![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/12/06/a28.jpg?itok=WE_YRIX4)
இலங்கை கிரிக்கெட் சபையினால் முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லங்கா ப்ரீமியர் லீக் தொடர் வெற்றிகரமாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருவதுடன், இதில் முதல் பாதி ஆட்டங்கள் நிறைவுக்கு வந்துவிட்டன.
முன்னதாக, இந்தப் போட்டித் தொடரை தம்புள்ள மற்றும் கண்டி ஆகிய இடங்களிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட போதிலும், கொரோனா பாதுகாப்பு காரணங்கள் கருதி ஹம்பாந்தோட்டையில் மாத்திரம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் தம்புள்ள வைகிங் அணிகள் இந்த தொடரில் மிக முக்கியமான அணிகளாக உருவெடுத்து உள்ளது. இரண்டு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளது.
இந்த இரண்டு அணிகளில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றிகளைப் பெற்றுக்கொண்டுள்ள ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி, இன்னுமொரு வெற்றியைப் பெற்றுக்கொண்டால் அரையிறுதிக்கு செல்வது உறுதியாகிவிடும்.
மூன்றாவது இடத்தில் கொழும்பு கிங்ஸ் அணியும், 4ஆவது மற்றும் 5ஆவது இடங்களில் முறையே கண்டி டஸ்கர்ஸ் மற்றும் கோல் க்ளேடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் உள்ளன.
மொத்தம் 23 போட்டிகள் கொண்ட எல்.பி.எல் தொடரில் 10 லீக் போட்டிகள் முடிந்துவிட்டன. மறுபுறத்தில் பெரும்பாலான அணிகள் தலா 5 போட்டிகளை விளையாடி முதல் பாதியை முடித்துள்ளனர்.
இதில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்கவும், அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரராக கண்டி டஸ்கர்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சளரான நவீன் உல் ஹக்கும் இடம்பெற்றுள்ளனர்.
கொவிட் - 19 வைரஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகின்ற இம்முறை எல்.பி.எல் தொடரில் இதுவரை இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் மற்றும் சர்ச்சைகள் என்னென்ன என்பது பற்றிய தொகுப்பை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
இர்பான் பதானின் உபாதை
இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் மற்றும் கொழும்பு கிங்ஸ் அணிகள் மோதின.
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இந்தப் போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் அணியை எதிர்கொண்ட கொழும்பு கிங்ஸ் அணி த்ரில் வெற்றியை பதிவுசெய்தது.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இரண்டு அணிகளும் அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தலா 219 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, சுப்பர் ஓவரின் மூலம் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றியை பதிவுசெய்தது.
குறித்த போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய அணியின் முன்னாள் சகலதுறை வீரரான இர்பான் பதான் உபாதைக்குள்ளாகினார்.
குறித்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டாவது ஓவரை வீசிய இர்பான் பதான் தொடைப்பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக மைதானத்திலிருந்து வெளியேறினார்.
குறித்த போட்டியின் பிறகு கண்டி டஸ்கர்ஸ் அணி வினையாடிய நான்கு போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. மீண்டும் அவர் அணியில் இடம்பெறுவாரா என்பது குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
சதீர உள்ளே..! ஓசத வெளியே..!
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்று வருகின்ற அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடி வருகின்ற இலங்கை அணியின் முன்னணி வீரர்களான ஓசத பெர்னாண்டோ, கண்டி டஸ்கர்ஸ் அணியுடன் நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தின் போது உபாதைக்குள்ளானார்.
குறித்த போட்டியில் தம்புள்ள வைகிங் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதில் தம்புள்ள அணிக்காக நிரோஷன் டிக்வெல்லவுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய ஓசத பெர்னாண்டோ, போட்டியின் 3ஆவது ஓவரின் நான்காவது பந்தில் சிக்ஸர் ஒன்றை பந்துவீச்சாளரின் தலைக்கு நேராக அடித்தார்.
எனினும், அடுத்த பந்தில் ஒரு ஓட்டத்தை எடுக்க முற்பட்ட போது கால் தடுக்கி கீழே விழுந்தார். கணுக்கால் சுளுக்கியதால் மைதானத்தில் வைத்து மிகவும் வேதனைக்குள்ளாகிய அவர், உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இதனையடுத்து ஓசத பெர்னாண்டோவுக்கு மேற்கொள்ளப்பட்ட எம்.ஆர்.ஐ பரிசோதனையில் அவருக்கு ஒரு வாரம் ஓய்வு அளிக்க வேண்டும் என வைத்தியர்கள் குழு அறிவித்தது.
எனவே, ஓசதவின் உபாதையினை கருத்திற்கொண்டு பிரதியீட்டு வீரர்களில் ஒருவராகவே தம்புள்ளை அணியில் சதீர சமரவிக்ரம இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ண இலங்கை குழாத்தில் இடம்பெற்ற சதீர சமரவிக்ரம, இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்காக அறிமுகம் பெற்ற போதிலும் அவர் கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து எந்தவித சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தம்புள்ள வைகிங் அணியில் இணைந்திருக்கும் சதீர சமரவிக்ரம சுயதனிமைப்படுத்தலில் உள்ளார். சுயதனிமைப்படுத்தல் நிறைவடைந்த பின்னர் அவருக்கு தம்புள்ளை வைகிங் அணி விளையாடுகின்ற வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்தாப் அலாம் திடீர் விலகல்
லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் தம்புள்ள வைகிங் அணிக்காக விளையாடி வருகின்ற ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான அப்தாப் அலாம், தனிப்பட்ட காரணங்களுக்காக இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார்.
