![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/03/14/q12.jpg?itok=522A9p-Z)
மேற்கிந்திய தீவு- இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்ற 3போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் இலங்கை 3-0என முழுமையாக வெற்றிபெற்றது. இது இலங்கை அணி மிக நீண்ட காலத்தின் பின்னர் மீண்டும் வெற்றிப் பாதையை நோக்கித் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதைக் காணக் கூடியதாகவுள்ளது.
கடந்த பல வருடங்களாக இலங்கை அணி மூன்று வகைப் போட்டிகளிலும் மிக மோசமான தோல்விகளால் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வந்தது. தொடர் தோல்விகளால் அணி துவண்டு போயிருந்த நிலையில் பயிற்சியாளர்கள், தலைவர், தேர்வாளர்கள் என அடிக்கடி மாற்றப்பட்ட போதிலும் அணியால் வெற்றிப்பாதைக்குத் திரும்ப முடியவில்லை.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் இலங்கை அணியின் முன்னாள் வீரரும் தலைசிறந்த பயிற்சியாளர் என பெயரெடுத்தவருமான சந்திக்க ஹத்துருசிங்கவை எமது அணியின் பயிற்சியாளராக நியமித்ததன் மூலம் இலங்கை அணிக்கு மீண்டும் புத்துயிரூட்டும் முயற்சிகள் இடம்பெற்றாலும் அதுவும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் எதிர்பார்த்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளரும் தென்னாபிரிக்க வீரருமான மிக்கி ஆர்தர் இலங்கை அணியின் பயிற்சியாளராக இந்த வருட ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டார். அவரது வருகைக்குப் பின்னர் இலங்கை அணியில் திடீரென மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக வலுவான துடுப்பாட்ட வரிசையைக்கொண்ட அணியான மேற்கிந்தியத்தீவுகளுடன் 3போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக வெற்றிகொண்டு சாதனை படைத்துள்ளது. துடுப்பாட்டம், பந்து வீச்சு, களத்தடுப்பு என இத் தொடரில் அனைத்துத் துறைகளிலும் இலங்கை அணி மிகச் சிறப்பாகச் செயற்பட்டுள்ளது. வலுவான துடுப்பாட்ட வரிசையின் மூலம் பெருமளவு ஓட்டங்கள் குவிக்கப்பட்டதுடன் சிறந்த பந்து வீச்சு, களத்தடுப்பு மூலம் எதிரணியை கட்டுப்படுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. இது இலங்கை அணியில் புதிய பயிற்சியாளரின் கீழ் வெற்றிப்பாதையை நோக்கி முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளதை புலப்படுத்துவதாக அமைந்துள்ளது.
புதிய பயிற்றுவிப்பாளரின் கீழ் இலங்கை அணி முதன் முதலில் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட டெஸ்ட் தொடரில் தோல்வியுற்றது. அதன் பிறகு இந்திய அணியுடன் நடைபெற்ற தொடரிலும் இலங்கை அணி தோல்வியுற்றது. பயிற்சிப் பொறுப்பையேற்று இலங்கை அணி வீரர்களின் ஏற்ற, இறக்கங்களை அறிந்துகொள்வதற்கும் முன் இவ்விரு தொடர் நடைபெற்றதால் வழமையான தோல்விகளுக்கு இலங்கை முகம்கொடுத்தது. ஆனால் தற்போது அவரின் 3மாத பயிற்சியின் கீழ் இலங்கை அணி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது.
தென்னாபிரிக்காவில் பிறந்த மிக்கி ஆர்தர் சர்வதேச போட்டிகளில் களமிறங்காதவர். முதல்தரப் போட்டிகளில் விளையாடிய அனுபவங்களை மட்டும் வைத்துக்கொண்டு தன்னை சிறந்த பயிற்சியாளராக நிரூபித்துக் கொண்டிருக்கும் அவர், இதற்கு முன் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய பிரபல நாட்டு அணிகளை முன்னேற்றுவதில் தனது பங்களிப்பை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். பிரபல வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் திறமைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பயிற்சிகளை அளித்துவரும் அவர் இலங்கைக்கு வந்ததும் முட்டி வயிறு என்ற கேலிகளுக்குள்ளான ரி/20அணியின் தலைவர் லசித் மலிங்க மிக்கி ஆர்தரின் ஆலோசனைகளை பின்பற்றியதால் அவரது எடையில் 10கிலோவை குறைத்துக்கொண்டுள்ளார்.
