அரசியலுக்கு வருவாரா தோனி? | தினகரன் வாரமஞ்சரி

அரசியலுக்கு வருவாரா தோனி?

விளையாட்டு உலகப் பிரபலங்கள் அரசியலில் ஈடுபடுவது புதுமையான விடயமல்ல. அதிலும் ஆசியப் பிராந்தியத்தைப் பொறுத்தவரை பல வீரர்கள் விளையாட்டுக்கு விடைகொடுத்தவுடன் அரசியலில் ஈடுபடுவது வழமையாகியுள்ளது. அண்மையில் இந்திய அணியின் சிறந்த தலைவர் எனப் பெயரெடுத்த மகேந்திர சிங் டோனியின் ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து பிரபல அரசியல்வாதிகள் அவரை அரசியலுக்கு இழுக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

உலகளவில் பல தலைவர்கள் அரசியலுக்கு வருமுன் விளையாட்டுலகில் சிறந்த வீரர்களாகத் திகழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புட்டின் சிறந்த குதிரையேற்ற மற்றும் பனிச்சறுக்கு வீரராகத் திகழ்ந்தவர். பிஜி தீவுகளின் காமிசீஸ் மாரா அந்நாட்டில் 22ஆண்டுகள் பிரதமராகவும் 7ஆண்டுகள் ஜனாதிபதியாகவும் பதவிவகித்த சிறந்த விளையாட்டு வீரராவார்.

1992ம் ஆண்டு பாகிஸ்தான் அணி உலகக் கிண்ணத்தை வெல்லும் போது அவ்வணியின் தலைவராகவிருந்த இம்ரான்கான் அதன் பின் கட்சி ஆரம்பித்து அதன் தலைவராக செயற்பட்டு ஆட்சியைக் கைப்பற்றி பிரதமரான பிரபலமான கிரிக்கெட் வீரராவார்.

இலங்கை அணி 1996ம் ஆண்டு கிண்ணம் வெல்லக் காரணமாயிருந்த அர்ஜுன ரணதுங்க, சனத் ஜயசூரிய போன்றோர் அரசியலில் குதித்து பாராளுமன்றம் சென்று அமைச்சுப் பதவிகளை வகித்தவர்களாவர்.

பங்களாதேஷ் அணித் தலைவர் மஷ்ரபி மொர்தசா  விளையாட்டு களத்தில் இருக்கும் போது அரசியலில் ஈடுபட்டு எம்.பியானார்.

இந்தியாவில் அண்மையில் கொரோனா தொற்றினால் மரணமான இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சவ்காத்கான் 40டெஸ்ட் போட்டிகளிலும் 7ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள வீரர். இவர் பின்னர் பா. ஜ. கவில் இணைந்து இரண்டு முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பியானார். 1960களில் கிரிக்கெட் உலகில் பிரபல வீரராகத் திகழ்ந்த மன்சூர் அலிகான் படோடி ஓய்வின் பின் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டுள்ளார். அதேபோல் நவ்ஜோத் சிங் சிது ஓய்வின் பின் பா. ஜ. கவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு 10ஆண்டுகள் எம். பியாக வலம் வந்தார். 2000ம் ஆண்டுகளில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவித்த மொஹம்மட் அசாருதீன் ஓய்வின் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து உத்தரபிரதேசத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்பியான பிரபல கிரிக்கெட் வீரராவார். இந்திய அணியின் சிறந்த களத்தடுப்பாளரான மொஹம்மட் கைப் பின்னாளில் அரசியலில் ஈடுபட்டவராவார். அரசியல் பாரம்பரியத்தில் வந்த கிரிக்கெட் வீரரான கீர்த்தி ஆசாத் பின்னாளில் பா. ஜ.க.வில் இணைந்து மூன்று முறை எம்பியாகத் தெரிவானார்.

இவ்வரிசையில் அண்மையில் கிரிக்கெட் உலகுக்கு விடைகொடுத்த இந்திய அணி முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனிக்கு சில அரசியல் தலைவர்கள் அரசியல் களத்துக்கு வரும்படி தமது டுவிட்டர் பதிவின் மூலம் அழைப்பு விடுத்து வருகின்றார்கள்.

