![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/01/03/a25.jpg?itok=wWkb0zwg)
கொவிட் - 19 வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கை மெய்வல்லுநர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்ய்பட்ட 98ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் கடந்த (29) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.
இலங்கை மெய்வல்லுநர் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 98ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் கடந்த 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றதுடன், 150 வீர, வீராங்கனைகள் இம்முறை போட்டித் தொடரில் பங்கேற்றிருந்தனர்.
அத்துடன், கடந்த காலங்களில் திறமைகளை வெளிப்படுத்திய வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த 23 தமிழ் பேசுகின்ற வீரர்கள் இம்முறை தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டுள்ளனர். இதில் 16 வீரர்களும் 7 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
கொழும்பு வரும் வெளி மாவட்ட வீரர்களுக்கு டொரிங்டனில் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் விடுதி மற்றும் சுகததாச ஹோட்டல் ஆகியவற்றில் தங்குவதற்கான வசதிகளை இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் ஏற்படுத்திக் கொடுத்தது.
எதுஎவ்வாறாயினும், கொவிட் - 19 வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் சுகாதாரப் பிரிவின் கடுமையான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் காரணமாக இம்முறை தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபெறும் வாய்ப்பை வட பகுதியைச் சேர்ந்த மெய்வல்லுநர்கள் தவறவிட்டார்கள்.
அதேபோல, கிழக்கு மாகாணத்தின் நட்சத்திர வீரர்களான மொஹமட் அஷ்ரப், மொஹமட் அசாம் மற்றும் ரஜாஸ்கான் ஆகிய மூவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இருப்பதால் அவர்களாலும் இம்முறை தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்ற முடியாது போய்விட்டது.
அண்மைக்காலமாக மைதான நிகழ்ச்சிகளில் ஒன்றான கோலூன்றிப் பாய்தலில் தேசிய ரீதியில் திறமைகளை வெளிப்படுத்திய வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஏ. புவிதரன் மற்றும் எஸ். சுகிகேரதன் ஆகிய இருவரும் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தேசிய சம்பியனான அனித்தா ஜெகதீஸ்வரன் மற்றும் என். டக்சிதா, சி. தீபிகா, சி. ஹெரினா மற்றும் வி. விசோபிதா ஆகிய ஐந்து வீராங்கனைகளும் யாழ்ப்பாணத்தில் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கொழும்புக்கு வருவதில் சிக்கல்களை எதிர்நோக்கினர்.
இதன்காரணமாக, துரதிஷ்டவசமாக இம்முறை தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை வடக்கு மாகாண வீரர்கள் இழந்தனர்.
இதுதொடர்பில், இம்முறை தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றவிருந்த ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தேசிய கனிஷ்ட சம்பியன் ஏ.புவிதரனின் பயிற்சியாளர் கணாதீபன் கருத்து தெரிவிக்கையில்,
உண்மையில் இந்த வருடத்தில் நடைபெறுகின்ற முதலாவது தேசிய மட்ட மெய்வல்லுனர் தொடர் என்பதால் எமது வீரர்கள் இதில் பங்குபற்றுவதற்கு ஆர்வத்துடன் இருந்தார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்று மீண்டும் யாழ். வருகின்ற அனைவரும் 14 நாட்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என எமது பகுதியில் சுகாதாரப் பிரிவு அறிவித்திருந்தது.
எனவே, எமது வீரர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கொழும்புக்கு அனுப்புவதை விரும்பவில்லை. அதேபோல, நாங்கள் பயிற்சியாளர்களாக பிள்ளைகளை கொழும்புக்கு அழைத்து வந்தால் தங்குமிடம் மற்றும் சாப்பாடு உள்ளிட்ட வசதிகளை தருவார்களா என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் நாங்கள் இம்முறை தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றவில்லை என அவர் தெரிவித்தார்.
இதுஇவ்வாறிருக்க, வடக்கு மாகாணத்தில் இருந்து கோலூன்றிப் பாய்தலில் தேசிய அளவில் முன்னணி வீரர்களை உருவாக்கிய கௌரவத்தைப் பெற்றுக்கொண்டுள்ள பயிற்சியாளர் சின்னையா. சுபாஸ்கரன் கருத்து தெரிவிக்கையில்,
என்னிடம் பயிற்சி பெறுகின்ற அனித்தா ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட சில பிள்ளைகளும் இம்முறை தேசிய மெய்வல்லுநரில் பங்குபற்றுவதற்கு தேர்வாகியிருந்தார்கள்.
எனினும், தற்போதுள்ள கொரோனா தொற்று காரணமாக பிள்ளைகளின் பெற்றோர்கள் கொழும்புக்கு அனுப்புவதை விரும்பவில்லை.
அதிலும், குறிப்பாக கொரோனா வைரஸ் காரணமாக நாங்கள் இதுவரை எந்தவொரு பயிற்சிகளையும் எடுக்கவில்லை. அதற்கு எங்களுக்கு பாடசாலையிலும் அனுமதி கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் இம்முறை தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை என தெரிவித்தார்.
எதுஎவ்வாறாயினும், கொவிட் - 10 வைரஸின் அச்சுறுத்தலால் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றவிருந்த வடக்கு மற்றும் கிழக்கு வீரர்களுக்கு இம்முறை தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்ற முடியாமல் போனது மிகப் பெரிய ஏமாற்றத்தைப் கொடுத்துள்ளதாக பெரும்பாலான வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.
பீ.எப் மொஹமட்