர்கள் எவ்வித தகவலும் அளிக்கவில்லை என பொதுச்செயலாளர் தெரிவித்தார்.
நாம் அணியொன்றை அனுப்ப தேவையான அடிப்படை தகுதிகளை நிறைவேற்ற தயாராக உள்ளோம். நாம் அணியை பங்குபற்ற செய்ய தேவையான திறமையை பூர்த்திசெய்யவே முயற்சிக்கின்றோம். அதைவிடுத்து தூரத்திலுள்ள கொரோனா பிரச்சினை போட்டியை பாதிக்கும் விதம் பற்றி எண்ணவில்லை. ஆனால் இந்நோய் தொற்று எதிர்காலத்தில் பிரச்சினையை ஏற்படுத்துமானால் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பும் இலங்கை வீரர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவோம் என தெரிவித்தார்.
கடந்த காலங்களில் உலகில் நடைபெறவிருந்த சர்வதேச போட்டிகள் பல ரத்துச்செய்யப்பட்டன. குறிப்பாக சீனா, ஹொங்கொங் பிரதேசங்களில் நடைபெறவிருந்த போட்டிகளே இவ்வாறு ரத்துச்செய்யப்பட்டிருந்தன.
அவற்றை பின்னர் நடத்துவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தாலும் அவற்றை இவ்வருடம் நடத்த முடியாத நிலைமையே உள்ளதென விளையாட்டு துறை விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கசுன் இருகல்பண்டார