![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/03/14/q11.jpg?itok=VpUfKR2B)
உலகம் பூராவும் பரவிவரும் கோவிட்-19என்னும் கொரோனா வைரஸ் அநேக நாடுகளின் இயல்பு நிலையைப் பாதித்துள்ளதுடன் நாட்டின் பொருளாதாரத்துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலகிலுள்ள 110நாடுகளுக்கும் மேலாக பரவியுள்ள இவ்வைரசால் சுமார் 2இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 5ஆயிரத்துக்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர். நாளுக்கு நாள் இந்நோயின் தாக்கம் அதிவேகமாகப் பரவிவருவதால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பாடசாலைகள், சந்தைக் கட்டடங்கள், சினிமா தியேட்டர்கள், விளையாட்டு மைதானங்களைத் தற்காலிகமாக மூடிவிட சில நாடுகள் முடிவெடுத்துள்ளன.
எல்லாத்துறைகளைப் போலவே விளையாட்டுத்துறையிலும் பெரும் தாக்கத்தை இந்தக் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. இவ்வருடம் ஜப்பான் டோக்கியோவில் நடைபெறவுள்ள உலக விளையாட்டு விழாவாகக் கொண்டாடப்படும் ஒலிம்பிக் விழாவும் இவ்வைரஸால் பெரும் சிக்கலுக்குள்ளாகி பிற்போடப்படும், அல்லது கைவிடும் நிலை உருவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கட்டாரில் நடைபெறவிருந்த 2022பிபா கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் மற்றும் ஆசிய மண்டல தகுதிகாண் போட்டிகளை ஒத்திவைப்பதற்கு பிபா மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனம் ஆகியன முடிவு செய்துள்ளன. ஆசியாவின் உறுப்புநாடுகளின் ஆலோசனையை அடுத்தே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதன்படி 2020மார்ச் 23-, 31மற்றும் 2020ஜுன் 19காலப்பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட சர்வதேச போட்டி அட்டவணைகள் பின்னர் வேறு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் நடைபெறவிருந்த கால்பந்து போட்டிகள் உட்பட அனைத்துப் போட்டி நிகழ்ச்சிகளும் இரத்தாகியுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் கிசெப்பே கொண்டே அறிவித்துள்ளார்.
1973இல் கொலராவினால் 227பேர் பலியான போது கூட அந்த நாட்டில் கால்பந்துப் போட்டிகள் இரத்துச் செய்யப்படவில்லை. அந்தளவுக்கு கால்பந்து ரசிகளைக்கொண்ட அந்த நாட்டில் கொரோனா வைரஸ் தலைவிரித்தாடுவதால் கால்பந்தாட்டம் மட்டுமல்ல அனைத்து விளையாட்டுப் போட்டிகளையும் ரத்துச் செய்வதாக அறிவித்துள்ளார் அந்நாட்டுப் பிரதமர்.
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் அதி வேகமாகப் பரவுவதால் தாய்லாந்து பெங்கொக் நகரில் நடைபெறவிருந்த 19வது ஆசிய இளையோர் தடகள சம்பியன்ஷிப் போட்டித் தொடரையும் ரத்துச் செய்வதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.
இத்தொடர் எதிர்வரும் மே மாதம் 14முதல் 17வரை நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலகில் நடைபெறும் மிகப் பெரிய விளையாட்டு விழாவான இம்முறை ஜப்பான் டோக்கியோ நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விழாவுக்கும் கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்படும் எனக் கருதும் நிலையில் அதன் ஆரம்ப நிகழ்வாக இடம் பெறும் ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்வும் கொரோனா பீதி காரணமாக பார்வையாளர் அற்ற அரங்கில் பாரம்பரிய முறைப்படி கடந்த வியாழக்கிழமை கிரீஸ் நாட்டிலுள்ள ஒலிம்பியா கிராமத்தில் 100சிறப்பு அதிதிகளின் முன்னிலையில் ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் இவ்வருடம் ஜூன் மாதம் தென்கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய சம்பியன்ஷிப் வலைபந்தாட்டப் போட்டித் தொடரும் கொரோனா வைரஸ் பீதியால் காலவரையரையின்றி பிற்போடப்படவுள்ளதாக ஆசிய வலைப்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.
