இலங்கை கிரிக்கெட் வரலாற்றின் புதிய அத்தியாயமான அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 தொடர் பல தடைகள். பல சவால்களுக்கு மத்தியில் வியாழக்கிழமை (26) மாலை கோலாகலமாக ஆரம்பமாகியது.
இலங்கை கிரிக்கெட்டின் மகத்துவத்தை உலகறியச் செய்யும் வகையில் நடைபெற்ற ஆரம்ப விழாவானது ஒன்லைன் வாயிலாக இடம்பெற்றதுடன், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதில் பங்குகொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அத்துடன், பெரிதாக்கப்பட்ட மற்றும் மெய்நிகர் ரியாலிட்டி தொழில்நுட்பங்கள் இதன்போது பயன்படுத்தப்பட்டதுடன், இலங்கையின் கலாசாரம், பாரம்பரியம், பொழுதுபோக்கு மற்றும் மிக முக்கியமாக இலங்கை கிரிக்கெட்டின் முக்கியமான சாதனைகள் உள்ளிட்ட பதிவுகள் இதன்போது இரசிகர்களின் கண்களுங்கு விருந்தாக வழங்கப்பட்டன.
கொழும்பு கிங்ஸ், கண்டி டஸ்கர்ஸ், தம்புள்ள வைக்கிங், காலி க்ளேடியேட்டர்ஸ் மற்றும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் ஆகிய ஐந்து அணிகள் பங்குபற்றும் இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும் ஹம்பாந்தோட்டை, சூரியவௌ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கையின் கொவிட்-19 வைரஸின் தாக்கம் மீண்டும் தலைதூக்கினாலும், இலங்கை அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சின் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெறுகின்ற லங்கா ப்ரீமியர் லீக்கில் 75 உள்ளூர் வீரர்களும், 35 வெளிநாட்டு வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.
இந்தத் தொடரில் வெற்றிபெறும் அணிக்கு 80 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பணப்பரிசாக வழங்கப்படவுள்ளது. இது இலங்கை பணப்பெறுமதியில் ஒன்றரை கோடி ரூபாவாகும்.
அத்துடன், இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொள்கின்ற அணிக்கு 50 ஆயிரம் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளது. இது இலங்கை பணப்பெறுமதியில் ஒரு கோடி ரூபாவாகும்.
இதனையடுத்து போட்டிகளின் முதல் நாள் இரவு 8.00 மணிக்கு நடைபெற்ற முதலாவது போட்டியில் அஞ்சலோ மெதிவ்ஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணியும், குசல் ஜனித் பெரேரா தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இதில் அஞ்சலோ மெதிவ்ஸின் மதிநுட்பமான கேப்டன்சிப், தினேஸ் சந்திமாலின் அபார அரைச்சதம் மற்றும் இசுரு உதானவின் கடைசி நேர அதிரடியால் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற அங்குரார்ப்பண எல்பிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் கண்டி டஸ்கர்ஸ் அணியை சுப்பர் ஓவரில் 4 ஓட்டங்களினால் வீழ்த்தி கொழும்பு கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதுஇவ்வாறிருக்க, ஒரு அணிக்கு 22 வீரர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்ட இந்தப் போட்டித் தொடரில் இலங்கையின் தமிழ் பேசுகின்ற ஏழு வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
இதில் மூவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாகவும், கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் கண்டியைச் சேர்ந்த தலா ஒவ்வொரு வீரரும் இடம்பிடித்திருக்கின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
விஜயகாந்த் வியாஸ்காந்த்
இந்த வருடம் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமரில் யாழ். மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்ட விஜயகாந்த் வியாஸ்காந்த் திசர பெரேரா தலைமையிலான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் உத்தேச குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.
வலதுகை சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரான வியாஸ்காந்த், 2018இல் நடைபெற்ற வடக்கின் சமர் தொடரில் சிறப்பாக செயற்பட்டு தமது பாடசாலையான யாழ். மத்திய கல்லூரி அணி சம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
அதன் பின்னர் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட மாகாண அணிகளுக்கு இடையில் இலங்கை கிரிக்கெட் ஒழுங்கு செய்திருந்த கிரிக்கெட் தொடரிலும் வட மாகாணம் சார்பில் பிரகாசித்திருந்தார்.
