ஆறுதல் வெற்றி பெறுமா மேற்கிந்திய தீவுகள்? | தினகரன் வாரமஞ்சரி

ஆறுதல் வெற்றி பெறுமா மேற்கிந்திய தீவுகள்?

இரு அணிகளும் மோதும் இறுதி போட்டி இன்று கண்டியில்!

மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டி இன்று கண்டி பல்லேகல மைத்தானத்தில் பி. ப. 2.30மணிக்கு ஆரம்பமாகின்றது. இன்றைய போட்டியில் தொடரை முழுமையாகக் கைப்பற்றும் எண்ணத்தில் இலங்கை அணியும், ஆறுதல் வெற்றியொன்றை பெறும் நோக்கில் மேற்கிந்திய தீவுகள் அணியும் களமிறங்குகிறது. 

கொழும்பில் நடைபெற்ற முதலாவது போட்டியில் கடுமையான போராட்டத்துக்கு மத்தியில் இலங்கை அணி 1விக்கெட்டினால் வெற்றிபெற்றது. தொடரைத் தீர்மானிக்கும் 26ம் திகதி ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை அணி இலகுவாக வெற்றி பெற்று ஒரு போட்டி மீதமிருக்கையில் தொடரைக் கைப்பற்றியது. இவ்வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகப் பெறும் 5வது தொடர் வெற்றியை இலங்கை அணி பதிவு செய்துள்ளது. இதுவரை கடந்த ஒன்பது வருடங்களாக மேற்கிந்திய தீவுகள் இலங்கை அணியை தொடரொன்றில் வெற்றிகொண்டதில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  

கொழும்பில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான தலைவர் திமுத் கருணாரத்னவும், அவிஸ்க பெர்னாந்துவும் மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சுகளுக்கு சிறப்பாக முகம்கொடுத்து சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தாலும் இரண்டாவது போட்டியில் சிறந்த ஆரம்பத்தைப் பெறவில்லை. 2ஓட்டங்கள் பெறுவதற்குள் முதல் இரு விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. ஆனால் அடுத்து வந்த குசல் மெண்டிஸ் அவிஸ்க பர்னாந்துவுடன் இணைந்து அதிரடியாக ஆடி இலங்கை அணியை மீட்டெடுத்தார். நீண்ட இடைவேளைக்குப் பின் இலங்கை அணி இப்போட்டியில் திறமையாகத் துடுப்பெடுத்தாடியது. குசல் மெண்டிஸ் மற்றும் அவிஸ்க பெர்னாந்து சதம் விளாசினர். இதில் இளம் வீரர் குசல் மெண்டிஸ் 50போட்டிகளின் பின் சதம் பெற்றுள்ளார். இவர் இறுதியாக 2017ம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கெதிராக சதம் பெற்றதன் பின் இப்போட்டியிலேயே சதமடித்தமை குறிப்பிடத்தக்கது. இவர் 2ஓட்டங்கள் பெற்ற போது ஜேசன் ஹோல்டரின் பந்து வீச்சில் சிலிப் திசையிலிருந்த பொலார்ட் பிடியைத் தவறவிட்ட சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். இதன் பின் மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சை துவம்சம்செய்த இலங்கை அணியினர் இப்போட்டியில் 345ஓட்டங்களைப் பெற்றனர். புதிய பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆதரின் பயிற்சியின் கீழ் சிறப்பாகச் செயற்பட்டுள்ளது இலங்கை அணி. இப்போட்டியில் முன் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியாக விளையாடி திறமையைக் காட்டினர். இதில் குசல் மெண்டிஸ் 3வருடங்களின் பின் ஒருநாள் போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார். இலங்கை அணி பெற்ற 345ஓட்டங்களில் 33பௌண்டரிகள் விளாசியிருந்தனர். இதில் ஒரு சிக்கர் கூட உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது. இது சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் சாதனையாகவும் பதிவாகியுள்ளது. இவ்வகைப் போட்டியில் ஒரு சிக்சர் கூட விளாசாமல் பெற்ற கூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன் இங்கிலாந்து அணி பெற்ற 333ஓட்டங்களே ஒரு சிக்கர் கூட விளாசாமல் பெற்ற கூடிய ஓட்டங்களாக பதிவாகி இருந்தது.  

