பிரிமா சன்ரைஸ் பான் அனுசரணையில் இடம்பெற்ற பிராந்திய ஜூனியர் திறந்த கொல்ப் சம்பியன்ஷிப் போட்டியில் புதிய சாதனையொன்றை ஏற்படுத்தி 12 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட வயதுப் பிரிவின் தங்கம் மற்றும் வெள்ளிப் போட்டி நிகழ்ச்சிகளுக்கான வெற்றிக் கிண்ணத்தை இந்நாட்டின் பெண்கள் கொல்ப் விளையாட்டின் சிறப்பு வீராங்கனையான தானியா மினால் பாலசூரிய பெற்றுக் கொண்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை ஷங்கிரிலா ஹோட்டல் வளாகத்தில் அமைந்துள்ள கொல்ப் மைதானத்தில் இப்போட்டிகள் கடந்த 8 மற்றும் 9ம் திகதிகளில் இடம்பெற்றன. ஐந்து வயதுப் பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற இச்சுற்றுப் போட்டிகளில் சுமார் 56 ஜூனியர் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதன் போது தானியா மினால் பாலசூரிய தனது வயதுப் பிரிவில் சிறப்பான திறமையினைக் காட்டி வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டதோடு இப்பிரிவின் இரண்டாமிடத்தை எதிர்த்தரப்பு வீராங்கனையான கைலா பெரேரா பெற்றுக் கொண்டார். இப் போட்டியின் மூன்றாமிடத்தை தானியாவின் இளைய சகோதரியான செரின் மிதாரா பாலசூரிய பெற்றுக் கொண்டார்.
இந்தச் சுற்றுப் போட்டியின் 12 வயதுக்கும், 14 வயதுக்குமிடைப்பட்ட பிரிவின் வெள்ளி போட்டியில் ரெசான் அல்கம வெற்றி பெற்றதோடு, அப்போட்டியில் மூசா செரிப் மற்றும் எம். லிதுர்சன் ஆகியோர் இணை இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டனர். மூன்றாமிடத்தை இம்ரான் நசீர் பெற்றுக் கொண்டார்.
யெனிக் குமார 15 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள் பிரிவின் தங்க போட்டிப் பிரிவில் வெற்றி பெற்றதோடு, இப்போட்டியின் இரண்டாமிடத்தை நிரேக் டெஜ்வானி பெற்றுக் கொண்டார். இப்போட்டியின் மூன்றாமிடத்தை திமுத்து பெற்றுக் கொண்டதுடன் நான்காமிடத்தை முன்னாள் இப்பிரிவின் வெற்றியாளரான எஸ். துவர்சன் பெற்றுக் கொண்டார். 09 வயதின் கீழ் வென்கலப் போட்டிப் பிரிவினை தேஜாஸ் ரதிஸ்காந்த் வெற்றி கொண்டதோடு, அதன் இரண்டாமிடத்தை அனூஜ மெத்சர பெற்றுக் கொண்டார். இப்பிரிவின் பெண்களுக்கான போட்டியில் காயா தளுவத்தை வெற்றி பெற்றார். இதன் இரண்டாமிடத்தை க்வான் தேஜ்வானியும், எச். டி. ஆதித்யா வீரசிங்கவும் பெற்றுக் கொண்டனர்.
பிரிமா சிலோன் நிறுவனத்தின் பொது முகாமையாளர் டென் பென் சுவான், பிரதி பொது முகாமையாளர் சஜித் குணரத்ன, ஹம்பாந்தோட்டை ஷங்கிரிலா ஹோட்டல் குழுமத்தின் ரிகாடோ வெலே, அந்த ஹோட்டலின் வதிவிட முகாமையாளர் பிரகீத் குமார், உள்ளிட்ட பலர் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
(புத்தளம் விசேட நிருபர்)