இதனால், 2018இல் இந்திய 19 வயதுக்குட்பட்ட அணியுடன் நடைபெற்ற நான்கு நாள் போட்டியில் இலங்கை அணியில் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டார்.
இது 36 ஆண்டுகளின் பின்னர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியொன்றில் வட மாகாண வீரர் ஒருவர் இடம்பெற்ற முதல் சந்தர்ப்பமாக இருந்தது.
அத்தொடரின் முதலாவது போட்டியில் வியாஸ்காந்த் விளையாடாவிட்டாலும், இரண்டாவது போட்டியில் விளையாடி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த இந்திய அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கானதும் இளையோர் ஆசியக் கிண்ணத்துக்கானதுமான தயார்நிலை வீரர்களில் வியாஸ்காந்த் இடம்பிடித்திருந்தார்.
இதனையடுத்து இலங்கை, பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிகளுக்கிடையிலான இரண்டு நான்கு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இலங்கைக் குழாத்திலும் விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பிடித்தார்.
அதன்பிறகு கடந்த வருடம் ஜனவரி மாதம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணியில் இடம்பிடித்து விளையாடிய அவர், ஒரு விக்கெட்டினை எடுத்தார்.
இதுஇவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் கடந்த வருடம் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 19 வயதுக்குட்பட்டோருக்கான 'சுப்பர் ப்ரொவென்ஷியல்' கிரிக்கெட் போட்டித் தொடரில் தம்புள்ளை அணியை அவர் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். இதேவேளை, இந்த வருடம் நடைபெற்ற வடக்கின் மாபெரும் சமரில் யாழ். மத்திய கல்லூரியின் தலைவராக வியாஸ்காந்த் செயற்பட்டார்.
எனவே இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ள வியாஸ்காந்த், இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடுவார் என அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்
தெய்வேந்திரம் டினோஷன்
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இதில் இந்த வருடம் நடைபெற்ற வடக்கின் மாபெரும் சமரில் யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரி கிரிக்கெட் அணியின் உதவித் தலைவராக தெய்வேந்திரம் டினோஷன் ஜப்னா அணியில் இடம்பெற்றுள்ளார். குறித்த போட்டியில் துடுப்பாட்டத்தில் 44 ஓட்டங்களைக் குவித்த அவர், பந்துவீச்சில் 6 விக்கெட்டுக்களையும் எடுத்து சிறந்த சகலதுறை வீரருக்கான விருதினை தட்டிச் சென்றார்.
வலதுகை மித வேகப்பந்துவீச்சாளரான இவர், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் கடந்த வருடம் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 19 வயதுக்குட்பட்டோருக்கான 'சுப்பர் ப்ரொவென்ஷியல்' கிரிக்கெட் போட்டித் தொடரில் தம்புள்ளை அணியை அவர் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
முன்னதாக 2018இல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாகாணங்களுக்கிடையிலான போட்டித் தொடரில் வட மத்திய மாகாண அணிக்காக விளையாடிய அவர், அரைச்சதம் அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனகரட்னம் கபில்ராஜ்
2017இல் நடைபெற்ற வடக்கின் மாபெரும் சமரில் 10 விக்கெட் குவியலைப் பதிவு செய்து யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்த கனகரட்னம் கபில்ராஜ் இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
வலதுகை வேகப்பந்துவீச்சாளரான இவர், 2017 மற்றும் 2018 ஆகிய வருடங்களில் நடைபெற்ற வடக்கின் சமரில் தலா 10 விக்கெட்டுக்கள் எடுத்து போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதினை இரண்டு தடவைகள் தட்டிச் சென்றார். இதனிடையே, கடந்த வருடம் இலங்கையின் மிகவும் பழைமை வாய்ந்த கிரிக்கெட் கழகங்களில் ஒன்றான தமிழ் யூனியன் கழகங்களில் இணைந்துகொண்ட அவர். அந்த கழகத்தின் 23 வயதுக்குபட்ட பிரிவில் விளையாடி இருந்தார்.
