சமகால சர்வதேச அரசியலில் மேற்காசியா மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியைத் தந்துள்ளது. கடந்த 22.11.2020 அன்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தென்யாகு சவுதி அரேபியாவிற்கு மேற்கொண்ட இரகசிய இராஜதந்திர விஜயம் சர்வதேச மட்டத்திலும் பிராந்திய மட்டத்திலும் அதிக முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மைக் பாம்பியோ சவுதி அரேபியாவுக்கு விஜயம் செய்த போதே இத்தகைய இரகசிய நகர்வு குறித்து தெரிய வந்துள்ளது. ஈரானிய ஆதரவு பெற்ற சவுதி அரேபியாவின் கிளர்ச்சிக் குழு சவுதி அரேபிய விமான நிலையம் மீது நிகழ்த்திய ஏவுகணைத் தாக்குதலில் இருந்து இச் செய்தி உலகத்தின் கண்களில் அகப்பட்டுள்ளது.
இத்தகைய இராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்றை இஸ்ரேலியப் பிரதமரும் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளரும் மேற்கொண்டதன் நோக்கத்தை விளங்கிக் கொள்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
மூன்று நாடுகளின் தலைவர்களது சந்திப்பும் அதிக சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஈரான் மீதான தாக்குதல் ஒன்றினை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் திட்டமிட்டதாகவும் அதனை மீள முன்னெடுக்க அவர் முயலலாம் என்ற தகவல்களும் முதலில் வெளியானது. அதே நேரம் சவுதி அரேபியா ஈரானின் நடவடிக்கைக்கு எதிராக பிராந்திய அரசுகளை ஒன்றிணையுமாறு கேட்டுக் கொண்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் அதற்கான முக்கியத்துவத்தை காட்டிலும் இஸ்ரேலின் இருப்பு சார்ந்த நெருக்கடிக்கான சூழல் ஒன்றை எதிர் கொள்வதாகவே தெரிகிறது. அதனை மிகத் தெளிவாக நோக்குவது அவசியமானது.
ஒன்று, அமெரிக்க ஆட்சித் துறையில் குடியரசுக் கட்சி தோற்கடிக்கப்பட்டு ஜனநாயகக் கட்சி ஆட்சியில் அமர்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றது. ஜனநாயகக் கட்சியின் வெற்றியாளர் ஜோ பைடன் பராக் ஒபாமாவின் கொள்கைகளை மீளக் கட்டியெழுப்புவார் என்ற அச்சம் யூதர்களிடம் எழுந்துள்ளது. டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக் காலப் பகுதியில் இஸ்ரேலின் இருப்பு மேற்காசியாவில் மட்டுமல்ல உலகளவிலும் முதன்மையாகவும் பலமாகவும் அமைந்திருந்தது. இக்காலப் பகுதியில் இஸ்ரேல் மேற்காசியா மற்றும் இஸ்லாமிய நாடுகளோடு உறவு வைத்துக் கொள்வதற்கு அமெரிக்கா முக்கிய பங்கு ஆற்றியிருந்தது. இதனால் ட்ரம்பினுடைய தோல்வி இஸ்ரேலின் எதிர்காலத்திற்கான நெருக்கடியாக அமைந்துவிடும் என்பதனால் அதனைக் கையாளுவதற்கு இரு தரப்பும் நகர ஆரம்பித்துள்ளது.