2வது போட்டியிலும் அஞ்சலோ மெத்தியூஸ், தனஞ்சய டி சில்வா நிலைத்து நின்று ஆடத் தவறியிருந்னர். திஸர பெரேரா இப்போட்டியில் இலங்கையின் வெற்றிக்கு சகலதுறையிலும் பங்காற்றியிருந்தார். முதலாவது போட்டியை போன்ற 2வது போட்டியிலும் இலங்கை அணியின் வெற்றிக்கு சகலதுறை வீரர் வனிது ஹசரங்கவின் ஆட்டம் பெரிதும் உதவியது. இவர் அண்மைக்காலமாக இலங்கை அணியில் இணைந்து கொண்ட சிறந்த சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரர் என்பதை இரண்டாவது போட்டியிலும் நிரூபித்திருந்தார்.  

2வது போட்டியில் இலங்கை அணியின் பந்து வீச்சும் களத் தடுப்பும் சிறப்பாக இருந்தது. முக்கியமாக சுழற்பந்து வீச்சாளர்களான ஹசரங்கவும், லக்ஷானும் சிறப்பாகப் பந்து வீசி மேற்கிந்திய தீவுகள் மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரர்களை நிலைகுலையச் செய்தனர். இதில் வனிந்து ஹசரங்க 3விக்கெட்டுளைக் கைப்பற்றியிருந்தார். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் அனுபவ வீரர் நுவன் பிரதீப் இரு போட்டிகளிலும் சிறப்பாகச் செயற்பட்டிருந்ததோடு பகுதிநேரப் பந்து வீச்சாளராகச் செயற்பட்ட அஞ்சலோ மெத்தியூசும் 2வது போட்டியில் இவருக்கு சிறந்த முறையில் ஒத்துழைத்திருந்தார்.  

2வது போட்டி தொடரை தீர்மானிக்கும் போட்டியென்பதால் இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி சகலவிதமான உத்திகளையும் கையாண்டு கடுமையகப்போராடும் என எதிர்பார்க்கப்பட்டாலும் போராடாமலேயே தோல்வியுற்றது ஏமாற்றமளித்தது. அவ்வணி துடுப்பாட்டத்தில் ஆரம்பம் முதலே சொதப்பியிருந்தது. ஓவருக்கு 7ஓட்டங்கள் என்ற வீதத்தில் பெறவேண்டியிருந்த அவர்கள் ஆரம்ப ஓவர்களிலேயே தடுத்தாடுவதில் ஈடுபட்டதால் இடையில் நெருக்கடி அதிகமானது. முதல் போட்டியில் சதம் விளாசிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷேய் ஹோப் இப்போட்டியிலும் அரைசதம் பெற்றாலும் ஓட்ட வேகத்தை அதிகரிக்க எத்தணிக்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர்களான தலைவர் கிரான்ட் பொலார்ட், நிக்கலஸ் பூரன் இப்போட்டியிலும் பிரகாசிக்கத் தவிறயிருந்தனர். களத்தடுப்பிலும் மேற்கிந்திய தீவுகள் சொதப்பியிருந்தனர். எனவே இன்று நடைபெறவுள்ள போட்டியில் இக்குறைபாடுகளை களைந்து 3வது போட்டியிலாவது ஆறுதல் வெற்றிபெற மேற்கிந்திய தீவுகள் அணி கடுமையாக முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம். 

இன்று 3வது போட்டி நடைபெறும் கண்டி பல்லேகல விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இம்மைதானத்தில் இலங்கை அணி 2018ம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற இங்கிலாந்துடனான போட்டியில் 18ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பொதுவாக இலங்கை மண்ணில் இலங்கை வெற்றிகளை விட அதிக தோல்விகளை இம்மைதானத்திலேயே பெற்றுள்ளது. அவ்வணி 12தோல்விகளையும், 10வெற்றிகளையும் பல்லேகல மைதானத்தில் பெற்றுள்ளது. இதில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு போட்டியில் விளையாடியுள்ளதுடன் அப்போட்டியில் அவ்வணி தோல்வியுற்றது.   

