![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/02/15/q16.jpg?itok=Gngdqo9b)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் மொஹமட் ஹபீ ஸு க்கு, மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பந்தை வீசி எறிகிறார் எனும் சந்தேகத்தை கடந்த வருடத்தில் மொஹமட் ஹபீஸ் எதிர்கொண்டார். இந்த நிலையில் பந்துவீச அவருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அவர் பந்துவீசும்போது மணிக்கட்டு 15பாகைக்கு மேல் வளைவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. எவ்வாறாயினும், இது தொடர்பாக இங்கிலாந்தின் லோபோரோ பல்கலைக்கழகம் பரிசோதனைகளை மேற்கொண்டதுடன், இதன்போது ஹபீஸின் பந்துவீச்சு பாணியில் தவறில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 6வருடங்களில் பல தடவைகள் மொஹமட் ஹபீஸின் பந்துவீச்சு பாணி குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் அனைத்து உள்ளூர் போட்டிகளிலும் பந்து வீச ஹபீஸ்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பந்துவீச்சு நடவடிக்கை மதிப்பீட்டைத் தொடர்ந்து அவரது பந்துவீச்சு சட்டவிரோதமானது என்று கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையிலேயே அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 2005ஆம் ஆண்டு அவரது பந்து வீச்சு முறையற்றதாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் தனது பந்து வீச்சை சரி செய்தார்.
இதன்பிறகு 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் உள்ளூர் ரி- -20தொடரான சுப்பர் லீக் தொடரில், முறையற்ற வீதத்தில் பந்து வீசுவதாக தடை விதிக்கப்பட்டது.
39வயதான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் மொஹமட் ஹபீஸ், கடந்த டிசம்பர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக அபுதாபியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
எனினும், தற்போது பாகிஸ்தான் அணிக்காக ஒரு நாள் போட்டி மற்றும் ரி-20போட்டிக்கான அணியில் மட்டும் விளையாடி வருகிறார்.
மொஹமட் ஹபீஸ் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 218 ஒருநாள் போட்டி, 89 இருபது ஓவர் மற்றும் 55 டெஸ்டில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.