![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/02/22/q17.jpg?itok=MdbnCcLz)
7வது மகளிர் ரி/20உலகக் கிண்ணப் போட்டி அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் ஆரம்பமானது. கடந்த 21ம் திகதி சிட்னியில் இந்திய- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியுடன் 2020ம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இறுதிப்போட்டி மார்ச் 8ம் திகதி மெல்பர்ன் நகரில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
சர்வதேச தரவரிசை அடிப்படையில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இலங்கை, மேற்கிந்தித்தீவுகள் ஆகிய எட்டு நாடுகள் நேரடியாகவும், தெரிவு போட்டிகளில் வெற்றிபெற்ற பங்களாதேஷ், தாய்லாந்து ஆகிய நாடுகள் உட்பட பத்து அணிகள் இம்முறை கோதாவில் இறங்கியுள்ளன.
10அணிகளும் ஏ- பி என இரு குழுவாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலுமுள்ள அணி அப்பிரிவிலுள்ள மற்றைய அணியுடன் மோத வேண்டும். அவ்வடிப்படையில் ஒவ்வொரு அணியும் முதற் சுற்றில் நான்கு போட்டிகளில் மோதி புள்ளிப்பட்டியலில் இரு குழுவிலும் முதலிரு இடங்களைப் பெறும் அணிகள் மார்ச் மாதம் 05ம் திகதி சிட்டினியில் நடைபெறவிருக்கும் அரையிறுதி ஆட்டத்தில் மோதும். அதில் வெற்றி பெறும் அணிகள் மார்ச் 08ம் திகதி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டக்குத் தெரிவாகும்.
சுமார் 10வருட குறுகிய வரலாற்றைக் கொண்ட ரி/20மகளிர் உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய அணி ஐந்து முறை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி நான்கு முறை (2010, 2012, 2014, 2018) கிண்ணம் வென்றுள்ளதுடன், இங்கிலாந்து (2009), மேற்கிந்திய தீவுகள் (2016) தலா ஒவ்வொரு முறை கிண்ணம் வென்றுள்ளன. இருமுறை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள நியூசிலாந்து மகளிர் அணியால் இன்னும் கிண்ணம் வெல்லமுடியவில்லை. ஆசிய கண்ட நாடுகளாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் உலகக் கிண்ணத் தொடரில் களமிறங்கினாலும் இன்னும் ஒரு முறை கூட இறுதிப் போட்டிக்குத் தெரிவாகவில்லை. இப்பிராந்தியத்தில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் இந்திய மகளிர் அணி இம்முறை மற்றைய அணிகளுக்கு சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுறது. இலங்கை அணி இதுவரை உலகக் கிண்ணத் தொடர் அறிலும் பங்குபற்றியிருந்தாலும் ஐந்து தொடர்களில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது. 2016ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் காலிறுதிக்கு முன்னேறியதே இலங்கை அணியின் உச்சபட்ச பெறுபேறாகும்.
சிறந்த சகலதுறை வீராங்கனையான சமரி அத்பத்துவின் தலைமயில் களமிறங்கும் இலங்கை அணியில் ஹர்சிதா மாதவி, திலுக்ஷி த சில்வா, ஹசினி பெரேரா, ஷசிகலா சிறிவர்தன போன்ற சிரேஷ்ட வீராங்கனைகள் உள்ளனர். தலைவி அத்தபத்து அண்மையில் முடிவுற்ற அவுஸ்திரேலிய பிக் பாஷ் அணிகளுக்கிடையிலான தொடர்களில் விளையாடிய அனுபவமுள்ளதால் அவரின் துடுப்பாட்டம் இலங்கை அணியின் வெற்றிக்கு பெரும் பங்களிப்புச் செய்யும் என எதிர்பார்க்கலாம். கடந்த வருடங்களைப் போலல்லாது இம்முறை இலங்கை மகளிர் அணி சற்று பலம்வாய்ந்த நிலையிலேயே போட்டிகளில் கலந்து கொள்கிறது. கடந்த வாரம் தென்னாபிரிக்க அணியுடன் நடைபெற்ற முதலாவது பயிற்சிப் போட்டியில் தோல்வியுற்றாலும் பலம்வாய்ந்த இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது பயிற்சிப் போட்டியில் 10விக்கெட் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றது. இப்போட்டியில் சமரி அத்தபத்து 50பந்துகளில் 78ஓட்டங்களைப் பெற்று சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியிருந்தார். இப்போட்டியில் சசிகலா சிறிவர்தனவும் சிறப்பாகப் பந்து வீசி 4விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார். சிரஷ்ட வீராங்கனையான இவர் மூன்று முறை உலகக் கிண்ண அணிக்குத் தலைமை தாங்கியுள்ளார். இவர் இம்முறை உலகக் கிண்ணத் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2018ம் ஆண்டு கடைசிகயாக மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற 6வது மகளிர் உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அண்மையில் அறிமுகப்படுத்திய பந்து வீச்சாளர் எல்லையை மீறி வந்து பந்து வீசும் ‘நோ போல்’ஐ அறிந்துகொள்ளும் வகையில் 3வது நடுவர் கள நடுவருக்கு சமிக்கை மூலம் துரிதமாக அறியப்படுத்தும் முறை முதன் முதலாக இவ் உலகக் கிண்ணப் போட்டியிலேயே அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏ. குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி அதன் முதல் போட்டியில் 22ம் திகதி சிட்னி மைதானத்தில் நியுசிலாந்து அணியை சந்திக்கவிருந்தது.
எம்.எஸ்.எம்.ஹில்மி