இம்மைதானத்தில் ஒரு அணி பெற்ற கூடிய ஓட்டமாக தென்னாபிரிக்க அணி 2018-.08-.25ம் திகதி இலங்கைக்கு எதிராக 7விக்கெட் இழப்புக்கு 363ஓட்டங்கள் பெற்றதே கூடிய ஓட்டங்களாகப் பதிவாகியுள்ளது. குறைந்த ஓட்டங்களாக 2013-.07-.26ம் ஆண்டு இலங்கை அணி தென்னாபிரிக்க அணிக்கெதிராக 167ஓட்டங்கள் பெற்றதே பதிவாகியுள்ளது. இம்மைதானத்தில் வீரர் ஒருவர் கூடிய மொத்த ஓட்டங்களாக திலகரத்ன டில்ஷான் 15போட்டிகளில் 939ஓட்டங்கள் பெற்றுள்ளார். தனி நபர் கூடிய ஓட்டங்களாகவும் திலக்கரத்ன டில்ஷான் 2011ம் ஆண்டு சிம்பாப்வேக்கு எதிராகப் பெற்ற 144ஓட்டங்களே பதிவாகியுள்ளது. பந்து வீச்சைப் பொறுத்தவரையில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க 16போட்டிகளில் 24விக்கெட்டுகளை வீழ்த்தியதே இம்மைதானத்தில் பந்து வீச்சாளர் ஒருவர் கைப்பற்றிய கூடிய விக்கெட்டுக்களாகும். சிறந்த பந்து வீச்சாக அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஜோன்சன் 2011-.08-.10ஆம் திகதி இலங்கை அணிக்கு எதிராக 31ஓட்டங்களுக்கு 6விக்கெட் கைப்பற்றியதே பதிவாகியுள்ளது. இம்மைதானத்தில் வெளிநாட்டு அணியொன்று பெற்ற கூடிய ஓட்டமாக 2018ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக தென்னாபிரிக்க அணி பெற்ற 367ஓட்டங்களே பதிவாகியுள்ளது. இம்மைதானத்தில் இலங்கை அணி பெற்ற கூடிய ஓட்டங்களாக 10.03.2011ம் ஆண்டு சிம்பாவே அணிக்கு எதிராகப் பெற்ற 327ஓட்டங்களே பதிவாகியுள்ளது. 

இரு அணிகளுக்குமிடையிலான 2போட்டிகள் கொண்ட ரி/20தொடர் பல்லேகல மைதானத்தில் எதிர்வரும் 4ம்திகதி புதன் கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன் 2வது போட்டி இதே மைதானத்தில் 6ம் திகதி நடைபெறவுள்ளது. 

இலங்கை அணி கடைசியாக இவ்வருட ஆரம்பத்தில் இந்திய அணியுடன் நடைபெற்ற தொடரில் 2- - 0என்ற ரீதியில் தோல்வியடைந்தது. இரு அணிகளுக்குமிடையில் கடைசியாக 2015ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ரி/20தொடரில் 1 - -1என்ற ரீதியில் சமநிலையில் முடிவடைந்தது. இதுவரை இரு அணிக்களுக்கிடையில் 9ரி/20போட்டிகள் நடைபெறுள்ளன. அதில் இலங்கை 6வெற்றிகளையும், மேற்கிந்திய தீவுகள் அணி 3வெற்றிகளையும் பெற்றுள்ளன. மேற்கிந்திய தீவுகள் அணி கடைசியாக அயர்லாந்துடன் மோதிய ரி/20தொடரில் 1 - -1என்ற ரீதியில் சமநிலையில் முடிவடைந்தது. 

ரி/20தொடரில் ஒரு இன்னிஸ்சில் கூடிய ஓட்டங்களாக 2015-.11-.09ம் திகதி பல்லேகல மைதானத்தில் இலங்கை அணி பெற்ற 3விக்கெட் இழப்புக்கு 215ஓட்டங்கள் பெற்றதே பதிவாகியுள்ளது. மேற்கிந்திய தீவுகள் சார்பாக அதேபோட்டியில் பெற்ற 185ஓட்டங்களே கூடிய ஓட்டங்களாகப் பதிவாகியுள்ளது. தனி நபர் ஓட்டங்களாக 2010-.05-.07ம் திகதி பிரிஜ்டவுன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியொன்றில் மஹேல ஜயவர்தன பெற்ற 98ஓட்டங்களே பதிவாகியுள்ளது.

எம். ஐ. எம். சுஹைல்

Comments