![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/08/24/a22_0.jpg?itok=Dz1BIo3q)
கொரோனா வைரஸ் தொற்று அநேக விளையாட்டு வீரர்களின் உடற் தகுதியிலும், விளையாட்டு நுணுக்கங்களிலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஆறு மாத காலமாக வீரர்கள் தனிமையில் விளையாட்டுப் பயிற்சிகளிலும், உடற் பயிற்சிகளிலும் ஈடுபட்டாலும் அவர்கள் ஒரு அணி என்ற ரீதியில் ஒரு குழுவாக பயிற்சிகளில் ஈடுபட்டு தமது திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு கடந்த ஆறு மாத காலமாக வீரர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
மேலும் இவ்வருடம் உலகக் கிண்ணத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அநேக கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
அந்த வகையில் சர்வதேச வீரர்களான பாகிஸ்தானின் சுஹைப் மலிக், மொஹம்மட் ஹாபிஸ், மேற்கிந்தித் தீவுகளின் கிறிஸ் கேயில், டுவையின் பிராவோ, தென்னாபிரிக்க வீரர் பப் டு பிளெஸி, இம்ரான் தாஹிர் அவ்வணியின் ஓய்வை அறிவித்த பின் மீண்டும் ரி/20உலகக் கிண்ணத் தொடரில் விளையாட எதிர்பார்த்திருந்த அதிரடி வீரர் ஏ. பி. டிவிலியர்ஸ், நியூசிலாந்தின் ரோஸ் டைலர், இந்திய அணியின் மகேந்தர சிங் டோனி இலங்கையின் லசித் மலிங்க ஆகியோர் இம்முறை நடைபெறவிருந்த ரி/20உலகக் கிண்ணத் தொடருடன் ஓய்வை அறிவிக்க இருந்த சிரேஷ்ட வீரர்களாவர். இதில் மகேந்திர சிங் டோனி மட்டுமே இதுவரை தனது ஓய்வை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இலங்கை அணியின் ரி/20அணியின் தலைவர் லசித் மலிங்க இவ்வருடம் சர்வதேச கிரிக்கெட் உலகுக்கு விடை கொடுக்கக் காத்திருந்தார். ஆனால் அது இவ்வருடம் கைகூடவில்லை. எனவே அடுத்த வருடம் வரை அவர் காத்திருக்க வேண்டியுள்ளது. அவரின் உடற் தகுதி அதற்கு இடமளிக்குமா எனவும் தற்போது கேள்வியெழுந்துள்ளது. ஆனால் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ. பி. எல். தொடரில் மலிங்க மும்பை அணிக்கு விளையாடவுள்ளதால் அவர் பயிற்சிகளில் ஈடுபட்டு தனது உடற் தகுதியையும், விளையாட்டு திறமையையும் மேம்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் அது அடுத்த வருடம் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டி வரை நீடிக்குமா என்பது சந்தேகமே.