தம்புள்ள வைகிங் அணியில் இடம்பெற்ற 28 வயதான ஆப்கானிஸ்தானின் வலதுகை வேகப்பந்துவீச்சாளரான அப்தாப் அலாம்;, இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கின் 5ஆவது லீக் ஆட்டத்தில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கெதிராக விளையாடியிருந்தார்.
குறித்த போட்டியில் 3 ஓவர்கள் பந்துவீசிய அவர், 22 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்ததுடன், வனிந்து ஹஸரங்கவின் விக்கெட்டினை எடுத்தார்.
எதுஎவ்வாறயினும், கொழும்பு கிங்ஸ் அணிக்கெதிராக கடந்த முதலாம் திகதி நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் அப்தாப் அலாம் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக கசுன் ராஜித் விளையாடியிருந்தார்.
இந்த நிலையில். தம்புள்ள வைகிங் அணியின் ஊடகப்பிரிவு வெளியில் ஊடக அறிக்கையில், அப்தாப் அலாம் தனிப்பட்ட காரணங்களுக்கான நாடு திரும்பவுள்ளதால், தம்புள்ள வைகிங் அணியின் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அப்தாப் அலாம் தம்புள்ள அணியில் இருந்து விலகியுள்ளதால், அவருக்குப் பதிலாக பிரதியீட்டு வீரரொருவர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் இலங்கையின் உள்ளூர் வீரரொருவருக்கு தம்புள்ள வைகிங் அணியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மலிந்த புஷ்பகுமாரவிடம் விசாரணை
இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் தம்புள்ள வைகிங் அணிக்காக விளையாடி வருகின்ற சுழல்பந்துவீச்சாளரான மலிந்த புஷ்பகுமாரவிடம் ஐ.சி.சி இன் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தியிருந்ததாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
கண்டி டஸ்கர்ஸ் அணியுடன் நடைபெற்ற போட்டியில் அவர் பந்துவீசிய விதம் சந்தேகத்தை ஏற்படுத்தியதாகவும், அதன்பிறகு குறித்த விசாரணைகள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டன.
அப்ரிடி, நவீன் உல் ஹக் முறுகல்:
இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் கோல் க்ளேடியேட்டர்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் அணிகள் மோதிய 6ஆவது லீக் போட்டியின்போது சஹீட் அப்ரிடிக்கும், ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக்குக்கும் சிறிய மோதல் ஏற்பட்டது.
இந்தப் போட்டியின் 18ஆவது ஓவரில் கோல் அணிக்காக விளையாடிய பாகிஸ்தான் வீரர் மொஹமட் ஆமீருக்கும், கண்டி டஸ்கர்ஸ் அணியில் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளம் வீரரான நவீன் உல் ஹக்கிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் போட்டியின் 18-வது ஓவரை கண்டி டஸ்கர்ஸ் அணி சார்பில் நவீன் உல் ஹக் வீசிய போது அந்த ஓவரில் காலி அணியை சேர்ந்த மொஹமட் ஆமிர் பவுண்டரிக்கு விளாசினார். அப்போதே இருவருக்கும் ஒரு வாக்குவாதம் போன்று ஒரு சிறிய முறுகல் காணப்பட்டது.
இருப்பினும் போட்டிக்கு பின்னர் குறித்த இரண்டு வீரர்களும் மீண்டும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கண்டி அணி வீரர்கள் அதை தடுத்து நிறுத்தினார்கள்.
குறித்த போட்டி முடிந்த பிறகு கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் தலைவர் சஹீட் அப்ரிடி நவீன் உல்ஹக்கிடம் எச்சரிக்கை விடுக்கின்ற காணொளி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன்காரணமாக குறித்த சம்பவம் வைரலாக பரவியது.
ஆனால், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அப்ரிடி வெளியிட்டிருந்த பதிவில், இளம் வீரர்களுக்கு எனது அறிவுரை எளிதானது. இதனை யாரும் பெரிது படுத்த வேண்டாம். எங்களுக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் நல்லுறவு உள்ளது. எதிரணி வீரர்களை மதிப்பது தான் போட்டியின் அடிப்படை என தெரிவித்துள்ளார்.
நாடு திரும்பிய அப்ரிடி
இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடிவந்த கோல் க்ளடியேட்டர்ஸ் அணித் தலைவரும், சகலதுறை வீரருமான அவ்றிடி தனிப்பட்ட காரணத்துக்காக அவசரமாக நாடு திரும்பியுள்ளார். தான் நாடு திரும்புவதற்கான காரணத்தை தனது டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
'துரதிஷ்டவசமாக, தனிப்பட்ட அவசர தேவை ஒன்றை கவனிக்க வேண்டியுள்ளது. இந்த தேவையை நிறைவேற்றிய உடனேயே எல்பிஎல்லில் எனது அணியினருடன் இணைய திரும்புவேன். சகலமும் நலமாக அமையட்டும்' என தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அப்ரிடி எப்போது திரும்புவார் என்பது தெரியவரவில்லை. ஆனால் அவர் இலங்கைக்கு மீண்டும் வருகைதந்தவுடன் குறைந்தது 3 தினங்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும்.
லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஏற்கனவே 4 போட்டிகளில் தோல்வி அடைந்து கடைநிலையில் இருக்கும் கோல் க்ளடியேட்டர்ஸ் அணிக்கு அப்ரிடி இல்லாதது பெரிய இழப்பாகும். அவருக்குப் பதிலாக உதவித் தலைவர் பானுக்க ராஜபக்ஷ அணித் தலைவராக செயப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.