![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/01/24/a26.jpg?itok=w7V1s6MI)
இலங்கையில் முதன்முதலில் பகுதிநேர தொழில்முறை கால்பந்து விளையாட்டை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளில் ஒன்றாக, இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனம் கடந்த 20 ஆம் திகதி இணையதளத்தின் சூம் வழியாக சுப்பர் லீக் கழகங்களுடன் நிகழ்நிலைக் கலந்துரையாடல் ஒன்றை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
இந்நிகழ்நிலைக் கலந்துரையாடலில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் மருத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி லால் ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ,இலங்கையில் உதைபந்து விளையாட்டை மேம்படுத்துவதற்கு அமைச்சர் தனது முழு ஆதரவையும் உதவிகளையும் வழங்குவதாகக் குறிப்பிட்டார்.இலங்கையில் உதைபந்து விளையாட்டை தொழில்முறை நிலைக்கு உயர்த்துவதன் முக்கியத்துவத்தை விளக்கிக் கூறினார்.ஒரு சிறந்த சர்வதேச உதைபந்தாட்ட தரவரிசையையும் சர்வதேச அங்கீகாரத்தையும் நாம் பெற வேண்டுமாயின் நாம் எமது திறமைகளை காட்ட வேடிண்யுள்ளது எனவும் குறிப்பிடார்.
பகுதிநேர தொழில்முறை உதைபந்தைத் தவிர்ந்த நகரங்களை அடிப்படையாகக் கொண்டமற்றுமொரு தொழில்முறையிலான போட்டியொன்றையும் உருவாக்குவதே தனது தூரநோக்கு என்றும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலமாக அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் உதைபந்து விளையாட்டில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். இதன் விளைவாக பிராந்திய ரீதியாக நம் நாட்டில் உதைபந்தாட்ட விளையாட்டிற்கு பெருமதிப்பும் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.
நடைபெறவுள்ள சூப்பர் லீக் தொடருக்கான திகதிகளை இக்கலந்துரையாடலின் போது இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனம் அறிவித்தது.
அறிவிக்கப்பட்ட திகதிகள் வருமாறு;
17 பெப்ரவரி, 2021 –முன்பருவ முன்பான போட்டிகளின் ஆரம்பம்
10 மார்ச் , 2021 –முன்பருவம் நிறைவு.
17 ஏப்ரல், 2021 - சூப்பர் லீக் ஆரம்பம்
30 ஜூலை, 2021 - சூப்பர் லீக் 2021 பருவம் நிறைவு
தற்போதைய COVID-19 நிலைமையில் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு என்பன முன்னுரிமையளிக்கபட வேண்டிய விடயங்களாகும். எனவே, இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனம் சுகாதார அமைச்சு நிர்ணயித்த அனைத்து சுகாதார விதிமுறைகளையும் கடைபிடிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
திருகோணமலை குறூப் நிருபர்