தற்போதைய இலங்கை அணியை வைத்து எதிர்கால சிறந்த வீரர்களை அடையாளம் காணும் பணியிலேயே அவர் தற்போது ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவர் நடந்து முடிந்த மேற்கிந்திய தீவுகளுடனான ஒரு நாள் தொடர் பற்றிக் கூறும் போது: ‘வெள்ளைப்பந்தில் விளையாடி போட்டியை வெல்வது எப்படி என்பதை எஸ். எஸ். சி. மைதானத்தில் நடைபெற்ற முதல்போட்டியில் பார்க்க முடிந்தது. எமது வீரர்கள் விளையாடியதை உன்னிப்பாகக் கவனித்ததில் இந்த அணிதான் எமது எதிர்கால அணி என்ற செய்தியை இப்போட்டி எமக்கு அறியத்தந்தது. வனிந்து ஹசரங்கவின் துடுப்பாட்மும் போட்டியை இறுதி வரை கொண்டு சென்ற பாணியை பார்க்கும் போது எதிர்காலத்தில் ஒரு சிறந்த சகலதுறை வீரர் இலங்கைக்கு கிடைத்துள்ளமையைக் காண முடிந்தது’ என பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் வீ்ழ்ந்திருந்த அவுஸ்திரேலியாவை தூக்கி நிறுத்துவதற்கும், தென்னாபிரிக்க அணியை உலகின் முதல்தர அணியாக மாற்றுவதற்கும், பாகிஸ்தான் அணியை சம்பியன் கிண்ணத்தையும், ரி/20போட்டிகளில் சர்வதேச தரவரிசையில் முதலிடத்துக்கு கொண்டுவருவதற்கும் இவரின் பயிற்சியே முக்கியமானதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்காக அவர் வீரர்களின் மனவலிமையை, களத்தடுப்பு முறையை, விக்கெட்டுகளுக்கிடையில் ஓடும் வேகத்தை பயிற்சின் போது கடுமையாகவும், கண்டிப்புடனும் அவர் கடைப்பிடித்தார்.
மிக்கி ஆர்தர் எப்போதும் புன்முறுவல் பூத்த வண்ணமே பயிற்சிகளில் ஈடுபடுவார். ஆனால் தீர்மானங்களை எடுக்கும்போது கண்டிப்புடன் நடந்துகொள்வார். அத் தீர்மானங்கள் அணியின் முன்னேற்றத்துக்காகவே எடுக்கப்பட்டதாக இருக்கும்.
இதற்கு சிறந்த உதாரணமாக ஒரு காலத்தில் பாகிஸ்தான் அணியின் சிறந்த துடுபாட்ட வீரராக இருந்த அஹமட் செஷாட் பின்னர் பின்னடைவைச் சந்தித்ததால் ஆதரின் பயிற்சியின் கீழ் அவர் அணிக்குத் தேர்வு செய்யப்படவில்லை. பின்னாளில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல் ஹக் தெரிவானார். அதன் பின் நடைபெற்ற இலங்கையுடனான ரி/20தொடருக்கு மீண்டும் அஹமட் செஷாட் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார். அப்போது பத்திரிகைப் பேட்டியில் ‘தற்போதைய பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் சிறந்தவர். அவர் சிறப்பாக எம்மை வழி நடத்திச் செல்கிறார்’ என செஷாட் கூறியிருந்தார். ஆனால் அந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி 3-0என முழுமையாத் தோல்வியடைந்திருந்தது. செஷாடும் மூன்று போட்டிகளிலும் சொதப்பியிருந்தார். அதன் பின் செஷாட்டுக்கு மட்டுமல்ல தலைவர் சப்ராஷ் அஹமதுவுக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.
வீரர்களின் விருப்புகளுக்கும், நிர்வாகத்தின் விருப்புகளுக்கும் விட்டுக்கொடுக்கும் பயிற்சியாளர்களின் பதவிக் காலம் நீடிக்கலாம். ஆனால் அணி படுபாதாளத்துக்குத் தள்ளப்படும்.
ஆனால் அவ்விரு தரப்பினரின் நேர்மறையான விருப்பங்களுக்கு விட்டுக்கொடுக்காத பயிற்சியாளர்களின் பதவிக்காலம் குறைவடையும். புதிய பயிற்சியாளர் மிக்கி ஆதரின் எண்ணப்படி அணியை வழிநடத்திச் செல்ல இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அனுமதித்துள்ளது. எனவே இன்னும் சில மாதங்கள் சென்ற பின் மிக்கி ஆதரின் பயிற்சியின் ஏற்றத் தாழ்வுகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இலங்கை கிரிக்கெட்டுக்கும் கிடைக்கும். அதுவரை காத்திருப்போம்.
எம்.எஸ்.எம்.ஹில்மி