எனினும், அவர் இந்த வருடத்திலிருந்து அவர் பொலிஸ் கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரட்னராஜா தேனுரதன்
இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களின் பங்கேற்புடன் அண்மையில் நிறைவுக்கு வந்த இராணுவ தளபதி இருபதுக்கு 20 லீக் தொடரில் களத்தடுப்பில் அபாரமாக செயற்பட்டு அனைவரது கவனத்தையும் பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் முன்னாள் வீரர் ரட்னராஜா தேனுரதன் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் முதல்தடவையாக சேர்க்கப்பட்டுள்ளார்.
வலதுகை வேகப்பந்துவீச்சாளரான இவர், குறித்த தொடரில் சிறந்த களத்தடுப்பாளருக்கான விருதினையும் தட்டிச் சென்றார்.
செபஸ்தியன்புள்ளை விஜயராஜ்
இலங்கை அணியின் நட்சத்திர வீரரான லசித் மாலிங்கவின் பாணியில் பந்துவீசுகின்ற கிளிநொச்சியைச் சேர்ந்த செபஸ்தியன்புள்ளை விஜயராஜ் முதல்முறையாக தேசிய மட்ட போட்டியொன்றில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி எக்ஸ்பிரஸ் என்றiழைக்ப்படுகின்ற இவர், தளது கிராமத்தில் இடம்பெறுகின்ற மென்பந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதன்காரணமாக இலங்கை தேர்வுக்குழுவின் அப்போதைய தலைவராக இருந்த சனத் ஜயசூரியவின் அழைப்பின் பேரில் அவ்வப்போது இலங்கை வீரர்களுக்காக இடம்பெற்ற ஒருசில வலைப்பயிற்சிகளில் கலந்துகொண்டார். எனினும், அவரால் தேசிய ரீதியில் எந்தவொரு கழகத்துக்காவும் விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்கிவில்லை.
எனவே, இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் வலைப்பந்துவீச்சாளராக விஜயராஸ் இடம்பெற்றாலும், அந்த அணிக்காக ஒரு போட்டியிலாவது விளையாடி தனது திறமையை முழு உலகிற்கும் காண்பிக்கும் நோக்கத்துடன் உள்ளார்.
டெஹான் ஷாப்டர்
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் புதிதாக இணைக்கப்பட்ட அடுத்த வீரராக கல்கிஸ்ஸை புனித தோமையர் கல்லூரியின் முன்னாள் வீரரான டெஹான் ஷாப்டர் உள்ளார். பாடசாலை மட்ட கிரிக்கெட் போட்டிகளில் வேகப்பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட இவர், இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் வலைபந்துவீச்சாளராக இணைந்துக்கொண்டுள்ளார். இவர் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சன்ந்ரா ஷாப்டரின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
மொஹமட் சிராஸ்
இதேவேளை, இலங்கை கிரிக்கெட்டில் அண்மைக்காலமாக அனைவராலும் பேசப்பட்டு வருகின்ற இளம் வேகப்பந்துவீச்சாளரும், கட்கஸ்தோட்டை மதீனா தேசிய பாடசாலையின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான மொஹமட் சிராஸ், சஹீட் அப்ரிடி தலைமையிலான காலி கிளாடியேட்டர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். வலதுகை மித வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் சிராஸ் முதல்தர கிரிக்கெட் போட்டியில் பி.ஆர்.சி கழகத்துக்காக விளையாடி வருகின்றார். அத்துடன், உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் வெளிப்படுத்திய திறமை காரணமாக கடந்த வருடம் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பிடித்திருந்தாலும், இறுதி பதினொருவர் அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
எதுஎவ்வாறாயினும், இறுதியாக நடைபெற்ற இலங்கையின் கழகங்களுக்கிடையிலான முதல்தரப் போட்டியில் 14 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே, இலங்கை வீரர்கள் மற்றும் முன்னணி வெளிநாட்டு நட்சத்திர வீரர்களுடன் இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுக்கெண்டுள்ள அனைத்து தமிழ் பேசுகின்ற வீரர்களுக்கும் எதிர்காலத்தில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பீ.எப். மொஹமட்