அதன் ஒரு கட்டமாகவே சவுதி அரேபியாவுடன் இஸ்ரேலின் உறவைப் பலப்படுத்த அமெரிக்கா பின்புலத்தில் செயல்பட்டு வருகின்றது. இவ்வாறே கடந்த காலத்திலும் சூடான், பஹ்ரேன், ஐக்கிய எமிரேட் போன்ற நாடுகளோடு இஸ்ரேலின் உறவை அமெரிக்கா வலுப்படுத்தியுள்ளது. ட்ரம்பின் ஆட்சிக் காலப் பகுதி அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது. பராக் ஒபாமாவின் காலப்பகுதி இஸ்ரேலுக்கு அவ்வாறானதொன்றாக அமையவில்லை என்பதை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
இரண்டு, மேற்காசிய அரசியலில் ஈரானின் எழுச்சி படிப்படியாக வலுவடைந்து வருகிறது. குறிப்பாக அணுவாயுத விவகாரங்களில் அமெரிக்காவை ஈரான் கையாண்ட விதமும், நிலத்தின் கீழ் பகுதியை சுரங்கங்களை அமைத்து அணுவாயுத பரிசோதனைக்குரிய பூர்வாங்க வேலைகளை ஈரான் மேற்கொண்டு வருகின்றதாகவும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இதனை ஏதோவொரு வழியில் அழித்து விட இஸ்ரேலும் அமெரிக்காவும் மேற்கொண்ட முயற்சி நெருக்கடிக்குள்ளானதன் பிரதிபலிப்பு பிராந்திய அரசுகளோடு குறிப்பாக, ஈரானுக்கு எதிரான அரசுகளோடு ஒன்றிணைந்து ஈரானை எதிர்க்க அமெரிக்க, இஸ்ரேலியக் கூட்டு திட்டமிடுகிறது. அதில் ஒரு அங்கமாகவே சவுதியுடனான இஸ்ரேலிய இராஜதந்திர உறவு அமைந்துள்ளது. ஈரானின் அணுவாயுதம் இஸ்ரேலின் இருப்பினை எவ்வாறு கையாளும் என்பதில் உள்ள அச்சம் தவிர்க்க முடியாததாகும்.
மூன்று, இத்தகைய நகர்வு இஸ்லாமியர்களிடம் நிலவும் சியா, சுன்னி முஸ்லிம் என்ற முரண்பாட்டினை தீவிரப்படுத்தவும் அதனூடான ஒரு பகைமையை வலுப்படுத்தவும் இஸ்ரேல், அமெரிக்கக் கூட்டு திட்டமிடுகிறது. குறிப்பாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரேன், சூடான் போன்ற நாடுகளில் சுன்னி முஸ்லிம்களே பெரும்பான்மையாகவும் ஆளும் வர்க்கமாகவும் காணப்படுகின்றனர். ஈரான் சியா முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடாகும். ஏறக்குறைய 92% ஆனவர்கள் சியா முஸ்லிம்களாக விளங்குகின்றனர். இதனால் ஈரானை எதிர்த்தல் என்ற விடயத்தில் இஸ்லாமிய நாடுகளை சியா, சுன்னி முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தி ஒரு நீண்ட நிலையான மோதலுக்கூடாக குடியேற்றவாத அரசியல் மரபொன்றை ஏற்படுத்த அமெரிக்க, இஸ்ரேல் கூட்டு திட்டமிடுகின்றது. அமெரிக்கா ஏற்கனவே வளைகுடா யுத்தத்திலும் அரபு வசந்தத்தின் மூலமான ஆட்சிக் கவிழ்ப்புக்களிலும் அத்தகைய சியா, சுன்னி முஸ்லிம் முரண்பாட்டை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
நான்காவது, இஸ்ரேல் அமெரிக்கக் கூட்டின் உத்தியானது பலஸ்தீன நிலப்பரப்பு சார்ந்தும் அதன் தனிநாட்டுக் கோரிக்கையையும் முற்றாக தகர்த்து அழிக்கின்ற நடைமுறையை பின்பற்ற முயலுகின்றதைக் காணலாம். காரணம் பலஸ்தீன விடுதலைப் போராட்ட அமைப்புக்கும் அவற்றின் இராணுவ, பொருளாதார தேவைகளுக்குமான நிதியினை சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளே அதிகம் வழங்கி வருகின்றன. அத்தகைய நிதி மூலங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்படும் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களும் யூதர்களுக்கெதிரான