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கும் சினிமாவுக்குமே அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்திய சினிமா சூப்பர் ஸ்டார்களுக்கு இருக்கின்ற வெறித்தனமான ரசிகர் கூட்டம் டோனி, கோஹ்லி, ரோஹித் சர்மா, பும்ரா, தவான் போன்ற கிரிக்கெட் வீரர்களுக்கும் உள்ளனர். எனவே இவ்வாறான செல்வாக்கு மிகுந்த பிரபல வீரர்களை அரசியலுக்கு இழுப்பது தொடர்ந்தும் நடைபெற்றுவருகின்றது. எனவே அண்மையில் ஓய்வுபெற்ற மகேந்திர சிங் டோனி விளையாட்டுக்கு வெளியில் அவரது மென்மையான குணநலன்களுக்காகவும், மனித நேயங்களுக்காகவும் கோடிக்கணக்கான ரசிகர்களால் அவர் விரும்பப்படுகிறார். கடந்த ஒரு வருடமாக அவர் ஓய்வை அறிவிக்க முன்பிலிருந்தே அரசியல்வாதிகள் அவர் மீது தமது கவனத்தை செலுத்தி வந்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநில பா. ஜ. க. தரப்பினரான சஞ்சய் பாஸ்வான் கடந்த ஒரு வருடகாலமாக டோனியை அரசிலுக்குள் உள்வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை அடிக்கடி சந்தித்துவிட்டு டோனி ஓய்வுக்குப் பின் ஒரு நல்ல முடிவை அறிவிப்பார் என பல தடவைகள் பத்திரிகைகளுக்கு அறிவித்துள்ளார். சஞ்ஜய் பாஸ்வான் கடந்த ஒரு வருட காலமாக பலமுறை டோனியை சந்தித்து பேசினாலும் டோனி தனது நிலைப்பாடு குறித்து ஒன்றும் சொல்லவில்லை. கிரிக்கெட்டைத் தவிர வேறெதையும் சிந்திக்க முடியாது என்ற கருத்துடனேயே அவர் இருந்தார். அவரின் ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து பல அரசியல் கட்சித் தலைவர்களும் அவரை அரசியலுக்கு கொண்டு வரும் தமது முயற்சியை மீண்டும் ஆரம்பித்துள்ளனர். இந்த வரிசையில் சுப்பிரமணிய சுவாமி, அமித்ஷா, 

டோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றாலும் சுறுசுறுப்பான அவர் ஓய்வாக காலத்தைக்கழிக்கக் கூடியவரல்ல. எனவே ஏதாவது ஒரு துறையில் அவர் இயங்கிக் கொண்டே இருப்பார். அவர் கிரிக்கெட் விளையாடும் போதும் எந்த நேரம் என்ன முடிவெடுப்பார் என யாரும் அறிய மாட்டார்கள். நுட்பமாக அதிரடி முடிவுகளை எடுத்து அணியை வழிநடத்தியவர். அவர் சார்ந்த அணி வீரர்களை மட்டிட்டு அவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வார். அதனால்தான் பார்வைக்கு சுமாராக இருக்கும், பெரும்பாலும் அதிரடியாக விளையாடக் கூடிய வீரர்களை உள்வாங்காத சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி அதிகமுறை கிண்ணம் வெல்ல வைத்ததோடு எல்லா சீசனிலும் பிளே ஓப் சுற்றுக்கு அவ்வணியை கொண்டு சென்றவர். எனவே அவர் கிரிக்கெட்டுக்கு முழுக்குப் போட்ட பின் என்ன முடிவெடுப்பார் என யாரும் யூகிக்க முடியாது. அரசியல் களநிலைமைகளை அலசி ஆராய்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் அரசியல் ஏற்ற இறக்கங்களை மட்டிட்டு அதன் பின்னரே தீர்க்கமான ஒரு முடிவுக்கு வருவார் எனவும் சொல்லப்படுகிறது.

எம்.ஐ.எம். சுஹைல்...?

Comments