சீனா, இத்தாலியை அடுத்து இந்நோய்த் தாக்கம் அதிவேகமாகப் பரவிவரும் தென்கொரியாவில் 14நாடுகளின் பங்குபற்றுதலுடன் ஜூன் மாதம் 20திகதி முதல் 28ம் திகதி வரை நடைபெறவிருந்த இப்போட்டித் தொடர் பிற்போடப்பட்டுள்ளது.
கடைசியாக 2018ம் ஆண்டு சிஙக்கப்பூரில் நடைபெற்ற ஆசிய வலைபந்தாட்டப் போட்டித் தொடரில் இலங்கை அணி சம்பினானது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் விளையாடும் நாடுகளிலும் தற்போது மெது மெதுவாக கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. இந்தியாவிலும் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஐம்பதைக் கடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஒரு நாள் போட்டித்தொடரில் விளையாட இந்தியா வந்துள்ள தென்னாபிரிக்க அணி அங்கு சுமார் 10நாட்கள் தங்கியிருந்து 3ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தியா வந்துள்ள தென்னாபிரிக்க அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் இது பற்றிக் கூறும் போது: இங்கு வந்துள்ள எமது வீரர்களின் ஆரோக்கியம் மிக முக்கியம். எனவே வழக்கமான கைகுலுகல்களை தவிர்த்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையில் பாரியளவில் இல்லாத போதிலும் டெஸ்ட் உலகச் சம்பியன் ஷிப் போட்டித் தொடரில் பங்குகொள்ள இலங்கை வந்துள்ள இங்கிலாந்து அணி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மேற்கொண்டுள்ளது. இதன்படி இலங்கை அணி வீரர்களுடனோ, இங்குள்ள வேறு எவருடனோ கைகுலுக்கப் போவதில்லை என இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சம் காரணமாக இம்முறை எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 13வது இந்தியன் பிரிமியர் லீக் தொடருக்கும் சிக்கலேற்படும் என விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஆனால் இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் சௌரவ் கங்குலி ஐ. பி. எல். தொடர் பற்றி கேட்டபோது: “நாங்கள் எமது அனைத்து முன்னனெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.
அந்த நடவடிக்கைகளை எமது மருத்துவக்குழு தீர்மானித்து முன்னெடுத்துச் செல்லும். மருத்துவமனைகளுடன் எமது மருத்துவக்குழு எந்நேரமும் தொடர்பில் இருந்து வருகிறது. அதனால் திட்டமிட்டபடி ஐ. பி. எல். தொடர் நடைபெறும்’ என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்தியாவிலும் இவ்வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் அதிகமாகக் கூடும் நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள், விழாக்களை ரத்துச் செய்வது குறித்து அரசு மட்டத்தில் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஐ. பி. எல். போட்டி இந்தியாவின் பல நகரங்களிலும் நடைபெறும் அப்போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் கூடுவர். அவர்களில் ஒருசிலருக்கு இத்தொற்று இருந்தால் சன நெரிசலில் அது வேகமாகப் பரவுவதற்கான சந்தர்ப்பம் உண்டு. இதனால் ஐ. பி. எல். போட்டியை ரத்துசெய்யும்படி இந்தியாவின் சில மாநில அரசுகள் கோரிவருகின்றன.
இது குறித்து மகாராஷ்டிரா அமைச்சர் ராஜேஷ் டோப் கூறுகையில், ‘ஒரு இடத்தில் அதிகமான மக்கள் கூடும் போது அங்கு ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருந்தாலும் அது வேகமாகப் பவரவுவதற்கான ஆபத்து இருக்கிறது.
எனவே சிறிது காலத்துக்கு கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளை நடத்தாமல் தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஐ. பி. எல். போட்டியை பிற்படுத்தலாமா என்பது குறித்தும் அதிகாரிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இது பற்றி வெகுவிரைவில் முடிவெடுக்கப்படும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட லீக் போட்டிகள் ரசிகர்களே இல்லாத மூடிய அரங்கிலேயே நடைபெற்றுவருவதைச் சுட்டிக்காட்டி அதே போல் ஐ. பி. எல் தொடரையும் நடத்தலாம் என ஆலோசனை முன்வைத்தாலும், ஏற்பாட்டாளர்களும், அனுசரணையாளர்களும் இம்முடிவில் திருப்திகொள்ளவில்லை எனத் தெரியவருகிறது.