இவர் மட்டுமல்ல இலங்கை அணி வீரர்கள் கடந்த நான்கு மாதங்களாக போட்டிகளில் ஈடுபடாவிட்டாலும் கொரோனா முடக்கத்தின் பின் கட்டம் கட்டமாக பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். அதனால் அவர்களின் உடற்தகுதியில் பெரிதாக பாதிப்புக்கள் ஏற்படவில்லை என அண்மையில் அவர்கள் முதல்தரக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதன் மூலம் தெளிவாகியுள்ளது. இது கடந்த நான்கு மாதங்களாக இலங்கை வீரர்களுக்கு கிடைத்த உத்வேகமாகும். கடந்த காலங்களில் முதல் தரப் போட்டிகளை நடத்துவத்துவதில் வீரர்களிடையேயும் கிரிக்கெட் அதிகாரிகளிடையேயும் கொரோனா தொற்று காரணமாக வாதப் பிரதிவாதங்கள் இருந்தாலும் இறுதியில் நடத்துவது எனத் தீர்மானித்தது சிறந்த முடிவாகும். இலங்கை அணிக்கு சர்வதேச போட்டிகள் இல்லாத இந்நிலையில் தொடர்ந்தும் முதல்தரப் போட்டிகளை நடத்துவது வீரர்களின் உடற் தகுதியையும், விளையாட்டு ரிதத்தையும் பேண உதவியாக இருக்கும் என இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் கருதுகின்றனர். பல மாதங்களின் பின் முதல் தரக் கிரிக்கெட் நடைபெறுவதால் தேசிய வீரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பாக விளையாட்டி வருகின்றனர். மெத்தியூஸ், சானக, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா போன்ற சிரேஷ்ட வீரர்கள் சதங்களை விளாசி வருகின்றனர். மேலும் இப்போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு கொடுப்பனவுகளும் கிடைப்பதால் பொருளாதார ரீதியில் அவ்வீரர்களுக்கு உதவியாக உள்ளதாகவும் சில வீரர்கள் கருத்துத் தெரவிக்கின்றனர். இது முதல் தரப் போட்டியானாலும் ஐ. சி. சி. யின் சுகாதார நிபந்தனைகளுக்கு உட்பட்டே இப்போட்டிகள் நடைபெறுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
கொரோனா தாக்கத்தால் ரசிகர்கள் இல்லாத மைதானங்களில நடைபெற்றுவரும் போட்டிகளை தொலைக்காட்சி மற்றும் இணையத்தில் மட்டுமே ரசிகர்கள் கண்டுகளிக்க முடியும். ஆனால் அதிக ரசிகர்கள் கூடும் கால்பந்தாட்டப் போட்டிகளுக்கு அவர்களின் ஆராவாரங்களுக்கும் குறைவில்லை. கால் பந்தென்றால் ஆராவாரம்தான் அதன் சுவாரஷ்யத்தை அதிகரிக்கும். பார்வையாளர்களின் ஆரவாரமற்ற ஓரிரண்டு போட்டிகளை ரசித்த பின் தொலைக்காட்சி, இணைத்தில் கூட அப்போட்டிகளை ரசிக்கவில்லை என்பது அண்மையில் தெரியவந்துள்ளது.
எனவே பிரபல கால்பந்துத் தொடர்களான இங்கிலாந்தின் பிரிமியர் லீக் மற்றும் ஸ்பெய்னின் லா லீகா போன்ற தொடர்களில் நடைபெறும் போட்டிகளுக்கு கால்பந்து வீடியோ கேம் நிறுவனத்திடமிருந்து மேற்படி ரசிகர்களது ஆராவார சப்தத்தை வாங்கி மைதானங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு தொலைக்காட்சி மற்றும் இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
மேற்படி நிறுவனம் பிரபலமான பிபா என்னும் கால்பந்து விளையாட்டை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. அவ்வீடியோகேமில் சிறப்பம்சம் களத்தில் இருக்கும் ரசிகர்களின் சப்தங்கள் அப்படியே இட பெற்றுள்ளமையாகும்.
தற்போது அதே சப்தங்களை பிரபல கால்பந்தாட்டத் தொடர்களுக்கும் கொடுத்துள்ளது அந்த நிறுவனம். அந்நிறுவனத்தில் சுமார் 800வகையான ஆராவார சப்தங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மைதானத்தில் நடைபெறும் போட்டியில் நிலவும் சூழ்நிலைக்கேற்ப ஒருவர் இந்த சப்தங்களை ஒலிக்கச் செய்ய வேண்டும். இது தொலைக்காட்சி, இணைய பார்வையாளர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இந்தப் போட்டிகள் நடப்பது போன்ற உணர்வை அளிக்கும். கொரோனா வைரஸ் எந்தவிதமான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த மாதிரியான சூழ்நிலையில் போட்டிகளைக் காணவே ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எம்.ஐ.எம். சுஹைல்...?