![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/01/10/a24.jpg?itok=4tyjCFc2)
நியூஸிலாந்தில் நடைபெற்ற மகளிருக்கான உள்ளூர் முதல்தர ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 14 வயதே நிரம்பிய கேட் சாண்ட்லர் 5 விக்கெட்டை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் நியூஸிலாந்து மகளிர் முதல் தர (லிஸ்ட் ஏ) ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மிகக் குறைந்த வயதில் இந்த சாதனையை நிலைநாட்டியவர் என்ற பெருமையை கேட் சாண்ட்லர் பெற்றார்.
கென்டபெறி மகளிர் கழகத்துக்கு எதிராக ஹேக்லி ஓவல் விளையாடரங்கில் அண்மையில் நடைபெற்ற போட்டியில் வெலிங்டன் மகளிர் கழகம் சார்பாக கேட் சாண்ட்லர் 41 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தி தனது அணியின் வெற்றிக்கு வித்திட்டார். பாடசாலைக் கல்வியை தொடரும் கேட், இதற்கு முன்னர் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார். அந்த இரண்டு போட்டிகளில் தலா 10 ஓவர்களை விசிய கேட் சாண்ட்லர் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்கள் என்ற ஒரே பந்துவீச்சுப் பெறுதிகளைக் கொண்டிருந்தார்.
கேட் சாண்ட்லிரின் பந்துவீச்சின் உதவியுடன் கென்டபெறியை 46.1 ஓவர்களில் 155 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய வெலிங்டன் 32.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 156 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.