சீன- அமெரிக்க உறவானது இரு துருவ அரசியல் வடிவத்தை நோக்கியதாக மாறிவருகிறது. வரத்தகப் போரில் ஆரம்பித்து படிப்படியாக அரசியலிலும் இராணுவத்திலும் இராஜதந்திரத்திலும் அத்தகைய மோதல் வலுத்துவருகிறது. தவிர்க்க முடியாது இரு அணிகளை உருவாக்கும் உத்தியில் இரு அரசுகளும் செயல்பட ஆரம்பித்துள்ளன. அதில் அமெரிக்காவைக் காட்டிலும் சீனாவே முதன்மையான போக்கினை கொண்டு இயங்குகிறதை அவதானிக்க முடிகிறது. சீனா கொரனோவுக்கு பின்பான உலக ஒழுங்கை தனித்த நிா்வகிக்க திட்டமிட்ட போதும் ஐரோப்பாவும் அமெரிக்காவும் அதற்கான உத்திகளை முறியடித்து வருவதனால் உடனடியாக இரு துருவ உலக ஒழுங்கையாவது நிலைநிறுத்தும் நோக்கில் சீனா இயங்க ஆரம்பித்துள்ளது. சீனாவின் நகர்வுகளுக்கு அமெரிக்கா வாய்ப்புக்களை வழங்குவது போலவே சமகாலப் போக்கு காணப்படுகிறது. இக்கட்டுரையும் இரு சக்திகளதும் போக்கினை தேடுவதாக அமையவுள்ளது.
முதலில் சீனாவின் அமெரிக்கா மீதான குற்றச்சாட்டினை நோக்குவது பொருத்தமானது. சர்வதேச ஒழுங்கு மற்றும் உலக அமைதிக்கு அமெரிக்கா மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக சீன இராணுவம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. இது பற்றி சீன இராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வு கியான் கூறுகையில் பிராந்திய அமைதியின்மையைத் தூண்டுவது சர்வதேச ஒழுங்கை மீறுவது உலக அமைதியை அழிப்பது அமெரிக்கா தான் என்பதை பல ஆண்டுகளாக வெளிவந்துள்ள சான்றுகள் காட்டுகின்றன. கடந்த இருபது ஆண்டுகளாக ஈராக் சிரியா லிபியா மற்றும் ஏனைய நாடுகளில் அமெரிக்காவின் நடவடிக்கையினால் எட்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதோடு கோடிக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். தன்னைப்பற்றி சிந்திப்பதற்கு பதிலாக அமெரிக்கா சீனாவின் இயல்பான பாதுகாப்பு மற்றும் இராணுவக் கட்டுமானம் பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டு வருகிறது
அண்மையில் சீனாவின் இராணுவ வெளியுறவு மற்றும் பொருளாதாரம் தொடர்பில் பென்டகன் காங்கிரஸுக்கு வழங்கிய அறிக்கை தொடர்பிலேயே இத்தகைய கருத்தினை சீன இராணுவம் வெளிப்படுத்தியிருந்தது. அது மட்டுமன்றி சீனாவிலுள்ள அனைத்து இராஜதந்திரிகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என சீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு சீனா கூறும் காரணம் அமெரிக்கா சீன இராஜதந்திரிகள் மீது விதித்த கட்டுப்பாடுகளுக்கு பதிலளிப்பதாகவும் அமெரிக்காவின் அந் நடவடிக்கைகளை விலக்கிக் கொள்ள அழுத்தம் கொடுப்பதாகவுமே அமையும் எனத் தெரிவித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் தடைகள் அதிகம் சீனாவுக்கு நெருக்கடியானதாக அமைந்திருப்பதுடன் இரு நாடுகளுக்குமான உறவின் முழுமையும் பாதிக்க கூடியதாக அமைந்துள்ளதேயாகும். அதாவது அமெரிக்காவிலுள்ள சீனத் துாதரக அதிகாரிகள் அங்குள்ள பல்கலைக்கழகங்களுக்கு வருகைதர முன் அனுமதி பெறவேண்டும் எனவும் கலாசார நிகழ்வுகளுக்காக 50மேற்பட்டவர்கள் ஒன்று கூடுவதற்கு முன்அனுமதி பெறவேண்டும் எனவும் உள்ளூர் அதிகாரிகளுடனான சந்திப்புகளை முன்அனுமதி பெற்றே நடாத்த வேண்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
இது மட்டுமன்றி அமெரிக்கத் தரப்பு சீனாவுக்கு எதிரான ஆசிய அணியொன்றை உருவாக்குவதில் முனைப்புக் கொண்டு செயல்படுகிறது. குறிப்பாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மைக் பாம்பியோ சீனாவின் அத்துமீறிய நடவடிக்கைக்கு எதிரான ஆசிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தென்சீனக் கடல் பகுதியில் செயற்கைத் தீவுகளை அமைத்துவரும் 24நிறுவனங்களை அமெரிக்கா தடை செய்தமையை அடுத்து ஆசிய நாடுகள் அந்த நிறுவனங்களுடன் உறவினை முறித்துக் கொள்ள வேண்டும் என பாம்பியோ இணைய வழி உரையாடல் மூலம் 10க்கும் மேற்பட்ட தென்கிழக்காசிய நாடுகளிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும் போது சீனக் கம்யூனிஸக்கட்சி நம்மையும் நம் மக்களையும் மிதித்து செல்ல அனுமதிக்காதீர் என தெரிவித்தார். ஆனால் அமெரிக்காவின் கோரிக்கையை முன்கூட்டியே நிராகரித்த பிலிஸ்பைன்ஸ் சீனாவின் முதலீகள் தமக்கு அவசியமானவை என்பதை வலியுறுத்தியுள்ளது.