நகர்வுகளும் அந்நாடுகளுடனான இஸ்ரேலின் இராஜதந்திர உறவுகள் மூலம் முடிவுக்குக் கொண்டு வரலாம் என இஸ்ரேல் கருதுகின்றது. பலஸ்தீனர் அதிகம் வாழும் காஸா, ஜெரிக்கோ பகுதியில் யூத குடியேற்றங்களை மேற்கொள்ள அங்கீகரிக்க இத்தகைய இராஜதந்திர உறவுகள் உதவும் என்று இஸ்ரேல் கருதுகின்றது. பொருளாதார, விஞ்ஞான, தொழிநுட்ப ரீதியில் அரபு நாடுகளோடு இஸ்ரேல் உறவு வைத்துக் கொள்வதன் மூலம் பலஸ்தீனம் தொடர்பாக அந்த நாடுகளிடம் காணப்பட்டிருக்கும் கருத்து நிலையை மாற்ற முடியும் என இஸ்ரேல் கருதுகின்றது. நெத்தென்யாகு, சல்மான் சந்திப்பிற்குப் பின்னால் சவுதி அரேபியா தனது பிரஜைகளுக்கு இலவசமாக கொரோனாவுக்கெதிரான தடுப்பு மருந்தை வழங்கப் போவதாக அறிவித்தது. அத்தகைய அறிவிப்புக்குப் பின்னால் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு விளங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐந்து, இஸ்ரேலின் நகர்வுகள் ஒவ்வொன்றும் மேற்காசியாவிலும் உலகளாவிய ரீதியிலும் யூதர்களையும் அவர்களது நிலப்பரப்பையும் தற்பாதுகாத்துக் கொள்வதற்கான உத்தியாகவே தெரிகின்றது. காரணம் மேற்காசியாவில் மட்டுமன்றி உலகளாவிய அரசியலில் சீனா மற்றும் ரஷ்யாவின் எழுச்சி கொவிட் 19க்குப் பின்னர் அதீதமாக வளர்ந்துள்ளது. அமெரிக்காவின் செல்வாக்கிற்குள் இருந்த மேற்காசியாவை ரஷ்யா கையாண்டது போல் இந்தோ-, பசுபிக் பிராந்தியத்தை சீனா கையாண்டு பொருளாதார ரீதியில் தனது செல்வாக்கை வலுப்படுத்தியுள்ளது. பராக் ஒபாமா தனது ஆட்சிக் காலம் பற்றி எழுதிய ”A Promised Land” என்ற நூலில் 2009களில் உலக நிறுவனங்களையும் அவற்றின் தீர்மானங்களையும் தீர்மானிக்கும் நாடுகளாக சீனா, ரஷ்யா எழுச்சி பெற்று விட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். அதில் இருந்து கொண்டு யூதர்கள் அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு இஸ்ரேலின் தற்பாதுகாப்பை உறுதிப்புடுத்துவதற்காக இஸ்லாமிய நாடுகளோடு நட்புறவினை ஏற்படுத்தத் திட்டமிடுகின்றனர். இத்தகைய நகர்வுகளை இராணுவ ரீதியான பாதுகாப்பாக மட்டும் கருதாது விஞ்ஞான, பொருளாதார ரீதியில் உத்தரவாதப்படுத்திக் கொள்ள முனைந்துள்ளது.
எனவே நெத்தென்யாகுவின் சவுதி அரேபியாவுடனான உறவானது இராஜதந்திர ரீதியானதாகவே விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். தற்போதைய அமெரிக்க ஆட்சித் துறையினை முன்னிறுத்திக் கொண்டு இஸ்ரேலின் இருப்பையும் பாதுகாப்பையும் பலப்படுத்த இஸ்ரேல் திட்டமிடுகின்றது. இதன் விளைவாக பிராந்திய அரசுகளை இஸ்ரேல் ஈர்த்துக் கொள்வதும் ஈரானின் எழுச்சியைத் தடுத்துக் கொள்வதும் ரஷ்ய, சீன, ஈரானிய கூட்டுக்குப் பதிலாக அணியொன்றை உருவாக்குவதிலும் இஸ்ரேல் வெற்றிகரமான அணுகுமுறைகளைப் பின்பற்றி வருகின்றது. எனவே கொவிட் நெருக்கடிக்குள்ளும் இஸ்ரேல் தனது தற்பாதுகாப்பை வலுவானதொன்றாக மாற்றுவதில் வெற்றி கண்டுள்ளது. அதே நேரத்தில் ஈரானின் எழுச்சி மேற்காசிய அரசியலில் புதிய பரிமாணம் ஒன்றுக்கான வடிவம் என்பதை இஸ்ரேல் அமெரிக்க அணுகுமுறை மறைமுகமாக வெளிப்படுத்தி உள்ளது.
கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்