எனவே இரு தரப்பு முரண்பாடுகளை நோக்கும் போது பரஸ்பரம் மோதல் போக்குக்கான ஆரம்பமாக தெரிகிறதா என்று எண்ணம் தோன்றுகிறது. மாறாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் சீனாவை சீண்டுவதன் மூலம் ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டுள்ளதா என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும். காரணம் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான கோசங்களை முதன்மைப்படுத்திவிட்டு ஆட்சியில் அமர்ந்ததும் சீனாவுடனான நட்பினை பேணுவதில் கரிசனை கொண்டவராக ட்ரம்ப் காணப்பட்டார். அதனாலேயே அதற்கான வாய்ப்புப் பற்றிய உரையாடல் பொதுத் தளத்தில் ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் புதிதாக ஜனாதிபதியாக ஜோ பிடன் தேர்ந்தெடுக்கப்பட்டால் நிலைமை சீனாவுக்கு எதிரானதாக அமைய வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டாலும் நடைமுறையில் ஜனநாயகக் கட்சியின் போக்கு தந்திரோபாய ரீதியானதாக அமைய வாய்ப்புள்ளது. அதனை அடிப்படையாக் கொண்டு பார்க்கும் போது சீனாவுடனான உறவு சுமூகமடைய வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. ஆனால் அது ஆபத்துமிக்கதாக அமைய வாய்ப்புள்ளது. ஆனால் சீனா அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு முன்பே இருதுருவ உலக ஒழுங்கை நிறுவ அதிகம் விரும்புகிறது. அல்லது ட்ரம்ப்ன் இரண்டாவது ஆட்சிக்காலத்தை சாத்தியப்படுத்த விரும்புகிறது. அதனால் அதிக அமெரிக்க எதிர்ப்புவாதத்தை வெளிப்படுத்துகிறது.
வெளிப்படையாகப் பார்க்கும் ேபாது இரு நாடுகளும் மோதிக் கொண்டாலும் அடிப்படையில் ஆட்சியாளரதும் தேசங்களதும் நலன்கள் சாத்தியமான வழிமுறைக்கூடாக நகர்த்தப்படுகிறது. அதில் அமெரிக்க ஆட்சியாளர்களைப் போல் அல்லாது சீனர்கள் ட்ரம்ப்பின் நெருக்கடியான காலத்தை பயன்படுத்திக் கொண்டு சீனாவின் நலன்களை நிறைவு செய்வதில் வெற்றி கண்டுவருகின்றன. சீனப் பொருளாதாரம் வளர்ச்சிப் போக்கினை எட்டியுள்ளமையும் இராணுவ ரீதியில் இந்தியாவைக் கையாளுவதுடன் நின்றுவிடாது தென் சீனக்கடல் பகுதியை ஆதிக்கம் செய்வதுடன் விண்வெளியிலும் கணிசமான மாற்றங்களை நகர்த்தி வருகிறது. குறிப்பாக அண்மையில் 09செயற்கைக் கோள்களை ஒரு கப்பலிலிருந்து சீனா வெற்றிகரமாக ஏவியது. இவ்வாறு பல மாற்றங்களை எட்டிவரும் சீனா அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் மோதாது செயல்படுவதுடன் ஒரு கொதிநிலை அரசியலை அரங்கேற்றி வருகிறது. அது ஏறக்குறைய பனிப்போர்க்காலச் சூழலை நினைவுகொள்வதாக தெரிகிறது. அது தெளிவான பனிப்போராக அமையாது விட்டாலும் இரு தரப்புக்குமான இரு துரவ அரசியலுக்கான ஆரம்பமாகவே தெரிகிறது.
எனவே அமெரிக்க சீன முரண்பாடு வெளிப்படையாக இருதுருவ அரசியலை நோக்கியதாக அமைந்துள்ளது. அதில் அமெரிக்காவை விட சீனாவே அதிகம் முனைப்புக் கொண்டதாக தெரிகிறது. சீனாவுக்கு உடனடியாக இல்லாது விட்டாலும் எதிர்காலத்தில் ஒரு இரு துரவ அரசியல் ஒழுங்கு தேவைப்படுகிறது. அதன் பொருளாதார பாய்ச்சலும் இராணுவ வலிமையும் உலகை ஆதிக்கம் செய்வதற்கு முன்பான ஒத்திகையாக இருதுருவ உலக ஒழுங்கினை கருதுகிறது. அதனை நோக்கி சீனா பயணிப்பது போன்றே அமெரிக்காவும் காணப்படுகிறது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலே அதன் முடிவை வெளிப்படுத்தக் கூடியதாக அமையும்.
கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்